Published:Updated:

`முதல் ரைமிங் பன்ச்; ஆனாலும் டி.ஆர் வெறுத்த படம் `ஒரு தலை ராகம்'... ஏன்னா?!'- டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas for 2K kids

ஒரு தலை ராகம்

80 & 90 தமிழ் சினிமா `நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் - ஒரு தலை ராகம்

Published:Updated:

`முதல் ரைமிங் பன்ச்; ஆனாலும் டி.ஆர் வெறுத்த படம் `ஒரு தலை ராகம்'... ஏன்னா?!'- டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas for 2K kids

80 & 90 தமிழ் சினிமா `நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் - ஒரு தலை ராகம்

ஒரு தலை ராகம்

1980-ம் ஆண்டு மே 2-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படத்தை சமகால தலைமுறையினர் ஒருவேளை பார்த்தால் ``ஏம்ப்பா... ஒருத்தன்… ஒரு பொண்ணுகிட்ட `ஐ லவ் யூ’ன்னு சொல்லாம தவிக்கறதையா ரெண்டரை மணி நேர படமா எடுத்திருக்காங்க?” என்று ஆச்சர்யப்பட நேரிடலாம்.

சந்தித்த அரை மணி நேரத்திலேயே `டேட்டிங்’ தேதியை பிக்ஸ் செய்யும் இந்தத் தலைமுறை, இந்தத் திரைப்படத்தை மியூசியத்தில் வைத்திருக்கும் பழைமையான பொருளைப் போல விசித்திரமாக பார்க்கக்கூடும்.

ஆம். 80-களின் காலகட்டம் அவ்வாறுதான் இருந்தது. ``உன் பெயர் என்ன?” என்று சக மாணவியிடம் கேட்பதற்கே தயங்கித் தயங்கி வருடக்கணக்காக நாள்களை ஓட்டியவர்கள் உண்டு.

காதலைச் சொல்லத் தயங்கும் பாத்திரத்துக்கு தமிழ் சினிமாவில் ஒரு பொருத்தமான பிம்பம் ஒன்றுண்டு. நடிகர் முரளி. பிற்கால திரைப்படங்களில் வசனங்களின் மூலம் கிண்டலடிக்கப்படும் அளவுக்கு `இதயம்’ திரைப்படம் முதற்கொண்டு பல திரைப்படங்களில் தன் மனதைத் திறப்பதற்கு அத்தனை அல்லாடியவர் அவர்.
டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்
ஆனால், முரளிக்கெல்லாம் மூத்த தலைமுறை என்று டி.ராஜேந்தரைச் சொல்ல முடியும்.

காதலைச் சொல்லத் தயங்கி மறுகும் பாத்திரத்திலேயே பல படங்களில் நடித்து முடித்தவர். தான் நடித்த அனைத்துத் திரைப்படங்களிலும் நாயகியைத் தொட்டு நடிக்காதவர். (ஆனால், சக நடிகரான உஷாவை காதல் திருமணம் செய்தவர் என்பது ஒரு சுவாரஸ்யமான முரண்).

காதல் தோல்வி, காதல் நிராகரிப்பு போன்ற அனத்தல்கள் தமிழ் சினிமாவின் ஒரு பகுதி கச்சாப்பொருளாகவே இருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலுள்ள பிரமாண்டமான கலாசார சுவர் இன்னமும்கூட பெரிதாக உடைபடவில்லை என்பதன் அடையாளம் இது.

ஒரு பெண்ணால் நிராகரிக்கப்படுவதை தன் ஆண்மைக்கு சவாலாக எடுத்துக்கொண்டு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதி ஆண்கள் ஈடுபடுகின்றார்கள். இன்னொரு பகுதியினரோ தாழ்வுணர்ச்சி காரணமாக `இந்தப் பொண்ணுங்களே... இப்படித்தான்... எஜமான்’ என்று புலம்பத் தொடங்கிவிடுகிறார்கள். தங்களின் எளிய தோற்றமும் அவர்களுக்குள் தாழ்வுணர்ச்சியை அதிகரித்துவிடுகிறது.

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்

இந்த மனோபாவத்தின் சிறந்த குறியீடாக டி.ராஜேந்தரைச் சொல்லலாம். அவருடைய பெரும்பாலான திரைப்படங்களை, பாடல்களைக் கவனியுங்கள். பெண்ணால் நிராகரிக்கப்பட்டதின் வலியை ‘அன்று கையத்தானே கழுவு என்றா(ள்) இன்று காதலிலே அழுவு என்றா(ள்)...’ என்பது போல் விதம் விதமாகப் புலம்பியிருப்பார். அவருடைய தோற்றம் குறித்த தாழ்வுணர்ச்சியும் வசனம் மற்றும் பாடல்களில் விதம்விதமாக வெளிப்பட்டிருக்கும்.

