Published:Updated:

``விஜய் சேதுபதி எனக்கு கடவுளாதான் தெரிஞ்சார்?" - `ஓ மை கடவுளே' இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து

அஷ்வத் மாரிமுத்து

`ஓ மை கடவுளே' இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பேட்டி!

``விஜய் சேதுபதி எனக்கு கடவுளாதான் தெரிஞ்சார்?" - `ஓ மை கடவுளே' இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து

`ஓ மை கடவுளே' இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பேட்டி!

Published:Updated:
அஷ்வத் மாரிமுத்து

வாழ்க்கையில் பெரும் பிரச்னையில் சிக்கி மீண்டு வர வழி தெரியாமல் கலங்கிநிற்கும்போது `இவையெல்லாம் கனவு மாதிரி காணாமல் போயிட்டால் நல்லா இருக்கும்' என நாம் எல்லோருமே யோசிப்போம். அப்படி நம் வாழ்க்கையை ரீஸ்டார்ட் செய்து முதல் இன்னிங்ஸில் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டு, சிக்கல்களில் சிக்கிக்கொள்ளாமல் வாழ்க்கையை நமக்கேற்ற மாதிரி மாற்றிக்கொள்ள வாய்ப்பு கிடைத்தால்... இதுதான் 'ஓ மை கடவுளே'. நட்பு, காதல், இழப்பு ஆகியவற்றை ஃபேன்டஸி கலந்து சொல்லி தன் முதல் படத்திலேயே கோலிவுட்டுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. தான் யார், `ஓ மை கடவுளே' பட அனுபவம், அடுத்த திட்டம் எனப் பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``அஷ்வத் மாரிமுத்து யார்... சினிமாவுக்குள் எப்படி வந்தார்?"

``அப்பாவுக்கு சொந்த ஊர் பட்டுக்கோட்டை. ஆனா, நான் சென்னையில்தான் வளர்ந்தேன். யார்கிட்டேயும் அசிஸ்டென்ட்டா இல்லை. நாளைய இயக்குநர் மூணாவது சீஸனுடைய ஃபைனலிஸ்ட் நான். ஃபைனல்ல எல்லோரும் என் படம் நிச்சயமா மூணு இடங்கள்ல ஒரு இடத்தை பிடிச்சுடும்னு எதிர்பார்த்தாங்க. ஆனால், சில குழப்பங்களால் நான் வெறும் கையோடதான் வீட்டுக்குப் போனேன். அப்போ வெற்றிமாறன் சார் என்னைப் பார்த்து, `இந்தப் பையன் நல்லா ப்ராக்டீஸ் பண்ணா தமிழ் சினிமாவுல நல்ல ரைட்டரா வருவான்'னு சொன்னார். அந்த வார்த்தையை மட்டும் மனசுல வெச்சுக்கிட்டு ரொம்ப வருஷம் எழுதுறதுக்கு மட்டும் ப்ராக்டீஸ் பண்ணி எழுதினதுதான் `ஓ மை கடவுளே'. `ரெமோ' பாக்யராஜ் கண்ணன், `8 தோட்டாக்கள்' ஶ்ரீகணேஷ், `குரங்கு பொம்மை' நித்திலன், `காளிதாஸ்' ஶ்ரீ செந்தில்னு எங்க டீம்ல எல்லோரும் படம் பண்ணிட்டாங்க."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``இந்தக் கதையைத்தான் உங்க முதல் படமா பண்ணணும்னு நினைச்சீங்களா?"

