கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

நாங்களும் தீபாவளி ரீலீஸ்தான்...!

நாங்களும் தீபாவளி ரீலீஸ்தான்...!
பிரீமியம் ஸ்டோரி
News
நாங்களும் தீபாவளி ரீலீஸ்தான்...!

சினிமா

இந்த ஆண்டு தீபாவளிக்கு தியேட்டர்ல படங்கள் ரிலீஸ் ஆகாது போல. வாங்க... ஜாலியா தீபாவளி சமயத்துல வந்த பழைய படங்களோட விமர்சனத்த பார்ப்போம்.

களத்தூர் கண்ணம்மா

11-09-1960 - இதழ் வெளியான நாள்*

அந்த ஆதரவற்ற பையன் அப்பான்னு தெரியாமலே அப்பாகிட்டவும், அம்மான்னு தெரியாமலே அம்மாகிட்டவும் பழகறான். அந்தப் பையன் நடிப்புத்தான் அப்படியே எல்லோரையும் உலுக்கிடுச்சு.

கப்பலோட்டிய தமிழன் - 19-11-1961

லோகமான்ய திலகர், பாரதி ஆகியவர்களெல்லாம் காலமாகிவிடுகிறார்கள். தனிமையில் தவிக்கிறார் வ உ சி. இந்தக் கட்டங்களிலெல்லாம் சிவாஜிகணேசனின் நடிப்பு, உலகத்திலுள்ள எந்தச் சிறந்த நடிகருடைய நடிப்புக்கும் ஈடு கொடுக்கக்கூடியதாக இருந்தது.

அவள் ஒரு தொடர்கதை - 01-12-1974

குடும்பத்தின் சட்டாம்பிள்ளையான சுஜாதாவே நடிப்பிலும் சட்டாம்பிள்ளையாக உயர்ந்து நிற்கிறார். புதுமுகம் என்று நம்ப

முடியாதபடி பூர்ணமாக சுஜாதா நடித்திருப்பது பாலசந்தரின் வெற்றியோ?

மூன்று முடிச்சு - 07-11-1976

வில்லன் (ரஜினிகாந்த்) சிகரெட் பற்ற வைக்கும் `மேஜிக்'கை இத்தனை தடவை பார்த்தாக வேண்டுமா? ஆனால், `டீக் ஹை?' என்று இளப்பமாக அவன் அடிக்கொரு தரம் சொல்வதில் அழுத்தம் இருக்கிறது. முடிச்சுகள் விழுந்தவரை சரி. அவிழ்ப்பதற்கு மனச்சாட்சியோ, பாலசந்தரின் `டச்'சோ உதவவில்லையே.

16 வயதினிலே - 09-10-1977 - 62.5

`16-வயதினிலே!' போல் இன்னும் நான்கு படங்கள் வந்தால் தமிழ்ப்படத்தின் தரம் உயர்ந்து தலை நிமிர்ந்து நடக்கலாம்.

உதிரிப்பூக்கள் - 04-11-1979 - 60

காலம் கனிந்திருக்கிறது. மகேந்திர வர்ம பல்லவரே உங்கள் சாம்ராஜ்யத்தை தாராளமாக விரிவுபடுத்துங்கள்!

நாங்களும் தீபாவளி ரீலீஸ்தான்...!

வறுமையின் நிறம் சிவப்பு - 30-11-1980 - 50க்கு மேல்

வசனம் அதிகம் என்று

விசனம் பலருக்கு!

வாஸ்தவம்தான்...

காமிராவை அழைக்கவில்லை

துணைக்கு; சொந்தக் காலில்

நிற்கிறார் துணிவோடு!

படமெங்கும் பாரதியின் கவிதை

அதனால் படமே ஒரு கவிதை!

இருக்கட்டுமே இந்த விமர்சனமும்

ஒரு கவிதையாக!

அந்த 7 நாட்கள் - 08-11-1981 - 58

க்ளைமாக்ஸைக் குறித்து டாக்டரும், பாக்யராஜும் நடத்தும் விவாதத்தில் படம் பார்ப்பவர்களும் கலந்துகொள்வதுபோன்ற உணர்வை ஏற்படுத்தியிருப்பது...

இறுதியில் டாக்டரின் மனைவி தன் மாஜி காதலன் உடன் ஒன்றுசேர்ந்திருந்தால்கூட அதையும் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு ஆரம்பத்திலிருந்தே கதையைப் பின்னியிருப்பது...

