சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

OTT கார்னர் - NAVARASA

OTT கார்னர் - NAVARASA
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர் - NAVARASA

தன் அண்ணனின் மரணத்திற்குக் காரணமானவரை உணர்ச்சிவேகத்தில் பழிவாங்கிவிடுகிறார் விஜய் சேதுபதி.

நவரசா - கொரோனா காலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நெட்ப்ளிக்ஸ் ஆந்தாலஜி தொடர். மணிரத்னம் தயாரிப்பு, மூத்த இயக்குநர்களின் பங்களிப்பு, நடிப்பாற்றல் மிக்க கலைஞர்களின் சங்கமம் என அந்த எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் சேர்க்க ஏராளமான காரணங்களும் இருந்தன. 9 படங்களும் சொல்லவந்த 9 உணர்ச்சிகளை சரியாகக் கடத்துகின்றனவா?

OTT கார்னர் - NAVARASA
OTT கார்னர் - NAVARASA

எதிரி

தன் அண்ணனின் மரணத்திற்குக் காரணமானவரை உணர்ச்சிவேகத்தில் பழிவாங்கிவிடுகிறார் விஜய் சேதுபதி. அந்தக் குற்றவுணர்ச்சி அவர் முதுகில் வேதாளம்போல ஏறிக் குடிகொள்ள, மீள்வதற்கு வழிகள் தேடித் தவிக்கிறார். இறுதியாக ரேவதியும் விஜய் சேதுபதியும் சந்திக்கும் நொடியில் எது குற்றம், எது தண்டனை, எது மன்னிப்பு என்பதான உரையாடலாக நீள்கிறது கதை. ரேவதி, விஜய் சேதுபதி இருவரின் நடிப்புமே இந்த எபிசோடினைத் தாங்கி நிற்கிறது. கதையில் மட்டுமல்ல, ஒளிப்பதிவிலும் கூட ஆங்காங்கே மணிரத்னம், பிஜோய் நம்பியார் டச். ஆனாலும் கருணையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் எதிரி அந்த உணர்ச்சியை ஓரளவுக்கே நமக்குக் கடத்துகிறது. காட்சியமைப்பு களில் அழுத்தமின்றி வெறும் வசனங்களாகவே கதை நகர்வது படத்தின் பெரிய மைனஸ்.

OTT கார்னர் - NAVARASA
OTT கார்னர் - NAVARASA

Summer of ‘92

தான் படித்த பள்ளிவிழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகிறார் சினிமாவில் காமெடியனாக வெற்றி பெற்றிருக்கும் யோகிபாபு. தன் பள்ளிக்கால நினைவுகளை அவர் பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொள்வதுதான் கதையாக விரிகிறது. நவரசங்களில் முக்கியமானது நகைச்சுவை. ஆனால் உருவகேலி, ஆதிக்க சாதியின் பகடி போன்றவற்றின் மூலம் நம்மைச் சிரிக்க வைத்துவிடலாம் என இயக்குநர் பிரியதர்ஷன் நினைத்ததுதான் சோகம். படம் முழுக்க யோகிபாபுவின் தோற்றமும் பின்னணியும் வசவுக்குள்ளாகிக் கொண்டே இருக்கிறது. போதாக் குறைக்கு ‘எனக்கு சம்பந்தமில்லாததை எல்லாம் நான் ஏன் படிக்கணும்’ என அடிப்படைப் பள்ளிக் கல்வியை மறுதலிக்கும் வசனங்கள் வேறு. டார்க் ஹியூமர் என்கிற அளவிற்குக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் போதாமைகள் படம் நெடுக சோதிக்கின்றன.

OTT கார்னர் - NAVARASA
OTT கார்னர் - NAVARASA

Project Agni

உலக அறிவியலாளர்கள் பலரும் உடன் பணியாற்ற ஆசைப்படும் அதிபுத்திசாலி அரவிந்த்சாமி. நிஜ உலகம் போலவே கனவுலகம் ஒன்று இருக்கிறதென்றும் அதுதான் நிஜ உலகை இயக்குகிறதென்றும் ஒரு தியரியை முன்வைத்துக் காலப்பயணம் மேற்கொள்கிறார். அதில் அவர் செய்யும் ஒரு பிசகு அவரின் நிகழ்காலத்தை மாற்றியமைக்கிறது. குற்றவுணர்ச்சி அழுத்த அவர் எடுக்கும் முடிவே மீதிக்கதை. இருக்கும் 9 எபிசோடுகளில் வித்தியாசமாய் சயின்ஸ் பிக்‌ஷனைக் கையிலெடுத்து அதை சுவாரஸ் யமாகவும் சொல்ல முயன்றிருக்கிறார் கார்த்திக் நரேன். ஓரளவிற்கு வெற்றியே. விறுவிறுவெனத் தொடங்கும் த்ரில்லர் அதன்பின் வழக்கமான ஆள்மாறாட்டக் கதையாக மாறுவதுதான் ஏமாற்றம். மேக்கிங்கில், சொல்லவரும் விஷயத்தில் தனித்துத் தெரிகிறது புராஜெக்ட் அக்னி. அதனாலேயே அது எடுத்துக்கொண்ட ரசமான ஆச்சர்யமும் ஓரளவுக்குக் கைகூடுகிறது.

