Published:Updated:

``அதோ அவர்களுக்காக தான்! - என்.டி.ராமராவ்

N.T. Rama Rao's Vintage Interview

திருப்பதில மொட்டை போட்டுட்டு, என்.டி.ஆரை கும்பிட்டுட்டு போய்ருக்காங்க..!

``அதோ அவர்களுக்காக தான்! - என்.டி.ராமராவ்

திருப்பதில மொட்டை போட்டுட்டு, என்.டி.ஆரை கும்பிட்டுட்டு போய்ருக்காங்க..!

Published:Updated:
N.T. Rama Rao's Vintage Interview

மாம்பலம் பசுல்லா ரோடு முனையில் ஒரு பங்களா. அதன் வாசலில் வழக்கம் போல இரண்டு டூரிஸ்ட் பஸ்கள். ஆந்திராவிலிருந்து வந்தவை. பஸ் நிறைய பளபளக்கும் மொட்டைத் தலைகள்! நேற்றுதான் திருப்பதியில் முடி இறக்கிக் கொண்டு வெங்கடேச பெருமானை தரிசித்து விட்டு அப்படியே நேரே சென்னை வந்து பிரபல ஆந்திர நடிகர் ராமராவைப் பார்க்க வந்திருக்கிறார்கள்.பல படங்களில் ராமராவை பகவான் பாத்திரங்களில் பார்த்ததால் அவர்களுக்கு அவரிடம் அப்படி ஒரு ‘பக்தி’!

N.T. Rama Rao's Vintage Interview
N.T. Rama Rao's Vintage Interview

ஷூட்டிங்குக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் அவர் வாசலில் காத்து நிற்கும் விசிறிகளை உள்ளே வரச் சொல்கிறார், வாசல் கூர்க்கா சிறுசிறு கும்பல்களாக உள்ளே அனுப்புகிறார். குவித்த கரங்களோடு அவர்கள், ராமராவை வணங்குகின்றனர். இவரும் இன்முகம் காட்டி அவர்களோடு சில வார்த்தைகள் பேசுகிறார். வந்தவர்களும் வைத்த விழி வாங்காது தெய்வமே பேசுவதைப் போல கேட்கின்றனர்! தங்கள் நிறை குறைகளைச் சொல்கின்றனர். குறைகளை சீட்டெழுதிக் கொண்டு வந்தவர்கள், அதை அவர் கையில் கொடுக்காது காலடியில் போடுகின்றனர்.அது அவர் கைக்கு வருகிறது. படித்து பதில் சொல்லி அனுப்புகிறார். நிறைந்த மனத்தோடு பக்தர்கள் திரும்பிப் போகிறார்கள்! “தினமும் இத்தனை பேர் உங்களைத் தரிசிக்க வருகிறார்களே, இவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று கேட்கிறோம்.தனது கனத்த சாரீரத்தில் பதில் கொடுக்கிறார். “இவர்களை நான் என் ரசிகர்களாக மதிப்பதில்லை. என் விருந்தினர்களாக மதிக்கிறேன். தினமும் அவர்களைப் பார்த்ததும்தான் என் தொழிலில் எனக்கு ஒரு அலாதி ஊக்கம் பிறக்கிறது. எந்த ஜென்மத்திலேயோ நான் செய்த புண்ணியம், இன்று இவர்கள் என்னிடம் அளவு கடந்த அன்பு செலுத்துகிறார்கள்.”

“சிலர் உங்களைக் கடவுளாகத் தொழுகிறார்களே...!”

“ஆம்! அந்த நேரங்களில் என் கண்களை மூடிக் கொண்டு ‘இறைவா, இத்தனையும் உன் பாதங்களில் சேரட்டும்’ என்று வேண்டிக்கொள்வேன்... என்னால் வேறு என்ன செய்ய முடியும்?”

“படப்பிடிப்பின் போது கடவுள் பாத்திரமேற்று நடிக்கும் நாட்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்?”

“அன்று நான் யாரோடும் அதிகம் பேசவே மாட்டேன். நான் அசைவமானாலும் அன்று முழுவதும் சைவமே சாப்பிடுவேன். என் சிந்தனையே கடவுளைப் பற்றி தான் இருக்கும்.”