தன்னுடைய நல்ல குணாதிசயங்கள், நாகரிகமான நடவடிக்கைகள் போன்றவற்றின் கம்பீரம் சார்ந்துதான் ஒரு பெண்ணின் அன்பை இயல்பாகப் பெற முடியும் என்கிற அடிப்படையான புரிதல் இல்லாமல் வம்படியாகக் காதலைத் தெரிவித்துவிட்டு, பிறகு ‘என்னை ஏமாத்திட்டா மச்சி’ அவர்களாகவே ஏதோ கற்பனை செய்துகொண்டு `காதல் தோல்வியின் நாயகனாக’ தன்னை கருதிக்கொண்டு புலம்பிய விடலைகளுக்கு டி.ஆரின் `காதல் தோல்வி’ பாடல்கள் தேவ கானமாக ஒலித்தன. இது ஒரு வகையில் சமூக பலவீனத்தின் அடையாளம்.

‘தாழ்வுணர்ச்சி’ என்னும் விஷயத்தை எதற்காக இத்தனை விரிவாக வியாக்கியானப்படுத்த வேண்டியிருக்கிறது என்றால் `ஒரு தலை ராகத்தின்’ மையமே அதுதான்.

பணக்கார வீட்டு இளைஞனான ராஜா, மிக நல்லவன். அமைதியானவன். கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சக மாணவியான சுபத்ராவை கண்டதுமே அவனுக்குப் பிடித்து விடுகிறது. அவளுடைய அமைதியான சுபாவம் அவனை மேலும் கவர்கிறது.

ஒரு தலை ராகம்
ஒரு தலை ராகம்

ராஜாவின் காதல் சுபத்ராவுக்குப் புரிந்தாலும் அவள் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. காரணம் அவளுடைய குடும்பத்தின் பின்னணி. அந்தக் குடும்பத்தின் தந்தை எப்போதோ வீட்டை விட்டு ஓடிப்போய் விடுகிறார். எனவே, அந்தக் குடும்பத்தின் தாய்தான் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தன் இரண்டு மகள்களையும் பராமரிக்க வேண்டியிருக்கிறது. தாயின் கற்பைப் பற்றி ஊரார் கொச்சைப்படுத்தி கேலி பேசுகிறார்கள். ‘நான்தான் இப்படியாயிட்டேன்... நீயாவது ஜாக்கிரதையா இரும்மா” என்று அடிக்கடி சொல்லி தன் மகள்களை ஜாக்கிரதையாக வளர்க்கிறார்.

ராஜா முன்மொழியும் மிக நாகரிகமான காதல் சமிக்ஞைகளை மிக கொடூரமான முறையில் சுபத்ரா நிராகரிப்பதற்கான காரணம் இதுதான். தன் காதலை எண்ணி எண்ணி ஏங்கி இறுதியில் செத்துப் போகிறான் ராஜா. ஒரு கட்டத்தில் தன் முடிவை மாற்றிக்கொண்டு காதலை தெரிவிப்பதற்காக சுபத்ரா ஓடோடி வரும்போது ராஜாவின் சடலத்தைத்தான் பார்க்க முடிகிறது.

காதல் சோகம் நிறைந்திருக்கும் படம் என்றாலும் இந்தத் திரைப்படம் அந்தக் காலத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆக அமைந்ததற்கு இரண்டு முக்கிய காரணங்களைச் சொல்லலாம்.

ஒன்று, இது அப்போதைய கல்லூரி சூழலையும் மாணவர்களின் தோற்றங்களையும் அசலாகப் பிரதிபலித்தது. நாற்பதைத் தாண்டிய முன்னணி நடிகர்களும் நடிகைகளும் `கல்லூரிக்குப் போகும்’ அபத்தத்தைப் பார்த்து நொந்து போயிருந்த இளம் தலைமுறையினர், எதார்த்தத்துக்கு நெருக்கமான கல்லூரி மாணவர்களின் தோற்றங்களை திரையில் பார்த்தவுடன் மகிழ்ச்சியடைந்தனர்.

இரண்டாவது, இதன் பாடல்கள். `ஒரு தலை ராகம்’ வெளியாகி சில தினங்களுக்கு இந்தப் படம் சரியாக ஓடவில்லை. ஆனால், இதன் பாடல்கள் மிகுந்த புகழையும் வரவேற்பையும் அடைந்தவுடன் அதன் காரணமாகவே திரைப்படமும் மகத்தான வெற்றியை அடைந்தது.

