

Stranger Things Season 4 Volume 2 - WEB SERIES
நெட்ப்ளிக்ஸ் தன் புது பார்முலாவின்படி, இந்தத் தொடரின் நான்காவது சீசனை இரண்டு வால்யூம்களாகப் பிரித்து வெளியிட்டிருக்கிறது. இந்த வால்யூமில் இரண்டு எபிசோடுகள்தான் என்றாலும், இரண்டும் சேர்த்து மொத்தம் 4 மணி நேரம். தன் சக்திகளைத் திரும்பப் பெற்றுவிட்ட லெவன், ஹாக்கின்ஸ் நகரையும், தன் நண்பர்களையும் மீட்கக் கிளம்புகிறாள். வில், மைக் அடங்கிய நண்பர்கள் குழு அவளுக்கு உதவ வருகிறது. அங்கே ஹாக்கின்ஸில் மீதமிருக்கும் நண்பர்கள் இணைந்து, தீய சக்தியான வெக்னாவைத் தாங்களே அழிக்கத் திட்டம் போடுகிறார்கள். அதே சமயம், ரஷ்யாவிலிருக்கும் ஹாப்பர், ஜாய்ஸ் கூட்டணி இவர்களுக்கு உதவ அங்கே வேறொரு திட்டத்தைச் செயல்படுத்துகிறது. கடைசி நிமிடப் பரபரப்புகளுடன் அடுத்த பாகத்துக்கான லீடுடன் முடிகிறது இந்த சீசன். லெவன் சக்தி வாய்ந்தவள் என்றாலும் இந்த முறை, நான்சி, மேக்ஸ், ஸ்டீவ், எட்டி போன்ற கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு. ரஷ்யாவில் நடக்கும் சாகசங்களும் அட்டகாசம். எழுத்து, மேக்கிங் என்ற இரண்டு ஏரியாவிலும் எகிறிய எதிர்பார்ப்பைச் சிறப்பாகவே பூர்த்தி செய்திருக்கிறது இந்த சீசன்.


The Flash - WEB SERIES
உலகின் அதிவேகமான மனிதனுக்கும், அவன் எதிரிகளுக்கும் நடக்கும் பரபர யுத்தமே அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள The Flash. டிசி காமிக்ஸ் உலகில் அம்புகளை எய்யும் சூப்பர்ஹீரோவின் கதையைச் சொல்லும் Arrow தொடரின் கிளைக்கதையாக இந்த அதிவேக மனிதனின் கதை சொல்லப்பட்டது. ஆயினும் தற்போது மற்ற எல்லாத் தொடர்களையும் அவசர கதியில் முடித்துக்கொண்ட டிசி, இன்னும் The Flash-ஐ மட்டும் அடுத்தடுத்த சீசன்களுக்கு அனுமதி அளிப்பதில் இருந்தே, அதன் முக்கியத்துவத்தை அறியலாம். இந்த எட்டாவது சீசனில் எல்லா சூப்பர் ஹீரோக்களின் சக்தியும் அபரிமிதமாகப் பெருகிவிடுகிறது. பேரி ஆலன் இன்னும் இளமையாகிவிடுகிறார். சூப்பர் ஹீரோக்களுக்கு சக்தி அதிகமானால் சூப்பர் வில்லன்களுக்கும் நடந்துதானே ஆகவேண்டும். அப்படி இருபக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்திகள் மோதிக்கொள்ள, அடுத்த சீசனுக்கான ‘க்ளிக் பெய்ட்டுடன்' இந்த சீசனை முடித்திருக்கிறார்கள். பேரி ஆலனின் பரம எதிரியான ஈபோர்டு தானின் கடைசி சீசன் இதுதான் எனச் சொல்லப்பட்டிருந்தாலும், அடுத்த சீசனிலும் எப்படியும் ஏதாவது செய்து அந்தக் கதாபாத்திரத்தை வர வைத்துவிடுவார்கள் என நம்பலாம். காமிக்ஸ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் இந்தத் தொடரைப் பார்க்கலாம்.


Rise - MOVIE
இந்தியாவிற்கு கிரிக்கெட் என்றால் அமெரிக்காவுக்கு புட்பாலும் பேஸ்கட்பாலும். அதிலும் கூடைப்பந்து லீக்கான என்.பி.ஏ, நம்மூர் ஐ.பி.எல் அளவிற்கு பிரபலம். அதில் கடந்த சில ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் ஜியானிஸ், அவரின் சகோதரர்கள் தனாஸிஸ், கோஸ்டாஸ் ஆகியோரின் பயோபிக் இது. நைஜீரியாவின் வறுமையிலிருந்து தப்பிக்க கிரீஸ் நாட்டிற்கு இடம்பெயர்ந்தவர்கள் இவர்களின் பெற்றோர். முறையான ஆவணங்கள் இல்லாமல், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் சமாளித்தே இவர்களை வளர்த்தெடுக்கிறார்கள் தாய் தந்தையான வெரோனிகாவும் சார்லஸும். நித்தமும் பதற்றத்தில் கழியும் சகோதரர்களின் போக்கிடமாகக் கூடைப்பந்து மைதானம் மாற, அது இவர்களை மனதளவில் சமூக அளவில் எவ்வாறு மீட்டெடுக்கிறது என்பதை நெகிழ்ச்சியுடன் சொல்லியிருக்கிறார்கள். இந்த ஸ்போர்ட்ஸ் டிராமாவில் டிராமாவே அதிகம். ஆனாலும் எளிய மனிதர்களின் அந்த வெற்றி, ஒருகட்டத்தில் நம் மனதுக்கு நெருக்கமானதாகவும் மாறுகிறது. முக்கியமாய் இறுதிப் பத்து நிமிடங்கள். ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் டிஸ்னி படைப்பான இது தவறவிடக்கூடாத படம்.


Blasted - MOVIE
ஸ்கேண்டினேவியன் திரைப்படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஹாலிவுட்டின் தாக்கம் இருந்தாலும், அந்நாடுகளின் அழகான நிலப்பரப்புகளே அக்கதைகளுக்கு ஒரு மாயத்தன்மையைப் பரிசளித்துவிடும். இது தெரிந்தோ என்னவோ, அடிக்கடி ஸ்கேண்டினேவியன் படைப்புகளை இறக்குகிறது நெட்ப்ளிக்ஸ். அந்தவகையில் இது நார்வே நாட்டுப் படைப்பு. லேசர் கன் போட்டிகளின் சாம்பியனான நண்பர்கள் இருவர் காலப்போக்கில் பிரிந்துவிடுகிறார்கள். ஆண்டுகள் கழித்து ஒரு பேச்சிலர் பார்ட்டியில் இருவரும் சந்திக்கும்போது அந்த ஊரில் ஏலியன்களின் படையெடுப்பு நிகழ்கிறது. ஏலியன்கள் லேசர் ஒளிக்கற்றைகளுக்கு மட்டுமே பலியாகின்றன. இது தெரிந்து இவ்விரண்டு நண்பர்களும் ஊரை மீட்பதுதான் கதை. ரகளையான காமெடி ஏரியா என்றாலும், சில இடங்களில் மட்டுமே சிரிப்பு தெறிக்கிறது. பல்லாண்டுப் புதிரான ‘ஹெஸல்டன் லைட்ஸ்'ஸை வைத்துக் கதை பண்ணியிருப்பது சுவாரஸ்யம். ஜாலியாய் ஒரு படம் பார்க்க நினைப்பவர்களுக்கான வீக் எண்ட் தேர்வு இது.