OTT கார்னர் - NAVARASA
OTT கார்னர் - NAVARASA

பாயசம்

நீண்ட இடைவெளிக்குப் பின் வஸந்த் சாய் இயக்கியிருக்கும் இந்த எபிசோடு, தி.ஜா-வின் சிறுகதையை மையமாக வைத்து வெளியாகி யிருக்கிறது. குடும்பத்தின் மூத்த தலையான தனக்குக் கிடைக்காத மரியாதை தன் அண்ணன் மகனுக்குக் கிடைப்பதைப் பார்த்து வெறுப்பை உமிழ்ந்தபடி திரியும் டெல்லி கணேஷ், தன் ஆற்றாமையைத் தீர்த்துக்கொள்ள எந்த எல்லைவரை செல்கிறார் என்பதைப் பேசுகிறது இந்த எபிசோடு. ஒரு பெருங்கூட்டத்தை இயல்பாய், அதீத டீட்டெயிலிங்கோடு இயக்கிக் கதை சொல்லியவிதத்தில் கவர்கிறார் வஸந்த். வெறுப்பு நம்முள் ஏற்படுத்தும் சிறுபிள்ளைத்தனமான மனவோட்டத்தைக் கச்சிதமாகக் கடத்தி கலைஞனாக மிளிர்கிறார் டெல்லி கணேஷ். நவரசா சீரிஸில் எடுத்துக் கொண்ட உணர்ச்சியை சரியாகக் கையாண்டு நமக்கும் உணர்த்திய வெகுசில எபிசோடுகளில் இதுவும் ஒன்று.

OTT கார்னர் - NAVARASA
OTT கார்னர் - NAVARASA

Peace

ஜகமே தந்திரத்தின் நீட்சியாக கார்த்திக் சுப்புராஜ் எடுத்திருக்கும் ஈழ எபிசோடு இது. சிங்கள ராணுவம், விடுதலைப்புலிகள் இருதரப்பினரின் எல்லைக்கோட்டில் நிகழும் கதை இது. விடுதலைப்புலிகளின் எல்லையைத் தாண்டி சிங்களக் கோட்டை நோக்கிப் போகத் துடிக்கிறான் ஒரு சிறுவன். அதன் காரணமறிந்து அவனுக்காக அந்த எல்லையைத் தாண்டிப் போகிறார் விடுதலைப்புலி வீரரான பாபி சிம்ஹா. அதன்பின் நடக்கும் வன்முறைதான் கதைக்களம். ஒரே ஷாட்டில் முக்கியமான காட்சியைப் பரபரப்பாகப் படமாக்கியவிதத்தில் கார்த்திக் சுப்புராஜுக்கு தம்ஸ் அப். ஆனால் படம் பேசவரும் குழப்பமான அரசியல், மேக்கிங்கில் முன்னெடுத்த அத்தனை முயற்சிகளையும் வீணடிக்கிறது. அழுத்தமில்லாத போர்க்காட்சிகள் நம்முள் தாக்கம் ஏற்படுத்தத் தவறுவதால் ‘அமைதி’ என்கிற ரசமும் தவறிப்போகிறது.

OTT கார்னர் - NAVARASA
OTT கார்னர் - NAVARASA

ரெளத்ரம்

அரவிந்த்சாமி இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் எபிசோடு. வறுமையில் உழலும் தன் குடும்பத்தை மீட்கப் போராடுகிறார் கீதா கைலாசம். விட்டேத்தியாகச் சுற்றும் மகன், தான் வாழும் சூழலிலிருந்து தப்பித்துப் போக நினைக்கும் மகள் - இருவரையும் அரவணைத்துக் குடும்பத்தை நடத்துகிறார். கழுத்தை நெறிக்கும் கடன் அவரைச் சில முடிவுகள் எடுக்க வைக்கிறது. அதன் விளைவுகள்தான் கதை. சந்தோஷ் சிவனின் கேமரா, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, இறுதி ட்விஸ்ட் என பிளஸ்கள் ஏராளமாக இருந்தாலும் படம் பேசும் அரசியல் அத்தனையையும் நீர்த்துப்போகச் செய்கிறது. விருப்பம் வேறு, அந்தச் சூழலை நோக்கித் தள்ளப்படுவது வேறு என்பதை இரு பிள்ளைகளும் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் படம் பேசவே இல்லை. படத்தின் மொத்த நோக்கமும் தன் அம்மாவை மகன் காவல் நிலையத்தில் விளிக்கும் ஒற்றை வார்த்தையில் காணாமல் போவதுதான் சோகம்.