ஒரு தலை ராகம்
ஒரு தலை ராகம்

ஏற்கெனவே விவரித்திருந்தபடி டி.ராஜேந்தரின் `காதல் சோக’ தடயங்களைப் படம் முழுக்க காண முடியும். ஆனால், இந்தப் படத்தில் நிகழ்ந்த சில விஷயங்கள் டி.ஆருக்கு வேறு வகையான சோகங்களைத் தந்தன.

இந்தப் படத்தை `இயக்கியவராக’ தயாரிப்பாளரான இ.எம்.இப்ராஹிம் பெயரே டைட்டிலில் போடப்பட்டது. கதை, வசனம், பாடல்கள் என்கிற கிரெடிட் மட்டுமே டி.ஆருக்கு கிடைத்தது.

மாயவரம் என்னும் சிறுநகரத்தில் இருந்து ஓர் இயக்குநர் ஆவதற்காக மிகவும் போராடிக்கொண்டிருந்த டி.ஆரால் இந்த நிபந்தனையை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. இது தொடர்பான கசப்பான அனுபவங்களை பிற்பாடு தான் நடத்திய `உஷா’ பத்திரிகையில் ஒரு நீண்ட தொடராக எழுதினார் டி.ஆர்.

`இயக்கம்’தான் இப்படி என்று பார்த்தால் பின்னணி இசைக்கான கிரெடிட்டையும் டி.ஆர் இழக்க வேண்டியிருந்தது. பாடல்களுக்கான இசை என்கிற இடத்தில் டி.ஆர் பெயர் வந்திருந்தாலும் பின்னணி இசை என்கிற இடத்தில் A.A.ராஜின் பெயர் இடம் பெற்றிருந்தது. இந்த மனக்கசப்பால், படம் வெளியான அன்று அவர் ஒருமுறை பார்த்ததோடு சரி. பிறகு `ஒரு தலை ராகம்’ படத்தை இதுவரைக்கும் டி.ஆர் காண விரும்பவில்லை என்கிற தகவலும் உண்டு.

எனவே, பிற்பாடு இதே திரைப்படத்தின் பாணியில் `ரயில் பயணங்களில்’ என்கிற கதையை எழுதி படமாக்கி வெற்றியடையச் செய்து ஆறுதல்பட்டுக்கொண்டார் டி.ஆர்.

`ஒரு தலை ராகம்’ வெளிவந்த காலகட்டத்தில் இதன் பாடல்கள் தமிழகமெங்கும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தன. எம்.எஸ்.வி-யின் அலை ஓய்ந்து இளையராஜா பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த நேரம் அது. அந்தச் சமயத்தில் சற்று மாறுதலான பாணியில் வெளிவந்த `ஒரு தலை ராகத்தின்’ துள்ளல் மற்றும் சோகப் பாடல்களை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள். குறிப்பாக, அப்போதைய கல்லூரி மாணவர்களின் தேசிய கீதமாக இதன் பாடல்கள் மாறின. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நிகழ்ந்த விழாக்களில் இவை தவறாது ஒலிக்கப்பட்டன.

ஒரு தலை ராகம் டீம் (2014-ம் ஆண்டு படம்)
ஒரு தலை ராகம் டீம் (2014-ம் ஆண்டு படம்)
பெண் குரல் இல்லை!
`ஒரு தலை ராகத்தின்’ பாடல்களில் பெண் குரலே இல்லை என்பது ஒரு விசித்திரமான அம்சம்.

நாயகனின் கொண்டாட்டம் மற்றும் துயரம் ஆகிய சூழல்களே காட்சிகளின் பின்னணியாக அமைந்திருந்ததால் நாயகிக்கு ஒரு பாடல்கூட இல்லை.

மாயவரத்தில், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தின்போது ரயில் பயணத்தில் டி.ஆர் தானே பாடல்களை இயற்றி, மெட்டமைத்து பாடுவது வழக்கமாம். ரயிலுள்ள சக மாணவர்கள், இதர பயணிகள் இவரின் பாடல்களையும் அடுக்கு மொழி பேச்சுக்களையும் மிகவும் ரசிப்பார்களாம். `கூடையில கருவாடு... கூந்தலிலே பூக்காடு” போன்ற பாடல்கள் அப்போது உதயமானவைதான். அவற்றை மெருகேற்றி படத்தில் உபயோகித்துக்கொண்டார் டி.ஆர்.