கடைசியில், `எங்கே அந்தத் தாலியைக் கழற்றுங்கள் பார்ப்போம்’ என்று சென்டிமென்ட்டை சாமர்த்தியமாக நுழைத்து, இந்தக் கதை இப்படித்தான் முடிய வேண்டும் என்பதை ஆணித்தரமாகச் சொல்லியிருப்பது...

58 மார்க் தாராளமாகத் தரலாம்.

தண்ணீர் தண்ணீர் - 08-11-1981 - 55

இந்தப் படத்தை வெறும் சினிமா எனும் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது 40 மார்க் தான் கொடுக்கத் தோன்றும். ஆனா, இதுல எடுத்துக்கிட்டிருக்கிற பிரச்னை, சொல்லப்பட்டிருக்கிற விஷயம், காட்டப்பட்டிருக்கிற விதம் இவற்றுக்காகவே ஒரு 15 மார்க் கூட்டி 55 மார்க் கொடுக்கலைன்னா நியாயமாகாது.

தளபதி - 01-12-1991 ****

`தன் மகன்' என்று தெரிந்து ரஜினியை ஸ்ரீவித்யா சந்திக்கிற உருக்கத்தைவிட அதற்கு முன்பே ஜெய்சங்கர் ரஜினியைச் சந்தித்து நிதானமாக உண்மையைச் சொல்லுகிற காட்சியில் ஆழம் அதிகம். `பிரமாதம்' என்று கிறக்கத்துடன் சொல்ல வைக்கற பிரமையை `ராக்கம்மா' பாடலிலேயே ஏற்படுத்திவிடுகிறார் இளையராஜா.

குணா - 24-11-1991 ****

அபிராமி ஒரு ஆவேசமான அப்ஸெஷன்!

`இந்த ரோலை நடிகர் திலகம் ஒருத்தர்தான்யா செய்ய முடியும் ' என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். `இந்த ரோலை கமல் ஒருத்தர்தான் செய்ய முடியும்' என்று அதே உறுதியுடன் இப்போது சொல்லலாம். கமல் தன் மனசிலிருப்பதை வசனமாகச் சொல்ல... ரோஷிணி அதைக் கவிதையாய் மாற்றிப்பாடுகிற அந்த சூப்பர் ஹிட் குகைப் பாட்டிலும் பிடரி சிலிர்க்க வைக்கிறார் ராஜா!

முத்து - 19-11-1995 - 42

சிம்மாசனத்தில் தள்ளப்படும் ரஜினி!

`உன்னைப் பற்றிக் காவியங்கள் பாடுவதற்காக தமிழ்நாடு காத்துக்கொண்டிருக்கிறது. ராஜாங்கங்கள் உனக்காகத் தயார். நீ பாட்டுக்கு காவி உடை தரித்து காசிக்குப் போய்விட்டால் அப்புறம் நாங்கள் எங்கே போவோம்..? என்ன செய்வோம்..?' என்கிற ரீதியில் பாடல்கள் எழுதி- கச்சிதமாக அட்ஜஸ்ட் செய்துகொண்டிருக்கிறார் கவியரசு!

எந்த விதத்திலும் நம் ஆச்சரியத்தைத் தூண்டாத அதே சமயம் போர் அடிக்காத பழகிய மசாலா!

குருதிப்புனல் - 19-11-1995 - 45

பாவம், இரண்டு ஹீரோக்கள்!

நடிப்பில் எல்லோருமே கொடிகட்டிப் பறக்கிறார்கள். முக்கியமாக நாசருக்கு இது இன்னொரு மைல்கல். வசனமே எனக்குத் தேவையில்லை... கொடூரமான புன்னகையையும் முகபாவங்களையும் வைத்துக்கொண்டே என்னால் விஸ்வரூபம் எடுக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் நாசர்!

நாங்களும் தீபாவளி ரீலீஸ்தான்...!

தேவர் மகன் - 08-11-1992

நடிப்பில் இமயத்தை எட்டிப் பிடித்துவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் சிங்கராஜா சிவாஜியை அழைத்து வந்து அவருடன் தோளோடு தோள் நின்று நடைபோடும் பட்டத்து இளவரசர் கமலுக்கு இந்தப் படம் இன்னொரு சாதனைப் படிக்கட்டு! இருவரையும் நிற்க வைத்து திருஷ்டி சுற்றிப் போடுவது மாதிரியாக இளையராஜாவின் இசையமைப்பில் `போற்றிப் பாடடி பெண்ணே..' அமைந்துவிடுவது அசத்தல்! துணைக்கு ஜம்மென்று ஸ்ரீராமின் கேமரா புகுந்து சுற்றிவந்து தேவர்மகனின் கம்பீரத்துக்கு முரசு கொட்டி பராக் சொல்கிறது.

