

Fear Street Part One: 1994 - MOVIE
ரொம்ப நாள்களாக ஹாலிவுட்டில் காணாமல்போயிருந்த Slasher ஜானர் படங்களைத் தூசி தட்டி எடுத்திருக்கிறது நெட்ப்ளிக்ஸ். 1994-ல் நடக்கும் முதல் பாகத்தில் ஷேடிசைட், சன்னிவேல் என அடுத்தடுத்து இரு நகரங்கள் அமைந்திருக்கின்றன. சன்னிவேலில் அமைதியும் வளமும் குடியிருக்க, ஷேடிசைட் நகரிலோ சீரியல் கில்லர்களால் வன்முறை தலைவிரித்தாடுகிறது. தன்பால் ஈர்ப்பு ஜோடியான டீனாவும் சமந்தாவும் இந்தக் கொலைக் களத்திலிருந்து தப்பிக்க வழிதேடி நாலாதிசைகளிலும் ஓடுகிறார்கள். அது அவர்களை 1978-ல் நடந்த ஒரு சம்பவத்தில் கொண்டு போய் நிறுத்த, அதோடு முடிகிறது முதல் பாகம். தன்பால் ஈர்ப்பாளர்களை வைத்துக் கதை சொல்லிய விதம், திக்திக் தருணங்களோடு டீன் காமெடியை இணைத்து பேலன்ஸ் செய்தது என படம் நிறையவே ஈர்க்கிறது. மூன்று பாகங்களுமே இளகிய மனம் கொண்டோருக்கானவை இல்லை. வயது வந்தவர்களுக்கு மட்டுமே!


Fear Street Part Two: 1978 - MOVIE
முதல் பாகம் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது இந்தப் படம். இரு நகரங்களின் பதின்பருவத்தினரும் இணைந்து ஓரிடத்தில் கேம்பிங் செய்கிறார்கள். அவர்களுள் ஒருவர் சீரியல் கில்லராய் மாற, ஷேடிசைடின் இளைஞர்கள் கொல்லப்படுகிறார்கள். அது ஏன் ஷேடிசைடின் இளைஞர்கள் மட்டும் குறிவைக்கப்படுகிறார்கள் என ஸிக்கி பெர்மன் என்கிற இளம்பெண் தற்செயலாய்த் தேடத் தொடங்க, அந்தத் தேடல் அவரை இந்தக் கொலைகள் எல்லாம் நடக்கத் தொடங்கிய 1666-ம் ஆண்டிற்கு அழைத்துச் செல்கிறது. முதல் பாகத்தின் சுவாரஸ்யம் இரண்டாம் பாகத்தில் இல்லை என்பதுதான் குறை. போக, ‘Stranger Things’ சீரிஸின் முகங்கள் ஆங்காங்கே தென்படுவதும் படத்தைத் தாண்டி அந்த சீரிஸை நினைவுபடுத்துகிறது.


Fear Street Part Three: 1666 - MOVIE
இரு நகரங்களும் உருவாகாத ஒரு காலம் இது. அமானுஷ்யம், பில்லி, சூனியம், ஏவல் ஆகியவற்றை அதீதமாக நம்பும் குடியிருப்பில் திடீரென அசம்பாவிதங்கள் நடக்கத்தொடங்க, யாரோ வலிய சாத்தானை வரவழைத்ததுதான் அதற்குக் காரணம் என முடிவிற்கு வருகிறார்கள். ஊராரின் சந்தேகம் அந்தக் காலத்தில் வாழ்ந்த தன்பால் ஈர்ப்பு ஜோடியின் மேல் விழ, அவர்களை பலிகொடுக்கத் துரத்துகிறார்கள். உண்மையில் சாத்தானை வரவழைத்தது யாரென்பதை அதிலொருவர் கண்டுபிடித்துவிட, அதை ஊருக்குச் சொல்லும்முன்பே அவர் கொல்லப்படுகிறார். செத்தவரின் ஆன்மா முதல் பாகத்தில் இருக்கும் டீனா வழியே 300 ஆண்டுகள் கழித்துப் பழிவாங்குவதுதான் மீதிக்கதை. நெட்ப்ளிக்ஸிற்குத் தேவையாயிருந்த சூப்பர்டூப்பர் ஹிட்டைக் கொடுத்திருக்கிறது இந்தப் படவரிசை.


