சினிமா
தொடர்கள்
Published:Updated:

O2 - சினிமா விமர்சனம்

O2 - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
O2 - சினிமா விமர்சனம்

முதல்காட்சி தொடங்கி இறுதிவரை மொத்தக் கதையையும் தாங்கி முன்னேறும் ரோல் நயன்தாராவுக்கு

‘இழப்பதற்கு ஏதுமில்லை’ என்கிற நிலையில் உயிர்வாழும் பெருமுயற்சி மனிதர்களை எந்த எல்லைக்கும் கொண்டுசெல்லும் என்பதைச் சொல்லும் படமே இந்த O2.

தாவரவியலாளரான நயன்தாராவின் ஒரே மகனுக்கு சராசரி மனிதர்களைப் போல இயல்பாய் சுவாசிக்க முடியாது. மகன் உயிர் பிழைத்திருக்க எந்நேரமும் ஆக்சிஜன் சிலிண்டரின் துணை தேவையென்பதால் அவனைக் கண்ணுங்கருத்துமாய்ப் பார்த்துக்கொள்கிறார். உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்தால் அவனை குணப்படுத்தலாம் என மருத்துவர்கள் சொல்ல, அதற்காக கோவையிலிருந்து கொச்சிக்குப் பேருந்தில் பயணிக்கிறார். மலைப்பாதையில் பயணிக்கும் பேருந்து நிலச்சரிவில் சிக்கிக்கொள்ள, பல அடி ஆழத்தில் புதையுண்டுபோகிறார்கள் அத்தனை பேரும். சுற்றிலும் மண்மூடிய நிலையில் உயிர் பிழைத்திருக்க எல்லாருக்கும் ஆக்சிஜன் தேவை. காற்றில் கொஞ்சம் கொஞ்சமாய் ஆக்சிஜன் குறைய, எல்லாரின் கண்களும் சிறுவனின் ஆக்சிஜன் சிலிண்டர் மேலே. தாயாய் தன் மகனைக் காக்க வேண்டிய பெரும்பொறுப்பு நயன்தாராவிடம். தாய்மையா, உயிர் பிழைக்கும் எத்தனமா... எது வென்றது என்பதே மீதிக்கதை.

O2 - சினிமா விமர்சனம்

முதல்காட்சி தொடங்கி இறுதிவரை மொத்தக் கதையையும் தாங்கி முன்னேறும் ரோல் நயன்தாராவுக்கு. பாரத்தைப் பங்கிட்டுக்கொள்ள வேறு அனுபவம் வாய்ந்த நடிகர்கள் இல்லாத நிலையில் ஒற்றையாளாய் அனாயாசமாய் படத்தைத் தூக்கிச் சுமக்கிறார். அவருக்கும் ரித்விக்கிற்குமான கெமிஸ்ட்ரியே படத்தின் பெரும்பலம். ரித்விக்கும் வயதுக்கு மீறிய பொறுப்புணர்வோடு தன் திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்.

ஆடுகளம் முருகதாஸ், ரிஷிகாந்த், ஆர்.என்.ஆர் மனோகர் ஆகியோரின் நடிப்பு மூலம் தொடக்கத்தில் நமக்குள் தொற்றிக்கொள்ளும் பதற்றம் போகப் போக ஒரேமாதிரியான நடிப்பால் காணாமல்போகிறது. தேர்ந்த கலைஞரான ஜாபர் இடுக்கிக்கும் பெரிதாய் வெளி இல்லை. காவல்துறை அதிகாரியாய் வரும் பரத் நீலகண்டன் இன்னும் கொஞ்சம் மிரட்ட முயற்சி செய்திருக்கலாம்.

ஒரே இடத்தில் சுற்றிவரும் திரைக்கதையை முடிந்த அளவிற்கு விறுவிறுப்பாய்க் காட்டி ஓரளவிற்கு த்ரில்லைத் தக்கவைக்கிறார் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன். சதீஷ் குமாரின் கலை ஒருங்கிணைப்பும் அதற்கு உதவி செய்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை ஏமாற்றமே.

O2 - சினிமா விமர்சனம்

இதற்கு முன்னர் தமிழ்சினிமா பார்த்திடாத கதைக்களத்தைக் கண்முன் கொண்டுவந்த இயக்குநர் ஜி.எஸ் விக்னேஷின் முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் முதல்பாதியளவிற்கு இரண்டாம்பாதி திரைக்கதையில் முனைப்பு காட்டாமல்விட்டிருப்பதால் ஒரேமாதிரியான காட்சிகள் அலுப்பூட்டுகின்றன.

வில்லன் கதாபாத்திரத்தின் தெளிவற்ற கதாபாத்திர வரைவு தொடங்கி இறுதிக்காட்சியில் நிகழும் ‘மேஜிக்’கில் மிஸ்ஸாகும் லாஜிக் வரை இடறல்களும் இல்லாமலில்லை.

தமிழ்சினிமாவைப் புதியதொரு கோணத்தில் சுவாசிக்க வைக்க முயன்றிருக்கும் O2 குழுவினருக்கு ஓரளவுக்கே வெற்றி!