சினிமா
தொடர்கள்
Published:Updated:

“பாரதிராஜா கிள்ளி அழவெச்சார்!”

ரோகிணி
பிரீமியம் ஸ்டோரி
News
ரோகிணி

என் வயசுக்கு மீறின கதாபாத்திரத்தை நான் சிறப்பா பண்ணுனதுக்குக் காரணம், பாரதிராஜா சார்தான். அவர் கத்துக்கொடுத்ததை அப்படியே பண்ணினேன்

இயக்குநர் பாரதிராஜாவின் ‘ர' வரிசை கதாநாயகிகளில் ‘நிழல்கள்' ரோகிணிக்கும் ஓர் இடமுண்டு. ‘பூங்கதவே தாழ்திறவாய்...' பாடலில் செம ஹோம்லியாகப் புன்னகைக்கும் ரோகிணி, பின்னர் சில படங்களில்தலைகாட்டிவிட்டு, திருமணமாகி அமெரிக்கா பறந்தார். இடையிடையே டிசம்பர் சங்கீத சீசனுக்காக சென்னை வந்து செல்வார். இப்போது தன் நடனப் பள்ளி மாணவியின் நாட்டிய அரங்கேற்றத்திற்காக வந்திருந்தவருடன் பேசினேன்.

“இது எங்க அம்மா வீடு. நான், முப்பது வருஷத்துக்கு மேல் கலிபோர்னியாவுலதான் வசிக்கறேன். இப்பவும் அமெரிக்காவின் குளிரை விட இந்தச் சென்னை வெயில்தான் பிடிக்குது'' - முகம் மலர்ந்து பேசுகிறார் ரோகிணி.

“பாரதிராஜா கிள்ளி அழவெச்சார்!”

``எண்பதுகளில் அறிமுகமான பாரதிராஜாவின் கதாநாயகிகள் இப்ப வரை சினிமாவில் நடிக்கிறாங்க... ஆனா, நீங்க நாலே நாலு படத்தோட வெளிநாடு கிளம்பிப் போயிட்டீங்களே?’’

‘‘சூழல் அப்படி அமைஞ்சிச்சு. ‘நிழல்கள்'ல அறிமுகமானபோது ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். என் அப்பா மும்பையில் ஒரு நிறுவனத்துல உயர் பொறுப்புல இருந்தாலும் அவர் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். எங்க குடும்பத்துல ஒருத்தர் சுஹாசினி. நாங்க சின்ன வயசில இருந்து ஃப்ரெண்ட்ஸ். ஒரு ஃபங்ஷன்ல அப்பாவுக்கு கங்கை அமரன் சார் நட்பு கிடைச்சது. அதன்பிறகு அவர் எங்க குடும்ப நண்பரானார்.

அப்ப எனக்கு 13 வயசு. நான் ஸ்கூல் போயிட்டு இருந்தேன். சின்ன வயசில இருந்து பரதம் கத்துக்கிட்டு இருப்பேன். அமரன் சார்தான் பாரதிராஜா சார்கிட்ட என்னைப் பற்றிச் சொல்லியிருக்கார். சாரும் என்னைப் பார்த்துட்டு, ‘நடிக்கிறியாம்மா'ன்னு கேட்டார். நான் மாட்டேன்னுட்டேன். அப்புறம், சுஹாசினிதான் ‘நீ ஒரு படம் நடிச்சுத்தான் பாரேன். அதன்பிறகு பிடிக்கலைன்னா விட்டுடு'ன்னு சொன்னாங்க. அதன்பிறகுதான் சம்மதிச்சேன். என் நிஜப்பெயர் ராதிகா. ‘கிழக்கே போகும் ரயில்' ராதிகா இருந்ததால, என் பெயரை ரோகிணின்னு மாத்தினாங்க.

என் வயசுக்கு மீறின கதாபாத்திரத்தை நான் சிறப்பா பண்ணுனதுக்குக் காரணம், பாரதிராஜா சார்தான். அவர் கத்துக்கொடுத்ததை அப்படியே பண்ணினேன். அழுற சீன் படமாக்கும்போது எனக்கு அழுகையே வரல. பாரதிராஜா சார் சொல்லிப் பார்த்தார். அப்படியும் அழுகை வரலைன்னதும், கையில கிள்ளிவிட்டுடுவார். அப்படியே கண்ணுல பொலபொலன்னு கண்ணீர் வந்திடும். இப்பக்கூட, டான்ஸ் புரோக்ராமுக்காக சென்னை வரும்போது பாரதிராஜா சாரையும் இன்வைட் பண்ணுவேன். அவரும் வந்து நாட்டியம் முழுவதையும் பார்த்துப் பாராட்டுவார். ‘அப்ப கிள்ளினது ஞாபகம் இருக்கா... அப்படிப் பண்ணினதாலதான் நீ நடிச்சே'ன்னு சொல்வார். ‘நிழல்கள்' வெளியானதும் என் ஸ்கூல்ல இருந்து எல்லாரும் போய்ப் படம் பார்த்தது ஞாபகத்துல இருக்கு...''