அஷ்வத் மாரிமுத்து
அஷ்வத் மாரிமுத்து

``ஆமா. ஷார்ட் ஃபிலிம் பண்ணும்போதிலிருந்தே அசோக் செல்வன் எனக்கு நல்ல நண்பன். அவன்தான் இந்தக் கதைக்கு முதல் சாய்ஸ். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்தக் கதையை தயாரிப்பாளர்கள்கிட்ட சொல்லும்போது, `இது ரொம்ப அட்வான்ஸா இருக்கு. இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு பண்ணாதான் ஓடும்'னு சிலரும் `அசோக் வேண்டாம், வேற ஹீரோ வெச்சு பண்ணலாம்'னு சிலரும் சொன்னாங்க. சிலர் முதல் ஷாட் பத்தி சொல்லும்போதே நிறுத்த சொல்லிட்டு ஃபைட், வெட்டுக்குத்து எல்லாம் இருக்கானு கேட்டாங்க. படத்துல `மக்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு புராடக்ட்டை கொடுக்கணும்னா அது முதல்ல நமக்கு பிடிச்சிருக்கணும்'னு ஒரு வசனம் வரும். அது இந்தப் படத்துக்கு பொருந்தும். எனக்கு ஒரு கேர்ள் ஃபிரெண்ட் இருந்தாங்க. அவங்க இப்போ எனக்கு எக்ஸ் கேர்ள் ஃபிரெண்டாகிட்டாங்க. வாழ்க்கையில கொஞ்சம் அடி வாங்கின பிறகு, வேற ஏதாவது கதை பண்ணலாம்னு யோசிச்சேன். ஆனா, `இந்தக் கதைதான் உன் முதல் படமா இருக்கணும்'னு சொல்லி என்கரேஜ் பண்ணது அவங்கதான்."

``உங்க வாழ்க்கையில் இருந்த மீரா அக்கா யார்... அவங்களை உங்க கேர்ள் ஃபிரெண்ட் சந்திச்சிருக்காங்களா?"

``மீரா அக்கா மாதிரி என் லைஃப்ல யாருமில்லை. என் வாழ்க்கையில இருந்த ஒரே பொண்ணு என் எக்ஸ் கேர்ள் ஃபிரெண்ட்தான். படத்துல வந்த மீரா அக்கா வாணி போஜனை மீட் பண்ணாங்க. எங்க டீம் கூடதான் அவங்களும் படம் பார்த்தாங்க. படத்துல பார்த்த லவ், ஃபீலிங்ஸ், எமோஷன் எல்லாம் மக்களுக்குப் பிடிச்சிருக்குன்னா அதுக்கு காரணம் என் லைஃப்ல நடந்த விஷயங்கள். அழகான எமோஷன் நம்ம அனுபவிக்காம வரவே வராது. நம்ம லைஃப்ல செகண்ட் சான்ஸ் கிடைச்சா எப்படி இருக்கும்ங்கிறது எல்லா மனுஷங்களுடைய ஏக்கம். செகண்ட் சான்ஸ் கிடைக்கும்போதுதான் ரியாலிட்டி என்னனு புரிஞ்சுப்போம். இந்த லைஃப் நல்லாயில்லைன்னு அந்த லைஃபுக்கு போனோம். ஆனா, அந்த லைஃபை ஒப்பிடும்போது பழைய லைஃப்தான் நல்லாயிருக்கு. அதனுடைய அருமையைப் புரிஞ்சுக்காம இருந்திருக்கோம்னு புரியுறதுதான் படம். அதைத்தான் ஃபேன்டஸி கலந்து நான் ஆசைப்பட்ட விஷயங்களைச் சேர்த்து படமா எடுத்திருக்கேன்."

``அசோக் செல்வனைத் தவிர மற்ற நடிகர்கள் யாரும் உங்களுடைய முதல் சாய்ஸா இருந்திருக்க வாய்ப்பே கிடையாதுல?"

