சினிமா
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

வர்க்க வேறுபாடுகள், அன்பைப் பரிமாறாத மனிதர்கள் போன்ற யதார்த்தங்களை சமரசமின்றிக் காட்சிப்படுத்தியிருக்கிறது இந்தப் படம்.

Ajeeb Daastaans

பாலிவுட்டில் மீண்டும் ஒரு ஆந்தாலஜியை இறக்கியிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். இம்முறை ஷஷாங்க் கைதன், ராஜ் மெஹ்தா, நீரஜ் கைவான், கயோஸ் இரானி ஆகியோர் இயக்குநர்களாகக் கைகோக்க, கொங்கனா சென் ஷர்மா, அதிதி ராவ் ஹைதரி, நுஷ்ரத் பரூச்சா, ஃபாத்திமா சனா ஷேய்க், ஜெய்தீப் அலவாத், ஷெஃபாலி ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நான்கு குறும்படங்களும் சாதிய அரசியலையும் காதலையும் மையப்படுத்தி க்ளைமாக்ஸில் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டதாய் அமைந்துள்ளன.

OTT கார்னர்

Khilauna

தன் தங்கை பின்னியுடன் வாழும் மீனாள், காலனி செகரட்டரியான வினோத் அகர்வால் வீட்டில் வேலைக்குச் சேர்கிறாள். வினோத்தின் சாதிய மனப்பான்மை, மீனாளை அடைய நினைக்கும் அவனின் கீழான எண்ணம் எப்படி ஓர் ஆபத்தான பிரச்னையைக் கொண்டு வருகிறது என்பதே இந்தப் படம். இந்த ஆந்தாலஜியில் அதிகம் திடுக்கிட வைக்கும் க்ளைமாக்ஸ் கொண்டது இந்தக் கதைதான். குட்டிப்பெண் பின்னியாக இனாயத் வெர்மாவும் மீனாளாக நுஷ்ரத்தும் அப்ளாஸ் பெறுகிறார்கள். ஆனால், ஒடுக்கப்பட்டவர்களை சுயநலம் மிக்கவர்களாகவும் தாங்கள் நினைத்ததைச் சாதிக்க எந்த எல்லைக்கும் செல்பவர்களாகவும் சித்திரித்திருப்பது மோசம். இருந்தும், வர்க்க வேறுபாடுகள், அன்பைப் பரிமாறாத மனிதர்கள் போன்ற யதார்த்தங்களை சமரசமின்றிக் காட்சிப்படுத்தியிருக்கிறது இந்தப் படம்.

OTT கார்னர்

Majnu

தான் வேறொருவரைக் காதலிப்பதால் தன்னால் கணவனாக வாழ முடியாது என்று மனைவி லெபாக்ஸியை வெறுக்கிறான் பப்லு. இதனால் பப்லுவிடம் கணக்கராக வேலைக்குச் சேரும் ராஜ் என்ற இளைஞனுக்கும் லெபாக்ஸிக்கும் காதல் பற்றிக்கொள்கிறது. பப்லு யாரைக் காதலித்தான்? காதலர்கள் தப்பித்தார்களா? விடை சொல்கிறது மஜ்னு. காதல் கதையாகத் தோன்றினாலும் திருப்பங்கள் நிறைந்த த்ரில்லர் டிராமாவாகவே இது விரிகிறது. லெபாக்ஸியாக ஃபாத்திமா சனா ஷேக்கும், பப்லுவாக ஜெய்தீப்பும் ஈர்க்கிறார்கள். ஆனால், கேங்க்ஸ்டராகக் காட்டப்படும் பப்லு பெற்றோருக்குப் பயந்து திருமணம் செய்துகொள்வதெல்லாம் என்ன லாஜிக் என்று புரியவில்லை. பெற்றோர் பாத்திரங்களும் நமக்குக் காட்டப்படாததால் மொத்தக் கதையும் வலுவிழந்த ஒன்றாகவே தோன்றுகிறது.

OTT கார்னர்

Ankahi

சமய்ரா தன் காது கேட்கும் திறனை மெல்ல இழந்துவர, அவளுடன் பேசுவதற்கான சைகை மொழியைக் கற்க மறுக்கிறார் அவளின் தந்தை. இது அவர் மனைவி நடாஷாவுக்கும் அவருக்கும் விரிசலை உண்டாக்குகிறது. அதே சமயம், சைகை மொழி அறிந்த நடாஷாவுக்கு அவள் எதிர்பார்க்கும் அன்பு, கபீர் என்ற மாற்றுத்திறனாளி புகைப்படக் கலைஞனிடம் கிடைக்கிறது. இந்த ஈர்ப்பை நடாஷா எப்படி எதிர்கொண்டார் என்பதே இந்தப் படம். இந்த ஆந்தாலஜியில் அதிக பதைபதைப்பைக் கிளப்பாத படம் என்பதால் ஈர்க்கும் விதத்தில் பெரிதாக எதுவும் அமையவில்லை. அடிப்படையில் மனிதர்கள் சுயநலவாதிகள் என்ற கருத்தை முன்வைக்கும் இது, அதிலுள்ள நடிகர்களின் நடிப்புக்காக மட்டும் லைக்ஸை அள்ளுகிறது.

