சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

Oh மணப்பெண்ணே! - சினிமா விமர்சனம்

ஹரீஷ் கல்யாண் - பிரியா பவானிசங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹரீஷ் கல்யாண் - பிரியா பவானிசங்கர்

ஹரீஷின் காதல் தோல்வியை இயக்குநர் சித்திரித்திருக்கும் விதமும் அரதப்பழசு.

நட்பு - காதல் - திருமணம் என்கிற வழக்கமான ரூட்டில் அப்படியே ரிவர்ஸ் கியரில் பயணித்தால் அதுதான் இந்த `ஓ மணப்பெண்ணே.'

மாப்பிள்ளை - பெண் பார்க்கும் படலத்தில் யதேச்சையாகச் சந்தித்துக்கொள்கிறார்கள் ஹரீஷ் கல்யாணும் பிரியா பவானிசங்கரும். இருவரும் தனியே பேசிக்கொள்வதற்கு நேரம் வாய்க்க, அவரவர் வார்த்தைகளிலேயே நம் முன் விரிகின்றன அவர்களின் வாழ்க்கைகள். இருவருக்கும் பொதுப்புள்ளியாய் உணவுமீதான காதல் இருக்கிறது. அதுவே அவர்களுக்கு இடையில் நட்பு உருவாகவும் காரணமாகிறது. அந்த நட்பு அடுத்தடுத்து எடுக்கும் பரிமாணங்கள்தான் மீதிக்கதை.

நடுத்தர வர்க்கத்துப் பையனை அப்படியே திரையில் வார்த்தெடுத்ததுபோல இருக்கிறார் ஹரீஷ் கல்யாண். அதனாலேயே இப்படியான கதைகளில் அவரால் எளிதாகப் பங்களிக்க முடிகிறது. ஆனாலும் அதிகம் ஈர்ப்பது பிரியா பவானிசங்கர்தான். குட்டிக் குட்டி ரியாக்‌ஷன்களைப் படம் முழுக்க வெளிப்படுத்தி `ஓ மணப்பெண்ணே'வைத் தாங்கி மிளிர்கிறார்.

நீண்ட இடைவேளைக்குப் பின் திரையில் வேணு அரவிந்த். பார்ப்பதற்கு ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும் அவருக்கான காட்சியமைப்புகள் வழக்கமானதாகவே இருக்கின்றன. நண்பராக வரும் அன்புதாசன் ஓரிரு இடங்களில் சிரிக்க வைக்கிறார். மற்றபடி ஜேஜே எனக் கூட்டத்தில் வரும் யாருமே தனியாய் முத்திரை பதிக்கவில்லை.

விஷால் சந்திரசேகரின் இசையில் ‘போதை கணமே' மயக்குகிறது. துள்ளலான பின்னணி இசையுமே கவர்கிறது. கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவில் எல்லாக் காட்சிகளுமே பளிச்.

தெலுங்கு ஒரிஜினலில் இருந்ததை வசனம் உட்பட அப்படியே தமிழ் ரீமேக்கிற்குக் கடத்தியதில் ரிஸ்க் குறைவுதான் என்றாலும் ஒருவித திணிக்கப்பட்ட செயற்கைத்தனம் நெருடுகிறது, அதுவும் முதல் காட்சியிலிருந்தே! ஹரீஷும் பிரியாவுமே தங்கள் நடிப்பால் இந்தக் குறையை ஓரளவிற்குச் சரி செய்கிறார்கள்.

Oh மணப்பெண்ணே! - சினிமா விமர்சனம்

ஹரீஷின் காதல் தோல்வியை இயக்குநர் சித்திரித்திருக்கும் விதமும் அரதப்பழசு. `பொண்ணுங்கன்னா இப்படித்தான்' எனத் தமிழ்சினிமா பாடும் அதே பழையபாட்டு. எம்.பி.ஏ கோல்டு மெடலிஸ்ட்டான ஒருவருக்கு ஹீரோ சொல்லும் அடிப்படையான ஐடியாக்கள் கூடவா தோன்றியிருக்காது? வெறும் ஜாதகத்தை மட்டுமே நம்பி ஒருவர் தன் பெண்ணை, வெட்டியாகச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவருக்குக் கொடுக்க முன்வருவாரா என ஏகப்பட்ட கேள்விகள். ஆனாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு நல்லுணர்வு சினிமாவாக மட்டும் இருந்தால் போதும் என அடுத்தடுத்து நகரும் ஒரே காரணத்தால் படம் தப்பித்துவிடுகிறது.

Oh மணப்பெண்ணே! - சினிமா விமர்சனம்

ஆந்திர மசாலாவை அப்படியே சேர்க்காமல் தமிழ்மண்ணுக்கேற்றவாறு மாற்றியிருக்கலாம்.