Kudi Yedamaithe - SERIES
‘RepEAT’ என்ற உணவு டெலிவரி நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்க்கும் ஆதியும், போலீஸ் இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் துர்காவும் ஒரு விபத்தில் சந்தித்துக்கொள்கிறார்கள். அந்த விபத்தில் இறந்துபோகும் இருவரும் தங்களின் அதே நாளை மீண்டும் முதலிலிருந்து தொடங்குகிறார்கள். ஒவ்வொரு முறை இறந்த பின்னரும், மீண்டும் அதே நாளைத் தொடங்கும் அவர்கள், அந்த டைம் லூப்பிலிருந்து விடுபட அந்த நாளின் தொடர் நிகழ்வுகளை மாற்றியமைக்கிறார்கள். எதனால் இந்த லூப் நிகழ்கிறது? இதைச் சரி செய்ய அவர்கள் என்ன செய்ய வேண்டும்? பரபர ஆக்ஷன் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் கதையைக் கொடுத்திருக்கிறார் ‘லூசியா’, ‘யூ-டர்ன்’ போன்ற கன்னடப் படங்களை இயக்கிய பவன் குமார். ஆதியாக வரும் ராகுல் விஜய்க்கு எமோஷன்கள் கைகூடவில்லை என்றாலும், அவருக்கும் சேர்த்து காவல்துறை அதிகாரியாக வரும் அமலா பால் ஸ்கோர் செய்திருக்கிறார். லோ பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தத் தொடருக்குப் பூர்ணசந்திரா தேஜஸ்வியின் இசை பக்கபலமாக இருக்கிறது. ‘Aha’ தளத்தில் 8 எபிசோடுகளாக 4 மணி நேரம் ஓடும் இந்தத் தொடரை நிச்சயம் நம் வீக்கெண்ட் டைம்டேபிளில் சேர்த்துக்கொள்ளலாம்.


The Flash - SERIES
பிரபஞ்சத்தின் அதிவேக மனிதனும், அவன் சந்திக்கும் பிரச்னைகளும்தான் அமேசான் ப்ரைமில் வெளியாகிவரும் ‘தி ஃபிளாஷ்’ தொடர். ஸ்டார் லேப்ஸில் நடக்கும் ஒரு விபத்தால், காவல்துறையில் வேலை பார்க்கும் பேரி ஆலனுக்கு அதி வேக சக்தி கிடைத்து, சூப்பர்ஹீரோவாக மாறிவிடுகிறார். அதே தருணத்தில், செண்டிரல் நகரத்தில் பலருக்கு இப்படி வெவ்வேறு சக்திகள் கிடைத்துவிடுகின்றன. அதில் சிலர் நல்லவர்கள், பலர் கெட்டவர்கள். ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு குட்டி வில்லன், தொடர் முடிவில் பெரிய வில்லன். இதுதான் டிசி காமிக்ஸான தி ஃபிளாஷின் பார்முலா. திரைப்படத்தில் தலைகாட்டிய அதிவேக மனிதன்கூட இந்தத் தொடரில் ஒருமுறை வந்திருக்கிறார். யாரையும் கொல்ல மாட்டேன் என்பதுதான் பேரி ஆலனின் ஒரே கொள்கை. அதை அவர் எந்த அளவு காப்பாற்றுகிறார் என நீள்கிறது தொடர். கடந்த வாரத்துடன் ஏழு சீசன்களை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். ஆங்காங்கே சில தொய்வுகள் இருந்தாலும், காமிக்ஸின் ரசிகர்கள் தவறவிடக்கூடாத தொடர் இது.