ஒரு தலை ராகத்தின் இசை டி.ஆர் என்றாலும் பின்னணி இசை அமைத்த ஏ.ஏ.ராஜின் பங்களிப்பும் பாடல்களில் இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் ஏ.ஏ.ராஜூம் ஒரு நல்ல இசையமைப்பாளர்.

`தணியாத தாகம்’ என்கிற திரைப்படத்தில் `பூவே... யார் சொல்லி... யாருக்காக மலர்கின்றாய்’ மற்றும் `அவள் ஒரு மோகனராகம்’ போன்ற அற்புதமான பாடல்கள் ஏ.ஏ.ராஜ்ஜின் இசைத் திறமைக்கு சாட்சியமாக விளங்குகின்றன. பிற்பாடு டி.ஆர் இசையமைத்த பாடல்களில் இல்லாத ஒரு வசீகரம், ஒரு தலை ராகத்தின் பாடல்களில் இருப்பதற்கு ராஜின் கைவண்ணமும் கலந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

ஜாலி ஆப்ரஹாம் அடிப்படையில் கிறிஸ்துவ பக்திப் பாடல்களை பாடுபவர். மலையாள சினிமாவில் அவர் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தமிழில் அவர் பாடிய அரிதான பாடல்களில் ஒன்றான `அந்த மன்மதன் ரட்சிக்கணும்...’ பாடல் இந்தத் திரைப்படத்தில் உள்ளது.

டி.எம்.சௌந்தரராஜன்
டி.எம்.சௌந்தரராஜன்

சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்தில் கொடிகட்டிப் பறந்த டி.எம்.சௌந்தரராஜன் வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருந்த காலகட்டம். `என் கதை முடியும் நேரம் இது’ மற்றும் `நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்று இந்தப் படத்தில் அவர் பாடிய பாடல்கள் அவரின் வீழ்ச்சிக்கான குறியீடு போலவே அமைந்து பரிதாபமாகி விட்டது.

`வாசமில்லா மலரிது’ மற்றும் `இது குழந்தை பாடும் தாலாட்டு’ ஆகிய இரண்டு பாடல்களையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அருமையாகப் பாடியிருந்தார். இதில் இரண்டாவது பாடல் முழுவதையும் `முரண் தொடை’ பாணியில் எழுதி அசத்தியிருந்தார் டி.ஆர். `கடவுள் வாழும் கோவிலிலே...’ என்கிற இன்னொரு அருமையான மென்சோகப் பாடலை அற்புதமாகப் பாடியிருந்தார் ஜெயச்சந்திரன்.

இந்தத் திரைப்படத்திலுள்ள பாடல்கள் அனைத்திலும் கதாநாயகனான சங்கரே பாடி நடித்திருந்தார் என்பதும் ஒரு புதுமையான அம்சம். சங்கருக்கு தமிழில் இது அறிமுகப்படம். அவர் மலையாளத்தில் அறிமுகமான `மஞ்சள் விரிஞ்ச பூக்கள்’ திரைப்படமும் ஒரு தலை ராகத்தைப் போலவே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. நல்லியல்பும் சோகமும் நிறைந்த பாத்திரத்தை சங்கர் சிறப்பாகக் கையாண்டிருந்தார்.

கதாநாயகியான ரூபா தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்த நடிகையாவார். குறிப்பாக, கன்னடத்தில் அதிகம் நடித்திருந்தார். இவர் லஷ்மி தேவி என்னும் நடிகையின் மகளாவார். இப்போதைய தலைமுறையினர் பார்த்தால் `இவரா ஹீரோயின்?’ என்று நம்பத் தயங்குமளவுக்கு சற்று முதிர்ச்சியான தோற்றம் கொண்டவராக `ஒரு தலை ராகத்தில்’ இருந்தார். இவரும் இந்தப் படத்தில்தான் தமிழில் அறிமுகமானார்.

சந்திரசேகர் - ஒரு தலை ராக்ம்
சந்திரசேகர் - ஒரு தலை ராக்ம்

நடிகர் ரவீந்தர் வில்லன் மாதிரியான பாத்திரத்தில் அறிமுகமான படமும் இதுவே. கல்லூரி மைனராக அலப்பறை செய்திருந்தாலும் இறுதிக் காட்சியில் சற்று கண்கலங்க வைத்துவிடுவார். நடிகர் தியாகு அறிமுகமான படமும் இதுவே.