OTT கார்னர் - NAVARASA
OTT கார்னர் - NAVARASA

இன்மை

‘ஏதோவொன்று இருக்கிறது’ என்கிற அமானுஷ்யத்தின் மேல்தான் காலங்காலமாக பயம் என்கிற உணர்ச்சி கட்டமைக்கப்பட்டுவருகிறது. ஆனால் இன்மையிலும் பயம் இருக்கிறது என வித்தியாசமாய்க் கதைசொல்லி அசத்துகிறார் ரதீந்திரன் ஆர்.பிரசாத். பாண்டிச்சேரியில் பளிங்கு மாளிகையில் சகல செளகரியங் களோடும் வாழ்கிறார் பார்வதி திருவோத்து. ஒரு மதியப்பொழுதில் அவர் வீட்டுவாசலில் வந்து நிற்கும் ஒரு அறிமுகமில்லாத நபரிடம் புதைந்து கிடக்கின்றன பார்வதியின் கடந்தகாலப் பாவங்களின் மிச்சம். த்ரில்லராய்த் தொடங்கி, ஹாரர் படம்போலத் தொடர்ந்து இறுதி ட்விஸ்ட்டோடு முடிகையில் ‘நவரசா’ சீரிஸில் இதுதான் பெஸ்ட் என்கிற உணர்வு நமக்கும் வந்துவிடுகிறது. பார்வதி, சித்தார்த், அம்மு அபிராமி என நடித்திருப்ப வர்களும் தங்கள் பங்கைச் சிறப்பாய்ச் செய்திருப்பது கூடுதல் பலம். விஷால் பரத்வாஜின் பின்னணி இசை கதையைத் தாண்டி நமக்குள் ஊடுருவி நடுக்கம் கொடுக்கிறது.

OTT கார்னர் - NAVARASA
OTT கார்னர் - NAVARASA

துணிந்த பின்

நக்ஸலைட்டுகளைப் பார்த்தாலே கொன்றுவிடவேண்டும் என ரத்தம் சூடாகிச் சுற்றும் இளம் வீரரான அதர்வாவுக்கு, அதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. காட்டுக்குள் இவர்களின் முகாமை நக்ஸலைட்டுகள் தாக்க, அதன் முக்கியத் தலைவரைத் துப்பாக்கிச்சூட்டில் காயப்படுத்திக் கைது செய்கிறார். அவரை முகாமுக்குத் தூக்கிப் போகும் பணியும் அதர்வாவிடம் வர, பயணத்தில் இருவரும் பரிமாறிக் கொள்ளும் வார்த்தைகள்தான் கதை. சிந்தாந்த ரீதியாக நேரெதிர் துருவங்களில் உள்ளவர்களின் சந்திப்பு என்கிற சுவாரசியமான கதைக்களத்தில், ‘தைரியம்னா துப்பாக்கி ஏந்திக்கிட்டு நிக்கிறதில்ல’ போன்ற வசனங்களைத் தாண்டி எதுவும் மனதில் நிற்காததுதான் குறை. அரச பயங்கரவாதம் பற்றிப் பேசும் படமென்றால் அதற்கு வெறும் உரையாடல்கள் மட்டும் போதாதே! அதை நியாயப்படுத்தும் காட்சியமைப்புகள் இல்லாததால் ‘தைரியம்’ என்கிற உணர்ச்சி நமக்குள் இறுதிவரை ஏற மறுக்கிறது.

OTT கார்னர் - NAVARASA
OTT கார்னர் - NAVARASA

கிடார் கம்பி மேலே நின்று

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, ஆனால் அதிகம் ஏமாற்றமளிக்கும் எபிசோடு இதுதான். ஒரேநாளில் இரு பரிச்சயமற்ற நபர்கள் இசைவழி நெருக்கமாவது, அவர்களின் வெளியில் இசை மட்டுமே இருப்பது என, கேட்பதற்குக் கவித்துவக் கதையாக இருக்கும் இதைப் படமாக்கிய விதத்தில் ஏகத்துக்கும் க்ளிஷே சேர்த்திருக்கிறார் கெளதம். ராயல் என்பீல்டு, ‘I need this ma’ ரக வசனங்கள், நிறுத்தி நிறுத்திப் பேசுவது, சாமானியர்களின் மொழியாக இல்லாமல் சாதாரண உரையாடல்களே கவித்துவமாக இருப்பது என ஏகப்பட்ட நெருடல்கள். இவற்றை அவர் படங்களில் ஏகப்பட்ட முறை பார்த்துவிட்டதால் ‘காதல்’ என்கிற உணர்ச்சியைக் கடத்தாமல் காட்சிகள் வெறுமனே கடந்துபோகின்றன. பெரும் ஆறுதல் கார்த்திக்கின் இசை. பாடல்கள் அனைத்தும் ரசிக்கவும் முணுமுணுக்கவும் வைப்பதால் ஆல்பமாய் நவரசாவில் தனித்துத் தெரிவது இந்த எபிசோடுதான்.

இந்த ஒன்பது உணர்ச்சிகளுமே ஒவ்வொருவரும் ஆட்படுவதுதான். ஆனால் அதைப் பேசும் ஒன்பது கதைகளில் ஒன்றைக்கூட பெரும்பான்மை சாமானியர்கள் பொருத்திப் பார்த்துக்கொள்ளமுடியாது என்பதுதான் ஒட்டுமொத்த சீரிஸின் பெரும்பிரச்னை.