OTT கார்னர்

Geeli Pucchi

ஒரு ஃபேக்டரியில் சாதாரண வேலை செய்யும் பாரதி மண்டல் அதிகம் படித்திருந்தாலும் அங்கு நிலவும் சாதிய வேறுபாடுகள் அவள் கேட்கும் டேட்டா ஆபரேட்டர் வேலையை அவளுக்குத் தர மறுக்கிறது. அதே வேலை தகுதியே இல்லையென்றாலும் ஆதிக்கச் சாதிப் பெண் பிரியா ஷர்மாவுக்குக் கிடைக்கிறது. நண்பர்களாகும் இருவருக்கும் ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. இருந்தும் பிரியா அதைத் தவிர்த்து, தன் கணவனுக்காகத் தாயாக விரும்புகிறாள். ஒரு தோழியாக அவளுக்கு எப்போதும் உதவும் பாரதி, இறுதியில் தான் நினைத்ததை எப்படிச் சாதித்தாள் என்று திருப்பங்களுடன் விவரிக்கிறது இந்தப் படம். அப்பாவியாக தன் குடும்பத்துக்கு பயந்த பிரியா ஷர்மாவாக அதிதி ராவ் ஹைதரியும், தைரியமான தெளிவான பெண் பாரதி மண்டலாக கொங்கனா சென் ஷர்மாவும் மனதில் நிற்கிறார்கள். பாலிவுட்டில் சமகாலத்தில் தெளிவான அரசியல் சிந்தனையோடு வந்த படம் இதுவாகத்தான் இருக்கும். இந்த ஆந்தாலஜியிலும் தனித்து நிற்பது இதுதான்.

OTT கார்னர்

Flora & Ulysses

பிரிந்துபோன ஒரு குடும்பத்தை எப்படி ஒரு சூப்பர்ஹீரோ அணில் சேர்த்துவைக்கிறது என்பதுதான் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் Flora & Ulysses. சூப்பர்ஹீரோ கதைகள் எழுதும் அப்பா, ரொமான்ஸ் கதைகள் எழுதும் அம்மா இவர்களின் ஒரே மகள் ஃப்ளோரா. தோற்றுப்போன இந்த இரண்டு எழுத்தாளர்களின் மகள் சூப்பர் ஹீரோ கதைகளிலேயே மூழ்கியிருக்க, வாராது வந்த அணிலை சூப்பர்ஹீரோவாக நினைக்க, அது உண்மையிலேயே சூப்பர்ஹீரோவாக இருக்க என காமெடிக் கலவையாகச் செல்கிறது படம். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடாவின் லேனா கான் இயக்கியிருக்கிறார். குழந்தைகள் படம் என்பதால், காமெடியும் சில இடங்களில் அப்படி இப்படித்தான் இருக்கிறது. ஆதலால், மூஞ்சியை விறைப்பாக வைத்துக்கொண்டு, சிரிப்பு வரவில்லையே என வருத்தப்பட வேண்டாம்.

OTT கார்னர்

RIDE OR DIE

தன் முன்னாள் காதலியைச் சந்திக்கிறார் நாகசாவா. அடித்துத் துன்புறுத்தும் கணவர் பற்றி ஷினோடா முறையிட, அவரைக் கொன்றுவிட்டு இருவரும் தப்பி ஓடுகிறார்கள். இந்த இரண்டு தன்பால் ஈர்ப்பாளர்களையும் காவல்துறை துரத்த அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் ஜப்பானியத் திரைப்படமான RIDE OR DIE. ஜப்பானில் மெகா ஹிட் அடித்த மாங்கா காமிக்ஸான குன்ஜோவைத்தான் நெட்ஃப்ளிக்ஸுக்காகத் திரைப்படமாக மாற்றியிருக்கிறார் ஹிரோக்கி. தன் பால் ஈர்ப்பாளர்கள் பற்றிய படம் என்பதாலேயே வலிந்து அடல்ட் காட்சிகளைத் திணிப்பது, அவர்களை ஏளனம் செய்வது போன்றவை அதிகம் இல்லாதது ஆறுதல். இரு கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டங்களும், இது வெறுமனே ஈர்ப்பு தானா என்கிற வகையில் நகரும் திரைக்கதை படத்தின் ப்ளஸ். அப்படியும் ஆங்காங்கே அடல்ட் காட்சிகள் எட்டிப் பார்ப்பதால், STRICTLY 18+