Published:Updated:

"எப்பவும் இன்ஜினை சூடா வெச்சுக்கணும்" - 'நவம்பர் ஸ்டோரி' வெப்சீரிஸ் நடிகர் ஜானி பிரான்சிஸ்

நடிகர் ஜானி பிரான்சிஸ்

பசுபதி சாரோட பழைய படங்கள் பார்த்து அவரை காப்பி பண்ணல. நான் எனக்கு கொடுத்த குழந்தை இயேசு கதாபாத்திரத்தை தான் செஞ்சேன். அந்த கதாபாத்திரம் பின்னால் என்ன செய்யும்னு கூட எனக்கு தெரியாது.

"எப்பவும் இன்ஜினை சூடா வெச்சுக்கணும்" - 'நவம்பர் ஸ்டோரி' வெப்சீரிஸ் நடிகர் ஜானி பிரான்சிஸ்

பசுபதி சாரோட பழைய படங்கள் பார்த்து அவரை காப்பி பண்ணல. நான் எனக்கு கொடுத்த குழந்தை இயேசு கதாபாத்திரத்தை தான் செஞ்சேன். அந்த கதாபாத்திரம் பின்னால் என்ன செய்யும்னு கூட எனக்கு தெரியாது.

Published:Updated:
நடிகர் ஜானி பிரான்சிஸ்

லாக்டெளனில் வீட்டுக்குள்ளேயே முடங்கி பொழுதுபோக்கிக் கொண்டிருந்த அனைவருக்கும் ஹாட்ஸ்டார் அளித்த திரில்லர் விருந்தே ‘நவம்பர் ஸ்டோரி’. இந்திரா சுப்ரமணியன் இயக்கத்தில் தமன்னா, பசுபதி, விவேக் பிரசன்னா, ஜி.எம்.குமார் நடித்து கடந்த மே மாதம் ரிலீஸ் ஆகியிருந்தது நவம்பர் ஸ்டோரி. நல்லது கெட்டது எல்லாம் கடந்து சீரிஸ் மக்கள் மத்தியில் வெற்றி பெற, சின்ன வயது பசுபதி கேரக்டரில் நடித்த அறிமுக நடிகர் ஜானி பிரான்சிஸ் எல்லோராலும் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டார். அவரிடம் பேசினேன்.

‘நவம்பர் ஸ்டோரி'யில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

‘’என் நண்பர் ஒருத்தர் விகடன் எடுக்குற வெப்சீரிஸ்காக நடிகர்கள் தேவைனு ஒரு போட்டோ ஷேர் பண்ணார். அதில் இருந்த மெயில் ஐடிக்கு என்னுடைய புகைப்படங்களை அனுப்புனேன். சில நாட்கள்ல டைரக்டர் டீம் கிட்ட இருந்து போன் வந்தது. அதன் பிறகு ஆடிஷன்தான். எப்பவும் ஆடிஷன் போனா பயம் இல்லாமதான் இருப்பேன். ஆனா, ‘நவம்பர் ஸ்டோரி’ ஆடிஷன் போது என்னை காத்திருக்க வெச்சிருந்த அறையே எனக்கு பயத்தை வரவெச்சிடுச்சு. ரூம் ஃபுல்லா அவ்ளோ வொர்க் பண்ணி வெச்சிருந்தாங்க! ஒரு போர்ட் நிறைய கதையுடைய முடிச்சுகளை ஸ்கெட்ச் பண்ணி வெச்சுருந்தாங்க. முதல் ஆடிஷன்ல நடிச்சு இரண்டாவது ஆடிஷனுக்கு தேர்வானேன். இரண்டாவது ஆடிஷன்லதான் டைரக்டரைப் பார்த்தேன். ஒரு நாள் உதவி இயக்குநர் போன் பண்ணி நான் செலக்ட் ஆனதா சொன்னார். இந்த வாய்ப்பை எப்படியாவது சரியா பயன்படுத்திக்கணும்னு நினைச்ச அதே நேரம் இந்த கேரெக்டரை நம்மால பண்ணமுடியுமான்னு கொஞ்சம் பயமும் தொத்திக்குச்சு.

உங்க உடல் மொழிதான் கேரக்டருக்கு வலு சேர்த்தது... என்ன மாதிரி ஹோம் வொர்க் பண்ணீங்க?