ரித்திகா சிங் - அஷ்வத் மாரிமுத்து
ரித்திகா சிங் - அஷ்வத் மாரிமுத்து

``நிச்சயமா வாய்ப்பில்லை. புரொடக்‌ஷனுக்குள்ள போகும்போதே அனு கேரக்டருக்கு `நூடுல்ஸ் மண்டை' ரித்திகாதான் வேணும்னு முடிவு பண்ணிட்டோம். அவங்களுக்கும் கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. ரொம்ப அப்பாவித்தனமான பொண்ணு. படம்தான் முக்கியம், என்னுடைய பர்சனல் தேவைகள் எல்லாம் அடுத்துதான்னு நினைக்கிற பொண்ணு. வாணி கேரக்டருக்கு நிறைய ஹீரோயின்கள்கிட்ட பேசினோம். ஆனா, அவங்களுக்கு `மீரா அக்கா'னு வர்றதுல உடன்பாடு இல்லை. அப்புறம் படத்துக்குள்ள வந்தவங்கதான் வாணி போஜன். இந்தக் கதை எங்களுக்குள்ள ஒரு நல்ல வேவ் லென்த்தை உருவாக்கி எல்லோரையும் ஃபிரெண்டாக்கிடுச்சு. எல்லோரும் கதைக்கு ரொம்ப உண்மையா இருந்தாங்க. இதுல சில பேர் வெற்றியைப் பார்த்து அப்புறம் அடி வாங்கினவங்க, சிலர் வெற்றியைப் பார்க்காதவங்க. அதனால இந்தக் கதை அவங்களை நிரூபிச்சு அடுத்தகட்டத்துக்கு கூட்டிட்டிப் போகும்னு எல்லோரும் நம்புனாங்க. அது நடந்திருக்குனு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு."

``விஜய் சேதுபதிகிட்ட கதை சொன்ன மொமன்ட்... கடவுள் கேரக்டர்னு சொன்னவுடன் என்ன ரியாக்ட் பண்ணார்?"

``படத்துடைய ஷூட்டிங் ஆரம்பிச்ச பிறகுதான், அசோக் மூலமா அவரை மீட் பண்ணவே போனேன். டாய்லெட் சீன் சொல்லும்போது சிரிச்சுட்டு, `இதுக்கு செகண்ட் ஆஃப்ல எமோஷனல் கனெக்ட் இருந்தால்தான் வொர்க் அவுட்டாகும்'னு சொன்னார். அப்புறம் செகண்ட் ஆஃப்ல எம்.எஸ்.பாஸ்கர் சார் பேசுற சீனை போட்டுக்காட்டினதைப் பார்த்துட்டு, `சூப்பர்டா. இந்த நியாயப்படுத்துதல்தான் கதைக்கு வேணும். நான் நிச்சயம் பண்றேன்'னு சொன்னார். நம்மளை சுத்தி இருக்கிறவங்களும் வளரணும்னு நினைக்கிற மனுஷன். எனக்கு அவர் கடவுளாதான் தெரிஞ்சார். அவர்கிட்ட உங்களுக்கு கடவுள் கேரக்டர்னு சொன்னவுடன் அவ்ளோ சந்தோஷமாகிட்டார். அவருக்கு ரொம்ப நாளா கடவுளா நடிக்கணும்னு ஆசை இருந்திருக்கும்போல. அவருடைய போர்ஷன் எல்லாம் ஒரே நாள்லதான் எடுத்தோம். படம் பார்த்துட்டு `லவ் யூ டா. வீட்ல எல்லோரும் படம் பார்த்துட்டு ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்னாங்க. என் மனைவி, அம்மானு எல்லோரும் நல்லா என்ஜாய் பண்ணாங்க'னு சொன்னார்."

``கெளதம் மேனன் வரும் சீனை இயக்கும்போது ரொம்ப பதற்றப்பட்டீங்களாமே!"

வாணி போஜன் - கெளதம் மேனன் - அஷ்வத் மாரிமுத்து
வாணி போஜன் - கெளதம் மேனன் - அஷ்வத் மாரிமுத்து

