கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

OTT கார்னர் - NOVEMBER STORY - SERIES - Disney+Hotstar

தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
News
தமன்னா

க்ரைம் எழுத்தாளராக, மறதிநோய் பாதிப்புள்ள வராக ஜி.எம்.குமார். எந்த நேரத்தில் என்ன செய்வாரோ என்ற பதைபதைப்பை ஏற்படுத்துகிறார்.

மறதி நோயால் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை இழந்துகொண்டிருக்கும் தந்தை, ஒரு கொலைவழக்கில் சிக்கவிருக்கும் நிலையில், அவரை எப்படி மீட்கிறாள் மகள் என்னும் கதையை வெப் சீரிஸாக விவரித்திருக்கிறது ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ‘நவம்பர் ஸ்டோரி.’

க்ரைம் நாவல் எழுத்தாளர் கணேசனுக்கு முதுமை காரணமாக மறதி நோய் ஏற்படுகிறது. அப்பாவின் மருத்துவச் செலவுக்காக, பூர்வீக வீட்டை விற்க முயல்கிறார் மகள் அனுராதா. விற்க நினைக்கும் வீட்டிலேயே ஒரு கொலை. கொலையான பெண்ணின் அருகில், நினைவுகள் ஏதுமின்றி அமர்ந்திருக்கிறார் எழுத்தாளத் தந்தை. போலீஸ் ஒருபுறம் துப்புத்துலக்க, மென்பொருள் பொறியாளரான அனுராதா ஒருபுறம் டெக்னிக்கலாக ஆராய, யார் கொலையாளியை நெருங்குகிறார்கள் என்பதே கதை. இதற்கிடையே நான்-லீனியராக நகரும் பிளாக்-ஒயிட் கடந்தகாலக் கதை. வெவ்வேறு கதைப்பின்னல்களை முன்வைத்து ஒரு சுவாரஸ்யமான த்ரில்லர் அனுபவத்தைத் தந்திருக்கிறது ‘நவம்பர் ஸ்டோரி.’

OTT கார்னர் - NOVEMBER STORY -  SERIES - Disney+Hotstar

தமிழ் ஓ.டி.டி தளத்துக்குப் புதிய நல்வரவு தமன்னா. வீடு விற்பதற்கான போராட்டம் ஒருபுறம், தந்தையின் மனநலச்சிக்கல்கள் இன்னொருபுறம், இத்துடன் புதிதாய் வந்துசேரும் கொலை குறித்த புதிர்கள் என ஒட்டுமொத்த வெப் சீரிஸையும் தாங்கிநிற்கும் முதன்மைக் கதாபாத்திரமான அனுராதாவாக, வெவ்வேறு உணர்ச்சிகளைச் சிறப்பாகப் பிரதிபலித்திருக்கிறார். ஓர் இயல்பான நடுத்தர வர்க்கத்துக்குப் பெண்ணைத் திரையில் பார்க்கும் உணர்வு. வெல்டன் தமன்னா!

க்ரைம் எழுத்தாளராக, மறதிநோய் பாதிப்புள்ள வராக ஜி.எம்.குமார். எந்த நேரத்தில் என்ன செய்வாரோ என்ற பதைபதைப்பை ஏற்படுத்துகிறார். இறுக்கமும் மர்மமும் நிறைந்த, சவப்பரிசோதனை மருத்துவராக பசுபதி. தொடக்கக்காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை நம்மை ஒரு பதற்றத்துக்கு உள்ளாக்கியதில் வெற்றிபெற்றிருக்கிறார் பசுபதி. காவல்துறை அதிகாரியாக வரும் அருள்தாஸ், தனக்குக் கிடைத்த சின்னச்சின்ன தடயங்களைக் கொண்டு புலனாய்வது சுவாரஸ்யம். தமன்னாவின் நண்பராக, குற்ற ஆவணக்காப்பகத்தில் டெண்டர் எடுத்துவிட்டு சிக்கல்களைச் சந்திப்பவராக விவேக் பிரசன்னா, பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் ஒரே காட்சியில் மீண்டும் மீண்டும் நடிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறார். மைனா நந்தினி, மதியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி கதைக்குப் பக்கபலமாக இருக்கின்றனர்.