பொதுவாக எல்லா வகுப்பிலும் பாடத்தைக் கவனிக்காத, போதைக்கு அடிமையான ஒரு மாணவர் நிச்சயம் இருப்பார். அப்படியொரு பாத்திரத்தில் நடித்து கவர்ந்தார் சந்திரசேகர். இறுதிக் காட்சியில் `ஒரு ஊர்ல ஒரு வெள்ளை ரோஜா இருந்ததாம்’ என்று இவர் சொல்லும் கதை, பார்வையாளர்களைக் கலங்க வைத்து விடும். அந்தக் காலகட்டத்தில், விழாக்களில் மிமிக்ரி செய்பவர்கள், நடிப்புக்கான பயிற்சியில் இருந்தவர்கள் போன்றவர்களிடையே இந்த வசனம் மிகப் பிரபலமாக இருந்தது. இதை மாற்றிப் பேசி கிண்டலடித்தவர்களும் ஏராளம்.

ரவீந்தருக்கு அல்லக்கை போன்றதொரு பாத்திரத்தில் நடித்தவர் கைலாஷ் நாத். ஏராளமான படங்களில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்த இவர் அடிப்படையில் ஒரு மலையாள நடிகர்.

நாயகியின் தோழி பாத்திரத்தில் மிக இயல்பாக நடித்து அசத்தியிருந்தார் உஷா. (டி.ஆரின் மனைவி). நாயகனின் மீது இவருக்கும் ஒரு மெல்லிய காதல் இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு, நாயகியின் மெளனம் குறித்து அவ்வப்போது எரிச்சலை வெளிப்படுத்தும் பாத்திரத்தில் நன்கு நடித்திருந்தார்.

`மன்மதன் ரட்சிக்கணும்’ பாடல் காட்சி தொடங்குவதற்கு முன்னால் இளம் வயது டி.ஆரையும் படத்தில் காண முடியும்... இந்திப் பாடல் பாட முனையும் அவரை சபையிலுள்ள மாணவர்கள் கேலிக் கூக்குரலிட்டு துரத்தியனுப்புகிறார்கள். தமிழகத்தில் அப்போது நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சூடு இன்னமும் தணியவில்லை என்றே இதைக் காண முடியும்.

உஷா டி.ராஜேந்தர்
உஷா டி.ராஜேந்தர்

இந்தக் காலத்தில் இதை ரசிப்பார்களா என்று தெரியாது. அந்தச் சமயத்தில் டி.ஆரின் அடுக்குமொழி வசனங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள்.

‘என்னடி... எண்ணையைக் கொட்டிட்டியா?” என்று நாயகியின் தோழி கேட்க, `இல்லேடி... என்னையே... கொட்டிட்டேன்” என்கிற மாதிரியான வசனங்கள் படம் பூராவும் வந்துகொண்டேயிருக்கும்.

அந்தக் காலகட்டத்தின் பின்னணி, தோற்றம், சிகையலங்காரம் போன்றவற்றை அறிந்துகொள்வதற்காக இந்தத் திரைப்படத்தைப் பார்க்கலாம். பெல்பாட்டம் என்கிற பேண்ட் வகை அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்தது. இடுப்புப் பகுதியில் குறுகி கால் பகுதியில் மிக அகன்று இருக்கும் இந்த உடையலங்காரமானது, ‘யானைக்கால் வியாதியை’ மறைப்பதற்காக என்றும் கிண்டலாகச் சொல்லப்படுவதும் உண்டு.

ஒரு தலை காதல் என்பது சங்க காலத்தில் `மடலேறுதல்’ என்கிற பெயரில் வழக்கமாக இருந்தது. காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக்கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக்கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும். இது இழிவான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தத் திரைப்படத்துக்கு `ஒரு தலை ராகம்’ என்னும் தலைப்பு பொருந்துமா என்று தெரியவில்லை. ஏனெனில் நாயகி, நாயகனை வெறுப்பதில்லை. சூழல் காரணமாக அவனது காதலை ஏற்க முடியாத சிக்கலில் இருக்கிறாள்.

ஒரு தலை ராகம்
ஒரு தலை ராகம்

என்றாலும் காதல் என்கிற பெயரில் ஒரு பெண்ணை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துரத்தி துரத்தி துன்புறுத்துவது, தன்னையும் தண்டித்துக்கொள்வது எத்தனை பெரிய அநீதி என்பதற்காக இந்தத் திரைப்படத்தை அவசியம் பார்த்து வைக்கலாம்.

ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக்கொள்வான்.

ஒரு தலை காதல், சங்க காலத்திலேயே இழிவாகக் கருதப்பட்டதில் இருந்து காதல் பொருட்டு உயிரை விடுவதோ, மறுகுவதோ, பழிவாங்குவதோ அநாகரிகமான கலாசாரம் என்று புரிந்துகொள்ளலாம்.