``ஆமா. கால் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு. கெளதம் சாருடைய பெரிய ரசிகன் நான். என் வாழ்க்கையில் அவர் படங்களுடைய தாக்கம் அதிகம். `வாரணம் ஆயிரம்' படத்தைப் பார்த்துட்டு ஃபாரினுக்கு போய் லவ் சொல்லியிருக்கேன். `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துல வர்ற மாதிரி நான் இயக்கின முதல் படத்தை என் எக்ஸ் கேர்ள் ஃபிரெண்டோட சேர்ந்து பார்த்தேன். இந்தப் படத்துடைய டைட்டில் கார்டுல முதல் பெயரே அவர் பெயர்தான் இருக்கும். படம் பார்த்துட்டு என்கிட்ட, `என்னை மறுபடியும் லவ் படம் எடுக்கணும்னு தோண வெச்சிருக்குடா'னு சொன்னார். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. என் எக்ஸ் கேர்ள் ஃபிரெண்ட் அவர்கிட்ட, `உங்க மேல அவன் பைத்தியமா இருக்கான் சார். உங்களாலதான் அவன் என்னை பார்க்க ஃபாரின் வந்தான்'னு சொன்னப்போ, `I am very sorry for that'னு சொல்லி சிரிச்சார். நான் பார்த்து ரசிச்ச ஒருத்தருக்கு ஆக்‌ஷன் கட் சொன்னதைப் பெரிய கெளரவமா நினைக்கிறேன்."

``உங்களுடைய நண்பன், தயாரிப்பாளர், ஹீரோனு அசோக் செல்வனுக்கு இந்தப் படத்துல நிறைய முகங்கள் இருக்கு. இந்த வரவேற்பு பார்த்துட்டு என்ன சொன்னார்?"

``செம சந்தோஷத்துல இருக்கான். எட்டு வருஷத்துக்கு முன்னாடி, `நீ எவ்ளோ அழகா நடிப்பனு மக்களுக்கு எடுத்துட்டுப்போற ஆள் நானாதான் இருப்பேன்'னு சொல்லியிருந்தேன். அது நடந்திருக்கு.`நீ சொன்னா மாடியில இருந்துகூட குதிப்பேன்'னு சொல்ற மாதிரி ஃபிரெண்ட் அவன் எனக்கு. `அவன் என்னை அவ்ளோ நம்புறானே, அவனுக்கு நல்ல படம் தரணும்'னு நினைக்கிறவன் நான். எங்க ரெண்டு பேருக்குள்ள இருந்த நம்பிக்கைதான் இந்தளவுக்கு படம் வொர்க் அவுட்டாகக் காரணம்."

``விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரமேஷ் திலக்னு `சூது கவ்வும்' டீம் உருவானது எப்படி?"

அசோக் செல்வன் - அஷ்வத் மாரிமுத்து
அசோக் செல்வன் - அஷ்வத் மாரிமுத்து

``இது எதார்த்தமா அமைஞ்சதுதான். ரமேஷ் திலக் கேரக்டருக்கு முதல்ல யோகிபாபுவை நடிக்க வைக்கலாம்னு பிளான் பண்ணோம். அவர் வெவ்வேற படங்கள்ல பிஸியா இருந்தார். அப்புறம்தான், ரமேஷ் திலக் பெயர் வந்தது. ஒருநாளுக்கு முன்னாடிதான் அவரை கமிட் பண்ணோம். இது `சூது கவ்வும்' படத்தை ஞாபகப்படுத்துகிறது என்பதே ரொம்ப அழகா இருக்கு."

``நம்ம வாழ்க்கையை ரீ ஸ்டார்ட் பண்ணா நல்லாயிருக்குமேனு நினைச்சதுண்டா?"

``என் வாழ்க்கையில ரீ ஸ்டார்ட் பட்டன் கிடைச்சா அதை யாருக்கும் கிடைக்காத மாதிரி எங்கேயாச்சும் தூக்கிப் போட்டிருவேன். ரீஸ்டார்ட் பட்டன் கிடைச்சா எப்படி இருக்கும்னு எல்லோரும் யோசிப்போம். ஆனா, இன்னையில இருந்து வாழ்க்கையை எப்படி அழகா எடுத்துகிட்டு போகலாம்னு யோசிக்கணும்னுதான் படத்துலயே சொல்லியிருக்கேன்."

``முன்னாள் கேர்ள் ஃபிரெண்ட்னு சொல்றீங்க. ஆனா,அவங்க உங்களுடனே பயணிக்கிறாங்க போல..."

``படத்துல பார்க்குற அசோக் - ரித்திகாதான் நானும் அவளும். பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ். ரியல் லைஃப்ல அவள்தான் அசோக். நான்தான் ரித்திகா."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism