சினிமா
Published:Updated:

ஒரு கேள்வி... ஒரு பதில்!

கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்தி

விஜய்வசந்த் ஜோடியா பூனம் கேரக்டர்ல நடிச்சிருந்தேன். நல்ல பெயர் கிடைச்சது.

இந்தப் பிரபலங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்ன பதில்கள் இவை.
ஒரு கேள்வி... ஒரு பதில்!

இயக்குநர் விஜய்

`` ‘தலைவா’ படத்துக்குப் பிறகு விஜய்யுடன் தொடர்பில் இருக்கீங்களா?’’

“நிச்சயமா. அவருக்கான கதைகள் உருவாகும்போது, அவர்கிட்ட சொல்லணும்னு நினைக்கறேன். அவருக்கு மட்டுமல்ல, என்னோட ஒர்க் பண்ணின ஹீரோக்கள் அத்தனை பேரோடவும் மறுபடியும் படங்கள் பண்ணணும்னு விரும்புறேன். ‘தலைவி’க்கு அடுத்து ‘தியா’வை இந்தியில் பண்றேன். தமிழ்லேயும் பேசிட்டு இருக்கேன். விஜய் சாருக்கான கதை அமையும்போது அவர்கிட்ட சொல்வேன்.’’

ஒரு கேள்வி... ஒரு பதில்!

கார்த்தி

``எப்படிப் போயிட்டிருக்கு உங்களுடைய ‘உழவன் ஃபவுண்டேஷன்’..?’’

``கன்னியாகுமரியில 13 கிலோமீட்டர்ல வாய்க்கால் ஒண்ணு தூர் வாரி சரிபண்ணியிருக்கோம். அதுபோல அதே பகுதியில ரெண்டு ஏரியைச் சீரமைச்சிட்டு வர்றோம். இப்படி தினமும் அன்னன்னிக்கு வேலையைப் பத்தி வாட்ஸ் அப்ல அப்டேட் கேட்டுட்டே இருப்பேன். பத்து வருஷமா பெரிய மழை ஏதுவும் இல்ல. இந்த வாய்க்கால் சீரமைச்சபின், ஒரு மழையிலேயே நிரம்பிடுது. தண்ணி நிக்குது. இயற்கை மேல அக்கறையா நாம ஒரு படி எடுத்து வச்சா, அது பத்துப் படி மேல எடுத்து வைக்குதுன்னு புரிய வச்சிருக்கு. நாங்க வாய்க்கால் சீரமைச்ச அன்னிக்கே மழை வந்துச்சு. இயற்கையின் ஆசீர்வாதம் அது. தண்ணீரே வராத அந்த வாய்க்கால்ல தண்ணீர் நிரம்பிப் போனதை பசங்க வீடியோ எடுத்து சந்தோஷமா அனுப்பினாங்க.’’

ஒரு கேள்வி... ஒரு பதில்!

அஞ்சனா கீர்த்தி

``உங்க கரியர்ல மறக்க முடியாத ஒருத்தர்னா யாரைச் சொல்வீங்க?’’

‘`வெங்கட்பிரபு சார். ஏன்னா, அவரோட ‘சென்னை-28’க்கு முன்னாடி நான் நாலஞ்சு படங்கள் நடிச்சிருந்தேன். இதுல விஜய்வசந்த் ஜோடியா பூனம் கேரக்டர்ல நடிச்சிருந்தேன். நல்ல பெயர் கிடைச்சது. இப்ப மறுபடியும் அவரோட டைரக்‌ஷன்ல ‘மாநாடு’ல நடிச்சிருக்கேன். இதுலேயும் என் கேரக்டர் பேசப்படும்.’’

ஒரு கேள்வி... ஒரு பதில்!

இயக்குநர் ஆர்.அஜய்ஞானமுத்து

``நீங்க விஜய்யோட பயங்கரமான ரசிகர்னு சொல்றாங்களே, உண்மையா?’