கிழக்குச் சீமையிலே - 28 11 1993 - 50

ஒத்தைச் சேவலில் ஆரம்பிக்கிற தகராறு ரத்தச் சேற்றில் போய் முடிகிறது. பாரதிராஜா கிராம மண்ணில் மறுபடியும் கம்பீரமாக காலழுந்த நிற்பது கண்டு இனிய தமிழ் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்!

திருடா திருடா - 28 11 1993 - 45

வெவ்வேறு ரகத் துரத்தல்கள், தீ ஜுவாலைகள், ரயில் சண்டைகள், பாடல் காட்சிகள் என்று ஒவ்வொன்றிலும் மணிரத்னத்தின் உங்களோடு விஷுவல் விருந்து படைத்திருக்கிறார் ஸ்ரீராம்.

ரஹ்மானின் இசை இன்னொரு பிளஸ் பாயிண்ட்!

இறுதியில் படத்தில் காணாமல்போகும் பணம் சிபிஐக்குக் கிடைத்திருக்கலாம். காணாமல் போயிருக்கும் கதைதான் கடைசி வரையில் நமக்குக் கிடைக்கவே இல்லை!

நாட்டாமை - 11 12 1994 - 46

மொத்தத்தில் விறுவிறுப்பாக பயாஸ்கோப் காட்ட மேதைத்தனமெல்லாம் அவசியமே இல்லை. பாமரத்தனமான புத்திசாலித்தனம் இருந்தாலே ரேக்ளா ரேஸ் ஸ்பீடில் படம் பண்ண முடியும் என்று திட்டவட்டமாக நிரூபித்திருக்கிறார் டைரக்டர்.

அவ்வை சண்முகி - 24 11 1996 - 44

நடையில் உடையில் பாவனையில் பேச்சில் தொடர்ந்து ஒரு feminine டச் கொடுக்கும் கமலின் தொழில் சுத்தம் எப்பவுமே தனி ரேஞ்ச்!

பெரிய ஸ்கிரீனில் ஜாலியான ஒரு மேடை நாடகம்!

நாங்களும் தீபாவளி ரீலீஸ்தான்...!

தெனாலி - 12 11 2000 - 45

கிரேசி மோகனின் வசன காமெடியை துணைக்கு வைத்துக்கொண்டு இடைவேளை வரையில் விலா நோக சிரிக்க வைத்துவிடுகிறார் டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார். காமெடியில் கமலுடன் ஈடுகொடுத்துப் பிய்த்து உதறுகிறார் ஜெயராம். `டாக்டர்.. நீங்க தெய்வம்.. தெய்வ மச்சான்..’ என்று நொடிக்கொரு தடவை ஜெயராமை கமல் விளிப்பது டாப்!

நந்தா - 09 12 2001 - 44

இசையமைப்பில் யுவன்சங்கர் ராஜா இன்னொரு இளையராஜாவாக வலம் வரப் போவதற்கான அடையாளங்கள் தெரிகின்றன பின்னணி இசையிலும் ராஜபாட்டை!

வங்காள ஆர்ட் பிலிம் பார்த்த உணர்வோடு ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியே வருகிறார்கள். நந்தாவுக்கு இதுவே பலம். இதுவே பலவீனம்.

பிதா மகன் - 02 11 2003 - 49

பஞ்ச் டயலாக் வைத்தே பரபரப்பு பண்ணும் ஹீரோயிஸ உலகத்தில் முகபாவங்களையும் உடல் அசைவுகளையுமே மொழியாக்க, விக்ரமின் நடிப்பு.. பிரம்மிப்பு! உற்சாக மின்சாரமாக சூர்யா! `இந்த மனிதருக்குள் இப்படியொரு நவரச நடிகரா' என வியப்பு மேலிடுகிறது. நெஞ்சுக் கூட்டுக்குள் இன்னும் குழந்தையாகவே இருக்கிற பாலிடெக்னிக் குமரியாக லைலா. கதை சொல்லும் விதத்திலும், காட்சி அமைப்பின் நேர்த்தியிலும் புதிய தலைமுறை இயக்குநர்களில், பாலா தமிழ்த் திரையுலகிற்கு நம்பிக்கை தரும் ஒரு `பிதாமகன்'தான்!