N.T. Rama Rao's Vintage Interview
N.T. Rama Rao's Vintage Interview

“கடவுள் பாத்திரத்திற்கு என்று ஏதாவது புது மாதிரியாக நடிப்பீர்களா?”

“கடவுள் பாத்திரமென்றால் நான் நடிக்கவே மாட்டேன்! மற்ற கதாநாயகன் பாத்திரமென்றால் ஓடவேண்டும்... பாடவேண்டும்... சண்டை போட வேண்டும். சில சமயங்களில் ‘ஓவரா’கவும் நடிக்க வேண்டும். இது எதுவும் இல்லாமல்... நடிக்காமல்... அமைதியாக நிதானமாகப் பேசி... எதிரில் எதையும் பார்க்காமல், சூன்யத்தைப் பார்ப்பேன்...!..”

“அது எப்படி?”“நீங்கள் எதிரில் நிற்கிறீர்கள் என்றால், உங்களைப் பார்க்காமல் உங்கள் வழியே உங்களுக்குப் பின்னால் ஒரு பிம்பம் இருப்பதாகக் கற்பனை பணிக்கொண்டு அதைப் பார்ப்பது...”

“இது மிகவும் கஷ்டமல்லவா?”

“இது ரொம்ப சுலபம்! கண்களுக்கு அப்படி ஒரு பயிற்சி அளித்தால் போதும்... இதோ பாருங்கள், இப்படித்தான்...” என்று கரங்களைக் குவித்துக் கொண்டு எங்கோ பார்த்துக் காட்டுகிறார்.

“கடவுள் பாத்திரமேற்று நடிக்கும் நாட்களில் சிகரெட்டாவது பிடிப்பீர்களா?”

“அன்று அல்ல, என்றுமே நான் சிகரெட் பிடிக்கமாட்டேன். எனக்குத் தெரிந்தவரை என்னிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்றே நினைக்கிறேன்.”என்.டி.ராமராவின் தோற்றத்தைப் பார்த்தாலே அவரிடம் எந்த கெட்ட பழக்கமும் இருக்காது என்று தெரிந்துவிடும். ஆஜான பாகுவான சரீரம்!தினமும் காலை மூன்று மணிக்கே எழுந்து விடுகிறார் ராமராவ் ஐந்து மணிவரை உடற்பயிற்சி செய்கிறார். அதில் பல யோகாசனங்களும் அடக்கம். ஐந்து மணிக்கு டான்ஸ் மாஸ்டரை வரச்சொல்லி அரை மணி நேரம் டான்ஸ் பயிற்சியும் செய்கிறார்.

N.T. Rama Rao's Vintage Interview
N.T. Rama Rao's Vintage Interview

“நாட்டியப் பயிற்சி எதற்கு?” 

“நாட்டியம், தாளம் இவற்றைப் பற்றி கொஞ்சம் - தெரிந்து வைத்துக் கொண்டால் நல்லது. உதாரணமாக நடப்பதிலேயே எத்தனை வகைகள் தெரியுமா? மேலும் நாட்டியம் தெரிந்து கொண்டால், படப்பிடிப்பிற்கும் செளகரியமாக இருக்கும்...!"

“கடவுள் பாத்திரங்களை ஏற்று நடிக்கும் நீங்கள் அடிக்கடி திருப்பதி முதலிய க்ஷேத்திரங்களுக்குப் போய் வருகிறீர்களா?

“எங்கே முடிகிறது? சமயம் கிடைத்தபோதுதான் போகிறேன்... அங்கு போனாலும் எக்கச்சக்கமான ரசிகர்கள் வேறு வந்து விடுகிறார்கள்!”பாவம்! உண்மைதானே! நடிக நடிகைகள் தங்கள் மனசாந்திக்கு கோவிலுக்கு வந்தால், கடவுளைவிட அவர்கள்தான் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகி விடுகிறார்கள்!“எனக்கு அடிக்கடி கோவிலுக்குப் போக வேண்டும் என்ற ஆசையே இல்லை...!”ராமராவ் ஒரு நாத்திகவாதியோ என்ற சந்தேகம் எழும் முன், அவரே சொல்கிறார்.“கடவுள் எங்கும் இருக்கிறார். இங்கும் இருக்கிறார்...”- தன் மார்பைத் தட்டிக் காட்டுகிறார். “ஒவ்வொரு மனிதனிடமும் கடவுள்இருக்கிறார். மேலும் நான் செய்யும் தொழிலையே கடவுளாக மதிக்கிறேன்....!” என்கிறார் ராமராவ்.ஆச்சரியப்படுகிறோம்!

