நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாகத் தொடங்குகிறது, அந்த யாகம்; மத்தியில் மோடி மீண்டும் பிரதமராவதற்கும், தமிழகத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி வெல்வதற்காகவும், சென்னையில் நடத்தப்படுகிறது. இதை முன் நின்று நடத்த மலேசியாவிலிருந்து சுவாமிஜி ஓம் காமேஷ்வரா வந்திருக்கிறார். இவர் வேறு யாருமல்ல... மறைந்த நகைச்சுவை நடிகர் `ஓமக்குச்சி’ நரசிம்மனின் ஒரே மகன்!

- இப்படியொரு தகவல் கிடைக்க, உறுதி செய்துகொண்டு காமேஷ்வரா சுவாமிகளை அலைபேசியில் அழைத்தேன். `வா கண்ணு பேசலாம்; சென்னையில பார்த்தசாரதி இருக்காரே... அதே திருவல்லிக்கேணியிலதான் இருக்கேன்.’ என்றார். அடுத்த அரைமணி நேரத்தில் சுவாமிஜி முன் நான்.
`` `ஓமக்குச்சி’ நரசிம்மன் வீட்டிலிருந்து நடிகர் வராம, ஒரு ஆன்மிகவாதி... ஆச்சர்யமா இருக்கே?!"
``ஆச்சர்யப்பட எதுவுமே இல்லை. அப்பா ஆயிரம் படத்துக்குமேல நடிச்சிருப்பார். பிள்ளைங்ககிட்டகூட உட்கார்ந்து பேச நேரமில்லாத அளவுக்கு பிஸியா இருந்தார். அதனாலேயே என்னவோ, சினிமா என்கிட்ட ஒட்டல. பள்ளி நாள்கள்ல விளையாட்டுல ஆர்வம் இருந்தது. பி.காம் ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல படிச்சேன். படிப்பு முடிஞ்சதும் பல கம்பெனிகள், பல வேலைகள், பல ஊர்களுக்குச் சுத்தியிருக்கேன். அந்த நாள்கள்லதான் `நாம யார்’ங்கிற ஒரு தேடல் முதன்முதலா எனக்குள்ள வந்தது. லால்குடியில் ஒரு மாமா, நாமக்கல்ல ஒரு மாமானு என்னோட ரெண்டு மாமன்கள் ஆன்மிக நாட்டத்தோடு இருந்தாங்க. அந்தத் தாக்கமும்கூட என்னை இந்தப் பயணத்துக்குத் திருப்பியிருக்கலாம்."
``முழுநேர ஆன்மிகவாதி ஆனது எப்போது?"
``2009-ல் அப்பா காலமானார். பிறகு சில சித்தர்கள் கனவுல வந்து, `நீ என்ன சொன்னாலும் நடக்கும்'னு அருள்வாக்கு சொல்ல தைரியம் தந்தாங்க. கொஞ்சநாள்ல ஒரு மத்தியான வேளையில சீரடி சாய்பாபா காட்சி தந்தார். விபூதி மாதிரி எதையோ என் கையில கொடுத்து, `இன்றிலிருந்து நீ எது கொடுத்தாலும் மருந்தாகும்’னு சொன்னார். 2014 கிறிஸ்துமஸ் அன்னைக்கு இயேசு காட்சி தந்தார். சித்தர்கள் முதல் ஜீசஸ் வரை பார்த்து உணர்ந்த பிறகுதான், என் ஆன்மிகத்தை நானே நம்பத் தொடங்கினேன்."
``ஆன்மிகத்திலும் `கார்ப்பரேட் சாமியார்கள்’ பெருகிவிட்டார்களே. நீங்கள் உங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள விரும்பவில்லையா?"
``ஆன்மிகத்தை வியாபாரமா நினைக்கிறவங்களாலதான், `கார்ப்பரேட் சாமியார்'ங்கிற வார்த்தை வந்தது. எனக்கு அந்த நினைப்பே கிடையாது. இன்னைக்கும் வாடகை வீட்டுலதான் இருக்கேன். நானா போய் `எங்கிட்ட வாங்க, அதைச் செய்றேன், இதைச் செய்றேன்’னு சொன்னதில்லை. தேடி வர்றவங்களை மட்டுமே சந்திக்கிறேன். ஆனாலும், இப்போ வெளிநாடுகள்ல இருந்தெல்லாம் என்னைத் தேடி ஆள்கள் வர்றாங்க."

``மலேசியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். நீங்கள் அங்கு செட்டில் ஆகிவிட்டீர்களா?"
``மாதத்தில் பாதி நாள்கள் சென்னையில இருப்பேன். மீதி நாள்கள் மலேசியாவுல இருப்பேன். என் மனைவி அங்கேதான் இருக்காங்க. ('சாமியார்னதும் கல்யாணம் பண்ணிக்காத பிரம்மசாரியா இருப்பேன்னு எதிர்பார்த்து வந்தியா கண்ணா’ எனச் சிரிக்கிறார்.)"
என் கண்ணுக்குத் தெரிஞ்ச நம்பரைத்தான் என்னால சொல்லமுடியும். 342 சீட் மத்தியில மோடி பிடிப்பார்னு எனக்குக் காட்டப்பட்டிருக்கு.undefined
``எல்லாம் இருக்கட்டும் சுவாமி, தொடர்ந்து 48 மணி நேரம் யாகம் பண்ணி, வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளை மாற்றிவிட முடியுமா?"
``நீ என்ன கேட்க வர்றன்னு புரியுது. என் கண்ணுக்குத் தெரிஞ்ச நம்பரைத்தான் என்னால சொல்லமுடியும். 342 சீட் மத்தியில மோடி பிடிப்பார்னு எனக்குக் காட்டப்பட்டிருக்கு. மாநிலத்துல 22 முதல் 28 தொகுதி அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குக் கிடைக்கலாம். மற்றதை 23-ம் தேதிக்குப் பிறகு பேசிக்கலாம்." என்று முடித்தார்.