ஜானி பிரான்சிஸ்
ஜானி பிரான்சிஸ்

‘’பாடி லாங்குவேஜ் மட்டும் இல்லாம பாவனைகள் எல்லாத்துக்கும் இயக்குநர் இந்திரா சார் தான் காரணம். எப்பவும் என்னை சுற்றி ஒரு வளையம் இருக்குற மாதிரி நினைச்சுக்குவேன். அதனால இறுக்கமான குறுகிய பாடி லாங்குவேஜ் கிடைச்சிடும். அந்த கேரக்டர் யாரையும் கண் பார்த்து பேசாது. கொஞ்ச நாள் வீட்ல இருந்த யாரையும் கண் பார்த்து பேசாமல் இருந்தேன்.

பசுபதி சாரோட பழைய படங்கள் பார்த்து அவரை காப்பி பண்ணல. நான் எனக்கு கொடுத்த குழந்தை இயேசு கதாபாத்திரத்தை தான் செஞ்சேன். அந்த கதாபாத்திரம் பின்னால் என்ன செய்யும்னு கூட எனக்கு தெரியாது. இந்திரா சார் சொல்லாம இருந்ததுதான் இவ்ளோ நல்லா வந்ததுக்கு காரணம்னு நினைக்கிறேன். பசுபதி சாரும் நானும் ஒருத்தரை ஒருத்தர் நிறைவு செஞ்சி இருக்கிற பாராட்டு எல்லாம் குழந்தை இயேசு கதாபாத்திரத்துக்குத்தான் சேரும்.’’

பசுபதி மாதிரி ஒரு அனுபவம் வாய்ந்த நடிகருடன் நடிக்கும்போது கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கும். உங்களுக்கு அவருடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

‘’பசுபதி சார் ரொம்ப அனுபவம் வாய்ந்தவர். அவர் ‘விருமாண்டி’ படத்தில் பண்ண கொத்தாளன் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். துரதிஷ்ட வசமா எனக்கும் பசுபதி சாருக்கும் ஒரே ஒருநாள்தான் ஒண்ணா ஷூட் நடந்தது. நான்தான் அவர்னு வெளிப்படுத்துற காட்சிக்கான படப்பிடிப்பு அன்னைக்குதான் அவரை பார்த்தேன். அது மிகவும் கஷ்டமான ஃபிரேம். பிரேதத்தோட வயித்துல இருந்து உறுப்புகளை வெளிய எடுத்து வெச்சிட்டு நிக்கும்போது கண் மட்டும் ஃபிரேம்ல வரணும். நிறைய டேக்ஸ் வாங்கியும் எனக்கு சரியா வரல. ஆனா, சார் ஒரே டேக்ல பண்ணாரு. அவர்கிட்ட அதிகமா பேசிக்க முடியல. ஆனா அவர் கூட வேலை செஞ்ச ஒரே நாள் நிறைய கத்துக்க முடிஞ்சது.’’

எப்படி நடிப்பு துறைக்குள்ள வரணும்னு ஆசை வந்தது?

ஜானி
ஜானி

‘’சின்ன வயசுல இருந்தே மேடை நாடகம், நடனம் பண்ணுவேன். அப்போ இருந்தே நம்மளை அங்கீகரிச்சு கைதட்டி பாராட்டுறது எனக்கு ரொம்ப பிடிக்கும். நடிப்பு மேல ஆர்வம் வந்ததுக்கு முக்கிய காரணம் கைதட்டல்கள்தான்.''

'நவம்பர் ஸ்டோரி'க்கு அடுத்து என்ன பண்ண போறீங்க?

’'நிறைய பேர் சேர்ந்து வேலை செய்யலாம்னு சொல்லியிருக்காங்க. எது நடக்குதோ நடக்கட்டும். எனக்குன்னு எந்த பிளானும் வச்சுக்கல. எப்பவும் இன்ஜினை சூடா வச்சுக்கறது முக்கியம். லாக்டெளன்ல அது கஷ்டமா இருக்கு. இப்போதைக்கு நிறைய படம் பார்த்துட்டு இருக்கேன். தனி ஆளா வீட்ல ஏதாவது கன்டன்ட் பண்ணலாமான்னு ஒரு யோசனை இருக்கு.''