“ஆமாங்க. தீவிரமான ரசிகன். ஊர்ல அவருக்கு ரசிகர் மன்றம், பேனர் கட்டுறதுன்னு செம ஃபேன். இந்த விஷயம், எங்க குரு முருகதாஸ் சாருக்கே தெரியும். ‘ஏழாம் அறிவு’ ஒர்க் பண்ணின பிறகு லண்டன்ல திரைப்பட கோர்ஸ் ஒண்ணு படிக்க விண்ணப்பிச்சிருந்தேன். அவ்ளோ எளிதா அங்கே அட்மிஷன் கிடைக்காது. ஆனா, எனக்கு அங்கே இடம் கிடைச்சது. எனக்கும் வெளிநாட்டுல வேலை பார்த்துட்டு அந்த அனுபவத்தையும் சேகரிப்போம்னு தோணுச்சு. அதனால லண்டன் கிளம்புறதுக்கான வேலையில இருந்தேன். அந்த நேரத்துலதான் முருகதாஸ் சார், விஜய் சாரோட ‘துப்பாக்கி’ பண்ணுறார்னு செய்தி வந்துச்சு. விசா வேலைகள் முடிஞ்சு, அங்கே நான் ஃபீஸ் மட்டும்தான் செலுத்த வேண்டியது. அதை அப்படியே விட்டுட்டு, தளபதியின் படத்துல ஒர்க் பண்ணியே ஆகணும்னு ‘துப்பாக்கி’யில் வேலை பார்க்க வந்துட்டேன். அவரோட அந்தப் படத்துல இருந்த ஒவ்வொரு நாளுமே சிலிர்ப்பா இருக்கு. விஜய் சாருக்கும் இந்த விஷயம் தெரியும்.’’

ஒரு கேள்வி... ஒரு பதில்!

சித்ரா லட்சுமணன்

``நீங்க சந்திச்ச வி.ஐ.பி-க்களில் மறக்க முடியாதவர் யார்?’’

‘`எம்.ஜி.ஆர். ஏன்னா, என் வாழ்நாள்லயே நான் வியந்து பார்த்த மனிதர் அவர். எங்களுக்காகவே அவர் தன் சாப்பாட்டு நேரத்தைத் தள்ளி வச்சிருக்கார். அந்தச் சம்பவத்தைச் சொல்றதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தைச் சொல்றேன்.

என்னோட சின்ன வயசில நான் ஸ்கூல்ல படிக்கும்போது எம்.ஜி.ஆர்., சிவாஜி ரெண்டு பேருக்குமே தீவிர ரசிகன். நான் தயாரிப்பாளர் ஆன முதல் படமான ‘மண்வாசனை’ படத்தை எம்.ஜி.ஆருக்குத் திரையிட்டுக் காட்டினேன். நடிகர் சங்க தியேட்டர்ல அவரோடு ஒண்ணா உட்கார்ந்து படம் பார்த்தோம். அந்த வருஷமே அவருக்கு டாக்டர் பட்டம் கிடைச்சதுக்குப் பாராட்டு விழா. அதை நடத்தினவர் பாரதிராஜா.

ஒரு கேள்வி... ஒரு பதில்!

அந்த விழா நடத்தினதுல எம்.ஜி.ஆர் அவர்களைத் தொடர்ந்து பல நாள் சந்திக்கற சந்தர்ப்பம் கிடைச்சது. ஏவி.எம்.சரவணன் கூட ஒரு சம்பவத்தை நினைவில் வைத்திருப்பார். எம்.ஜி.ஆர் ஒரு விருந்து வச்சிருந்தார். ஆனா, ரொம்ப நேரமாகியும் விருந்து ஆரம்பிக்கல. எல்லார்க்கும் பசி. சரவணன் சார் அப்பாவித்தனமா, ‘ஏன் சார் இன்னும் விருந்து ஆரம்பிக்கல?’ன்னு கேட்டுட்டார். அதுக்கு எம்.ஜி.ஆர், ‘எல்லாம் உங்களாலேயும், சித்ரா லட்சுமணனாலேயும் தான். நீங்க ரெண்டு பேரும் சைவம். நாங்க அசைவ உணவுதான் சொல்லியிருந்தோம். சைவ உணவு சொல்லாமல் விட்டுட்டோம். உங்களுக்கான சாப்பாடு வந்த பிறகுதான் விருந்து ஆரம்பிக்கணும்’ன்னார். நான் வியந்து பார்த்த ஒரு மனிதர் எங்களுக்காகத் தன் சாப்பாட்டு நேரத்தைத் தள்ளி வச்சது எங்களை நெகிழ வச்சிடுச்சு. என்னோட ‘ஜல்லிக்கட்டு’ படத்தோட நூறாவது நாள் விழாவையும் தலைமை தாங்கி சிறப்பிச்சிருக்கார். அதுல ஒரு சிறப்பு, சிவாஜியின் நூறாவது நாள் பட விழாக்கள்லயே எம்.ஜி.ஆர் பங்கேற்றது அந்த ஒரு விழாவில்தான்.’’