கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

OTT கார்னர்

Hum Do Hamare Do
பிரீமியம் ஸ்டோரி
News
Hum Do Hamare Do

கோடிகளில் புரளும் பிசினஸ்மேனான ராஜ்குமார் ராவுக்கு கீர்த்தி ஷெனானைக் கண்டவுடன் காதல். ஆனால் கீர்த்தியோ ‘மாமனார் - மாமியார் இருக்கும் குடும்பத்தில்தான் வாக்கப்படுவேன்’ என்கிறார்

Hum Do Hamare Do - Movie

கிட்டத்தட்ட பாலிவுட்டின் காமெடி ராஜாவாகவே மாறிவருகிறார் ராஜ்குமார் ராவ். அவரின் கடைசி சில ரிலீஸ்கள் எல்லாமே கலகல காமெடி ரகம்தான். அந்தவகையில் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகியிருக்கிறது இந்தப் படம்.

OTT கார்னர்
OTT கார்னர்

கோடிகளில் புரளும் பிசினஸ்மேனான ராஜ்குமார் ராவுக்கு கீர்த்தி ஷெனானைக் கண்டவுடன் காதல். ஆனால் கீர்த்தியோ ‘மாமனார் - மாமியார் இருக்கும் குடும்பத்தில்தான் வாக்கப்படுவேன்’ என்கிறார். ராஜ்குமாருக்கோ பெற்றோர்கள் இல்லை. இதனால் தனக்குத் தெரிந்த பரேஷ் ராவல், ரத்னா பதக் ஷா இருவரிடமும் உதவி கேட்கிறார். கணவரை இழந்த ரத்னாவும் பரேஷ் ராவலும் சிறுவயதில் காதலித்தவர்கள். இப்போது பெற்றோராக நடிக்க அவர்கள் ஒப்புக்கொள்ள, அதன்பின் நடக்கும் முட்டல் மோதல்கள்தான் கதை. கேட்க சுவாரசியமாக இருந்தாலும் திரையில் காமெடி கொஞ்சமே கொஞ்சம்தான் எடுபடுகிறது. பிரதான கதாபாத்திரங்களான இவர்கள் நால்வரின் நடிப்புதான் படத்தைக் காப்பாற்றுகிறது. சச்சின் - ஜிகாரின் இசையில் நிறையவே தமிழ் வாடை.

OTT கார்னர்
OTT கார்னர்

Rathnan Prapancha - Movie

கன்னடத்திலும் இப்போது நிறைய நல்லுணர்வு சினிமாக்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவு, அமேசான் ப்ரைமில் ரிலீஸாகியிருக்கும் இந்தப் படம். ஹீரோ தனஞ்ஜெய்க்கு தன் தாய் உமாஸ்ரீயோடு சதா சண்டைதான். ஒருகட்டத்தில் உமாஸ்ரீ தன் வளர்ப்புத்தாய்தான் எனத் தெரியவர, நிஜத் தாயைத் தேடி ஹீரோயின் ரெபா மோனிகா ஜானோடு இந்தியா முழுக்கப் பயணிக்கிறார்.

பிரிந்து போன தன் உடன்பிறந்தவர்களையும் வழியில் கண்டுபிடிக்கிறார். கடைசியாக தாயை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதெல்லாம் சஸ்பென்ஸே இல்லாத முடிவுதான். படத்தின் ஆதாரம் உமாஸ்ரீயின் நடிப்பு. குழைவும் கோபமுமாய் நெகிழ வைக்கிறார். நடுவே எங்கெங்கோ சுற்றினாலும் முடியும்போது ஒரு சின்ன திருப்தியை அளிக்கிறது கதை. வாரக்கடைசியில் குடும்பமாய்ப் பார்ப்பதற்கு ஒரு நல்ல சாய்ஸ் இந்தப் படம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Meenakshi sundareshwar - Movie

மீனாக்ஷிக்கும் சுந்தரேஷ்வருக்கும் எதேச்சையாய் திருமணம் நடந்துவிடுகிறது. அடுத்தடுத்து அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை காமெடி என்கிற பெயரில் எரிச்சலூட்டிச் சொல்கிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் மீனாக்ஷி சுந்தரேஷ்வர்‌. பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்கள், மகாராஷ்டிரா என எல்லா மாநில மக்களின் உணர்வுகளையும் குத்தகைக்கு எடுத்திருக்கும் பாலிவுட்காரர்கள், தற்போது தமிழிலும் கை வைத்திருக்கிறார்கள்.

எல்லா இந்தி வாக்கியங்களுக்கும் முன் ஒரு தமிழ் வார்த்தையைப் போட்டுப் பேசும் பாரம்பரியமிக்க மதுரைத் தமிழ்க் குடும்பம். பாலிவுட்டில் இருந்து வேஷ்டி சட்டை, பட்டுப்புடவையுடன் இறக்குமதி செய்யப்பட்ட இந்தி முகங்கள் ஒவ்வாமை என்றால் அவர்கள் ‌பேசும் ‘உதித் நாராயணன்’ தமிழ், ஒவ்வாமையின் உச்சம். சான்யா‌ மல்ஹோத்ராவின் நடிப்பும், ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்களும்தான் ‌ஆறுதல் தரும் விஷயங்கள்.

படம் முழுக்கவே ஸ்டீரியோடைப் குடோன்களாக விரிகிறது. பெங்களூரில் நடக்கும் கதை இதைவிடக் கொடுமை. ‘தலைவா’வும், பில்டர் காபியும், கறி தோசையும், ஜிகர்தண்டாவும் மட்டுமே தமிழ்நாடு அல்ல என்பதை கரண் ஜோகர்கள் புரிந்துகொள்ளுதல் நலம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Maya and the Three - Movie

கொடூரக் கடவுள்களிடமிருந்து தன் மக்களையும் உலகத்தையும் காக்க, தனக்கான படையுடன் போராடும் 15 வயதுச் சிறுமியின் வாழ்க்கையைச் சொல்கிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள Maya and the Three. இளவரசி மாயாவுக்கு, அரச வாழ்க்கையின் சௌகரியங்களில் லயித்திருப்பதில் பெரிதாக விருப்பம் ஏதும் இல்லை. ‘ஜெய்க்கறமோ தோக்கறமோ, சண்ட செய்யணும்’ என்னும் லட்சியத்துடன் வாழ்கிறார். 15வது பிறந்தநாளில் அவளுக்கான முடிசூட்டல் நடக்கிறது. குடும்பத்தின் பழைய பாவக் கணக்குகளை ஈடு செய்வதற்காக, மாயாவை அழைத்துக்கொள்ள நிழல் உலகக் கடவுள்கள் அப்போது வருகிறார்கள்.

மாயா எப்படி இவர்களை அழிக்கிறாள் என்பது மீதிக் கதை. வழக்கமான ஆங்கில அனிமேஷனாக இல்லாமல், கதாபாத்திரப் பெயர்கள், இசை, உருவம், மொழி எனப் பலவற்றில் மெக்ஸிகன் புராணக் கதைகளைப் பிரதிபலிக்க மெனக்கெட்டிருக்கிறார்கள். வித்தியாசமான மனிதர்கள், உயிரினங்கள், பண்டைய உலகங்கள், ஆடைகள் என சிறுவர்களுக்கான அனிமேஷன் உலகில் புதிய அனுபவத்தைத் தருகிறது இந்த Maya and the Three.