N.T. Rama Rao's Vintage Interview
N.T. Rama Rao's Vintage Interview

''நான் மட்டுமல்ல, எல்லோரும் அப்படி நினைத்தால் தொழில் அதிகரிக்கும். நாட்டு வளம் கூடும் என்று நினைக்கிறேன். எனக்கு டயம் என்றால் டயம் தான்! ஏழு மணிக்கு ஷூட்டிங் என்றால் அங்கு ஏழு மணிக்கு ரெடியாக இருப்பேன். ஒரு மாதத்தில் ஒரு கம்பெனிக்காக ஆறு நாட்கள் நடிக்க வேண்டும் என்றால் ஆறு நாட்கள்தான் நடிப்பேன். அதையும் தவறாமல், மாற்றாமல் நடிப்பேன்... லேட்டாக யாராவது வந்தால் எனக்குப் பிடிக்காது... இந்த ஒரு தொழிலில்தான் அப்படி... ஏனோ தெரியவில்லை. ஏழு மணி என்றால் சிலர் ஒன்பதுக்கும் பத்துக்கும் வருகிறார்கள். அப்படி அடிக்கடி வருகிறவர்கள் ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருந்தால், தினமும் லேட்டாக வர முடியுமா? இரண்டு நாட்கள் பார்ப்பார்கள்; மூன்றாம் நாள் ‘மெமோ’ கொடுப்பார்கள். நான்காம் நாள் “எக்ஸ்பிளநேஷன் கேட்பார்கள்... கடைசியில் வேலையே போய்விடும்..!” "சென்னை அரசாங்க பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பாஸ் செய்து, ஸப்ரிஜிஸ்ட்ராராக பணியாற்றியவர் அல்லவா ராமராவ். ‘மெமோ - எக்ஸ்பிளநேஷன்’ எல்லாம் பேச்சில் சரளமாக வருகின்றன!

N.T. Rama Rao's Vintage Interview
N.T. Rama Rao's Vintage Interview
காட்சி தரும் ராமராவ்... காலில் விழும் `பக்தர்கள்'!

அரசாங்கப் பணியை விட்டு விட்டு படங்களில் நடிக்கத் துவங்கினார். இது வரை சுமார் 185 படங்களில் நடித்துவிட்டார். பல படங்கள் சொந்தமாக எடுத்திருக்கிறார். ஆறு படங்களுக்கு கதை-திரைக்கதை எழுதி டைரக்டும் செய்திருக்கிறார்.ராயலசீமா பஞ்சத்திற்கு, ஆந்திர போலீசார் குடும்பத்திற்கு, புயல் நிவாரணத்திற்கு, தேசிய பாதுகாப்பு நிதிக்கு-போன்ற பல நல்ல காரியங்களுக்கு லட்ச லட்சமாகத் திரட்டிக் கொடுத்திருக்கிறார் ராமராவ். “எனக்குத் தேவையான அளவு செல்வம் இருக்கிறது. திருப்தியாக வாழ்கிறேன்...!'

'பின், ஏன் படங்களில் தொடர்ந்து நடிக்கிறீர்கள்?''

“வாசலைப் பாருங்கள். அதோ அவர்களுக்காகத்தான்” என்றார் ராமராவ். பங்களா வாசலைப் பார்க்கிறோம். அங்கு வேறு பல டூரிஸ்ட் பஸ்களில் வந்த அவரது ரசிகர்கள் அவரைப் பார்க்க குழுமியிருக்கின்றனர். கடமையே கண்ணாக மதிக்கும் என். டி. ராமராவும் அவர்களுக்கு காட்சி தர எழுந்திருக்கிறார்.  

பேட்டி: பாலா

(28.12.1969 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)