OTT கார்னர் - NOVEMBER STORY -  SERIES - Disney+Hotstar

ஏழு எபிசோடுகளுக்கு ஒரு கொலை வழக்கையும் அதன் பின்கதையையும் இறுக்கிப் பிடிக்கவேண்டும், அதே சமயம் அதன் டெம்போ குறையவே கூடாது என சற்றே சவாலான ஒரு கயிற்றின் மேல் நடந்திருக்கிறார் இயக்குநர் இந்திரா சுப்ரமணியன். எல்லா எபிசோடுகளின் ஆரம்பத்திலும் விரியும், வசனங்களற்ற அந்தக் கறுப்பு-வெள்ளை ப்ளாஷ்பேக் காட்சிகள் அழகியலின் அடர்த்தியைக் கூட்டுகின்றன. அதேபோல் முன்பின்னாகக் காட்சிகள் மாற்றப்பட்டு, யார் கொலையாளி என்பதை யூகிக்கவிடாமல் பார்வையாளர் களுக்குச் சவாலாக மாற்றப்படும் உத்தி, கச்சிதம். அந்தவகையில் புதிய கதைசொல்லல் உத்தி மூலம் ஒரு த்ரில்லரை இயக்கியதில் வெற்றி கண்டிருக்கிறார் இந்திரா சுப்ரமணியன்.

நான்கு எபிசோடுகளில் கச்சிதமாகச் சென்ற கதை, இறுதி மூன்று எபிசோடுகளில் திசைவிலகியும் இழுத்தும் பயணிக்கிறது. குறிப்பாக கடைசி எபிசோடு வரை முன்கதை சொல்லிக்கொண்டிருப்பதும், பசுபதி - தமன்னா நீளமான போராட்டக் காட்சிகளும் ஒருகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகின்றன. கணேசன் ஏன் ஒவ்வொரு நவம்பர் 16 அன்றும் அந்த வீட்டிற்குச் செல்கிறார், கொலை நடந்த அன்று அவர் ஏன் அங்கு சென்றார், ஹைதராபாத் மாணவியின் மரணம் குறித்த தெளிவற்ற சித்திரிப்பு, மாணவி பாலியல் வன்முறையில் கொல்லப்பட்டார் என்று சவப்பரிசோதனை அறிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்துவிடுவார்களா என்று பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன. நகைச்சுவை என்ற பெயரில் சேர்க்கப்பட்ட காட்சிகள் நிறையவே சோதிக்கின்றன. குறிப்பாக அருள்தாஸ் தன் போலீஸ் சகாக்களுடன் நடத்தும் கலந்துரையாடல் காட்சி. விறுவிறுப்பாகக் களத்தில் இறங்காமல் இப்படித்தான் கூட்டம் சேர்த்து அரட்டை அடிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

இதற்கெல்லாம் சேர்த்து மேக்கிங்கில் நம்மை பிரமிக்கவைத்திருக்கிறார்கள். மிரள வைக்கும் கேமரா கோணங்கள், த்ரில் காட்சிகளுக்கு ஏற்ற இசை சேர்ப்பு, மார்ச்சுவரி போன்ற செட்டப்களுக்கு உழைத்த கலை இயக்கம், அசத்தலான எடிட்டிங் ஆகியவை உயர்தரக் கலை அனுபவத்தைத் தருகிறது. குறிப்பாக அந்தச் சிறுவன் தோன்றும் ப்ளாஷ்பேக் காட்சிகளில் ஒருவித அமானுஷ்யம் இழையோடுகிறது. சரண் ராகவனின் பின்னணி இசை பல இடங்களில் த்ரில் அறிந்து உழைத்திருக்கிறது. விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவு அதற்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

OTT கார்னர் - NOVEMBER STORY -  SERIES - Disney+Hotstar

வெப்சீரிஸ் என்றாலே பாலுறவுக்காட்சிகளும் கெட்டவார்த்தைகளும்தான் என்று நினைத்தால், அதை மாற்றிக்கொள்ளுங்கள். அவை எதுவுமில்லாத, சுவாரஸ்யமான ஒரு த்ரில்லர் அனுபவத்தைத் தருகிறது இந்த ‘நவம்பர் ஸ்டோரி.’