சினிமா
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

தலைப்பைப் பார்த்து பயப்பட வேண்டாம் எனச் சொல்ல மாட்டேன். இந்தத் தொடர் அப்படியானதுதான்

OTT கார்னர்
OTT கார்னர்

Naked Director - SERIES

தலைப்பைப் பார்த்து பயப்பட வேண்டாம் எனச் சொல்ல மாட்டேன். இந்தத் தொடர் அப்படியானதுதான், ஸ்டிரிட்க்லி 18 பிளஸ். திகில், பகீர் காட்சிகளெல்லாம் இல்லை. ஆனால், கதைக்களம் அந்த மாதிரியானது. ஜப்பானிய பாலியல் திரைப்பட இயக்குநரான தோரு முரனிஷியின் வாழ்க்கையை மையமாக வைத்து நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது இந்தத் தொடர். பாலியல் திரைப்படங்களில் பிற நாடுகளுக்கும், ஜப்பானியர்களுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. சட்டங்களும் கடுமையானவை. சர்ச்சைகளுக்குப் பெயர் போன தோரு முரனிஷி, எப்படி ஜப்பானில் பாலியல் திரைப்படங்களின் மன்னர் ஆனார் என்பது இரண்டு சீசன்களாகச் சொல்லப்படுகிறது. காவல்துறை, மாஃபியா, கொலைகள், அடல்ட் காட்சிகள், புரட்சி என எல்லாவற்றையும் பேசுகிறது naked director. சாட்டிலைட் டிவிக்களின் வளர்ச்சி இத்தகைய படங்களை எப்படி பாதித்தது, தோரு முரனிஷியின் கனவு போன்றவையும் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ளன. ஓடிடிக்கு தணிக்கை வந்தால், கடுமையாக பாதிக்கப்படும் தொடர்களில் முக்கியமானது இது என்பது மட்டும் நிச்சயம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Tomorrow War - MOVIE

ஏலியன், டைம்டிராவல் என ஹாலிவுட்டின் எவர்க்ரீன் டெம்ப்ளேட்டில் 101வது முறையாக அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் படம் Tomorrow War. ‘கார்டியன்ஸ் ஆஃப் காலக்ஸி’, ‘அவெஞ்சர்ஸ்’ நாயகன் கிறிஸ் ப்ரட், யோன்னே ட்ராவ்ஸ்கி , ஜே.கே.சிம்மன்ஸ், ஜாஸ்மின் மேத்திவ், சாம் ரிச்சர்சன் எனப் பல பிரபலமான முகங்கள். சயின்ஸ் ஃபிக்‌ஷனில் சரிபாதி எமோஷனைக் கலந்து கட்டி படம் வெளியாகியிருந்தாலும், இது இப்படித்தான் போகும் என்கிற அரதப் பழைய திரைக்கதை பாணி படத்தை போர் அடிக்க வைத்துவிடுகிறது. சிறுவயது மகளாக வரும் ரியான் கியரா, பெரியவராக வரும் யோன்னே இருவரும் மகள்களாக தந்தை கிறிஸ்ஸிடம் காட்டும் பாசம் என எமோஷனல் காட்சிகள் படத்துக்குப் பெரும்பலம். ஏலியன்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படியான உருவத்திலேயே இருக்கும் எனத் தெரியவில்லை. கொஞ்சம் வித்தியாசப்படுத்துங்கள் கதாசிரியர்களே. கொரோனாவுடனே வாழப்பழகிவிட்டோம், ஏலியன்களை சமாளிக்க மாட்டோமா? அதுவும் ஒரு மூலையில் இருந்துவிட்டுப் போகட்டும். மற்றபடி, தமிழ் டப்பிங்கும் இருக்கிறது என்பதால், தாராளமாய் ஒரு விசிட் அடிக்கலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Race to the center of the earth - SERIES

வட அமெரிக்கக் கண்டத்தின் மூலை, தென் அமெரிக்கக் கண்டத்தின் முனை, தெற்காசியாவின் வியட்நாம் காடுகள், ரஷ்யாவின் அகன்ற நிலப்பரப்பு என உலகின் நான்கு திசைகளிலிருந்து பயணப்படுகின்றன நான்கு குழுக்கள். பசிபிக் பெருங்கடலின் ஓரிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு மில்லியன் டாலர்களை யார் முதலில் கண்டடைகிறார்கள் என்பதே போட்டி. அதற்கு நான்கு குழுக்களும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களையும் உடல், மன வலுவைச் சோதிக்கும் பல தடைகளையும் தாண்ட வேண்டும். கேட்க விறுவிறுப்பாக இருக்கும் இந்த தீம், பார்க்கவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. 14 நாள்கள் பயணத்தை வெறும் ஏழே எபிசோடுகளில் கடந்து செல்வதுமட்டும்தான் பிரச்னை. அதற்கும் சேர்த்து ஒளிப்பதிவும் அதில் விரியும் நிலப்பரப்புகளும் திருப்தியளிக்கின்றன. குடும்பமாக ஜாலியாக விறுவிறுப்பாக வீக் எண்டைக் கழிக்க நினைப்பவர்களுக்கு ஹாட்ஸ்டாரின் இந்த சீரிஸ் ஒரு நல்ல சாய்ஸ்.

OTT கார்னர்
OTT கார்னர்

Sara’s - MOVIE

‘பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரமல்ல’ என்று தமிழ்நாட்டுப் பெரியார் சொன்னது மலையாளத் திரைப்படமானால், அதுதான் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் ‘சாரா’ஸ்’. சினிமா இயக்குநராக வேண்டுமென்ற லட்சியம் கொண்ட சாராவுக்குக் குழந்தை பெறுவதில் விருப்பமில்லை. தன்னைப்போலவே குழந்தை பெற்றுக்கொள்வதில் உடன்பாடு இல்லாத ஜீவனைத் திருமணம் செய்கிறார். ஒரு திரைப்பட முயற்சி கனியும்வேளை, தற்செயலாகக் குழந்தை உருவாக, ஜீவன் உட்பட சுற்றம் நிர்ப்பந்தம் கொடுத்தும், குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என்ற தன் முடிவில் உறுதியாக இருக்கிறார் சாரா. சாராவின் லட்சியம் வென்றதா என்பதை அழுத்தமான கதையின் வழியே சொல்லியிருக்கும் ‘சாரா’ஸ்’ பல முக்கியமான உரையாடல்களைத் தொடங்கி வைத்திருக்கிறது. சாராவாக அன்னிபென், ஜீவனாக சன்னி வெய்ன். “ரெண்டு குழந்தைகள் பெத்து வளர்த்ததைத் தவிர வாழ்க்கையில் உங்களை நிரூபிக்கும்படி என்ன செய்திருக்கீங்க?” என்று தன் மாமியாரிடம் சாராவும், “எம்.பி.ஏ படிக்கிறதுக்கு முன்னால் நிறைய முன்தயாரிப்புகள் செஞ்ச நீங்க, பெற்றோர் ஆவதற்கு முன்பு என்ன முன் தயாரிப்பு செஞ்சீங்க?” என்று ஜீவனிடம் டாக்டரும் கேட்கும் கேள்விகள் நமக்கானவை. புனிதங்களைக் கட்டுடைக்கும் முக்கியப் படம்.