“பாரதிராஜா கிள்ளி அழவெச்சார்!”

``இரண்டாவது படத்திலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க... அப்படி என்ன திடீர் முடிவு?’’

‘‘ ‘நிழல்கள்' முடிச்சதும் நிறைய பட வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, எனக்கு நடிக்க விருப்பமில்லாததால படிப்புல கவனம் செலுத்தினேன். காலேஜ் டைம்ல என் கணவர் நீகார் கிரி அறிமுகமானார். எங்க நட்பு காதலாச்சு. ‘ஒருவர் வாழும் ஆலயம்'ல கமிட் ஆனேன். பிரபு சாரோட மனைவியா நடிச்சிருப்பேன். அப்புறம் மலையாளப் படங்கள் ரெண்டு அமைஞ்சது. அந்த டைம்ல கிரிக்கும் ஆப்பிள் நிறுவனத்துல வேலை கிடைச்சது. நாங்க கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணினோம். 22 வயசில கல்யாணமாகிடுச்சு. ‘நீ நடிக்க வேணாம்'னு அவரும் கேட்டுக்கிட்டார். எனக்கும் நடிப்புல விருப்பம் இல்லாமல்போனதால அவரோடு அமெரிக்கா போயிட்டேன். அமெரிக்காவில் போய் செட்டில் ஆன பிறகுதான் ‘ஒருவர் வாழும் ஆலயம்' வெளியாச்சு. அந்தப் படத்துக்கு முன்னாடியே ப்ரியதர்ஷன் படமும், ‘என்னுநாதன்டே நிம்மி'யும் நடிச்சு முடிச்சுட்டேன். அமெரிக்கா போனதும் வீட்ல சும்மா இருக்கல. ஐ.டி நிறுவனத்துல வேலை கிடைச்சது. நிதித்துறையில இருந்தேன். இப்ப கிரி பிசினஸ்ல இருக்கார். அவ்னிஷ்னு ஒரு மகனும், லாஸியான்னு ஒரு மகளும் இருக்காங்க. பையன் ஒர்க் பண்றார்.’’

தனது மாணவியுடன்..
தனது மாணவியுடன்..

``அப்புறம், எப்படி டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கணும்னு தோணுச்சு?’’

‘‘என் கணவரோட அக்கா கிளாசிக்கல் டான்ஸர். என் பொண்ணுக்கு சின்ன வயசா இருக்கறப்ப அவளை அங்கே டான்ஸ் ஸ்கூல்ல சேர்த்துவிடலாம்னு நினைச்சேன். அப்ப, என் மாமியார் வீட்டுல உள்ளவங்கதான் ‘நீயே நல்ல டான்ஸர்... நீ கத்துக்கொடு'ன்னு உற்சாகப்படுத்தினாங்க. என் மகளுக்குக் கத்துக்கொடுக்கறதைப் பார்த்து, நிறைய பேர் கத்துக்க வந்தாங்க. அப்படித்தான் ‘அஞ்சலி நாட்டியாலயா'வை ஆரம்பிச்சேன். 30 வருஷமா நடனப்பள்ளியை நடத்திட்டு இருக்கேன். நிறைய மாணவிகளை உருவாக்கின பெருமையும் சந்தோஷமும் இருக்கு. அமெரிக்காவின் பல கோயில்கள்லேயும் பரதம் ஆடின சந்தோஷமும் இருக்கு. இப்ப என் மகளுக்கு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகணும்னு ஆர்வம் வந்திருக்கு. என் பசங்க யாரும் என் படங்களைப் பார்த்ததில்ல. ஆனா, டி.வி-யில் ‘பூங்கதவே தாழ்திறவாய்' பார்க்கறப்ப ‘நீங்க பிரபலமானவரா’ன்னு ஆச்சரியப்படுறாங்க.''

``இப்ப நடிக்கிற ஐடியா இருக்குதா?’’

‘‘நிச்சயமா! ஆனா, என்னால தொடர்ச்சியா மாசக்கணக்கா இங்க இருக்க முடியாது. அதிக பட்சம், ரெண்டு மூணு வாரங்கள்தான் சென்னையில இருக்க முடியும். முதல் படத்துடன் ஒப்பிடும்போது இன்னும் பக்குவமான நடிப்பை என்னால கொடுக்க முடியும்னு நம்புறேன்'' கண்களால் புன்னகைக்கிறார் ரோகிணி.