
நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுக்கப் பாராட்டுகளை அள்ளிக் குவித்த Kingdom தென்கொரிய சீரிஸின் ஸ்பெஷல் எபிசோடாக ரிலீஸாகியிருக்கிறது இது.
Wife of a Spy - Movie


கணவர் உளவாளியாக இருப்பாரோ என சந்தேகிக்கும் மனைவியின் வாழ்க்கையைச் சொல்கிறது ‘முபி’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் Wife of a Spy. மாற்று வரலாற்றுக் கதைகள் எப்போதும் சுவாரஸ்யமானவை. இரண்டாம் உலகப் போர்ச் சூழலில், பேர்ல் ஹார்பர் சம்பவத்துக்கு முன்னர் வேறு பல சம்பவங்களும் அமெரிக்காவை ஹிரோஷிமா முடிவை நோக்கி நகர்த்தியிருக்கும் என்கிற கதையைச் சொல்கிறது இத்திரைப்படம். சூழல் இறுக்கமாகும் முன்பே, சொந்த ஊருக்குச் செல்ல நினைக்கும் தொழிலதிபர் யுசாகு, மஞ்சூரியா நகரத்துக்குச் செல்கிறார். அங்கு நிகழும் சில சம்பவங்கள், ஜப்பான் நமக்குப் பாதுகாப்பான தேசம் அல்ல என முடிவு செய்ய வைக்கிறது. இவர் உளவாளியா என நினைக்கும் யுசாகுவின் மனைவி சதோகோ ஃபுகுஹரா எடுக்கும் முடிவுகளும் அதன்பின் நிகழும் சிக்கல்களும்தான் மீதிப் படம். சற்றே பொறுமையைச் சோதிக்கும் வண்ணம் நகரும் கதையென்றாலும், அழுத்தமான நடிப்பும், வித்தியாசமான கதைக்களமும், அட்டகாசமான ஒளிப்பதிவும் அப்ளாஸ் அள்ள வைக்கிறது. ஜப்பானின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான கியோஷி குரோசவா (வயது 66) இயக்கியிருக்கும் இத்திரைப்படம் வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் சில்வர் லயன் விருது வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Kingdom: Ashin of the North - series
நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுக்கப் பாராட்டுகளை அள்ளிக் குவித்த Kingdom தென்கொரிய சீரிஸின் ஸ்பெஷல் எபிசோடாக ரிலீஸாகியிருக்கிறது இது. ஸோம்பி பரவல் எங்கிருந்து தொடங்கியது என்ற முன்கதையை விவரிக்கும் ப்ரீக்வெல். கிங்டம் சீரிஸின் மிகப்பெரிய ப்ளஸ், ஒரு ஹாரர் சீரிஸில் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை, அதிகார வர்க்கத்தின் அரசியல் ஆட்டங்களைப் பேசியதுதான். இந்த எபிசோடிலும் அதைக் கடைப்பிடித்திருக்கிறார்கள். பன்றியின் கறியில் யார் எந்த பாகத்தைச் சாப்பிடுவது என்கிற உணவு அரசியல் தொடங்கி ஓரிடத்தில் குவியும் அதிகாரம் எல்லையோர மக்களை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பது வரை நுணுக்கமான விஷயங்களை ஒரு மிரட்டலான ஹாரர் கதையில் நுழைத்து அதையும் ரசிக்கும்படி சொல்லியிருப்பது தென்கொரிய ஸ்பெஷல். 90 நிமிடங்களே என்பதால் சட்டென வீக்கெண்ட் நைட்டில் பார்த்துவிடலாம். சீரிஸ் பார்க்காதவர்களுக்கும் இது தனியொரு படம் பார்த்த விளைவையே தரும். ஸோம்பி படங்களுக்கேயுரிய வன்முறை இருக்குமென்பதால் 18+ மட்டுமே!


திட்டம் இரண்டு - Movie
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் SonyLiv தளத்தில் வெளியாகியிருக்கிறது ‘திட்டம் இரண்டு.’ நகரில் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அதிலொருவர் காவல்துறை அதிகாரியான ஐஸ்வர்யா ராஜேஷின் நெருங்கிய தோழி. கடமையும் கண்ணீரும் ஒன்று சேர, கொலையாளியைக் கண்டுபிடிக்கும் தீர்மானத்தோடு போராடுகிறார் ஐஸ்வர்யா. அதன்பின் ஆங்காங்கே சின்னச் சின்ன க்ளூக்களைக் கொடுத்து இறுதி ட்விஸ்ட்டை நோக்கி நகர்கிறது கதை. இயக்குநரின் நோக்கம் சரியானதுதான் என்றாலும் பாலினம் குறித்த அவரது அரைகுறைப் புரிதல்கள் படத்தின் நோக்கத்தையே சிதைக்கின்றன. ஐஸ்வர்யா ராஜேஷும் அடிக்கடி ‘அதிர்ச்சி’ என்கிற பேரில் மிகையாய் நடித்திருக்கிறார். மோசமான பழையகால எடிட்டிங் பேட்டர்ன், ஓகேவான ஒளிப்பதிவு என எல்லா வகையிலும் ஏமாற்றுகிறது இந்தப் படம்.


Mimi - Movie
தான் நடிகையாகும் கனவை மெய்ப்பிக்க, 20 லட்சம் ரூபாய் பணத்திற்காக அமெரிக்கத் தம்பதிக்கு வாடகைத் தாயாக முடிவெடுக்கிறார் நடனக் கலைஞரான மிமி. பாதி கர்ப்பகாலத்தில், அமெரிக்கத் தம்பதி ஓடிவிட, குழந்தையை வைத்துக்கொண்டு மிமி என்ன செய்தார் என்பதே இந்த காமெடி டிராமாவின் கதை. மராட்டியப் படத்தின் இந்தி ரீமேக்காக லக்ஷ்மன் உடேகர் இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் மிமியாக க்ரித்தி ஷனோன் நடிக்க, பங்கஜ் திரிபாதி, சாய் தம்ஹான்கர் உட்பட ஒரு பெருங்கூட்டமே நடித்திருக்கிறது. படத்தின் பெரும்பலம் அதன் காமெடி. குறிப்பாக, பங்கஜ் திரிபாதி சிரீயஸாகவே தன் முகத்தை வைத்துக்கொண்டு சிறப்பான காமெடி செய்திருக்கிறார். கலகலப்பான இந்தக் குடும்ப டிராமாவில், நட்பு, சென்டிமென்ட், நெகிழ்ச்சியான உணர்வுகள் போன்ற பலவற்றுடன் வாடகைத் தாய் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் விவாதித்திருக்கிறார்கள். அதன் அரசியலில் பலருக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும், வாடகைத் தாய் Vs குழந்தையின் தாய் என்ற விவாதத்தில், சட்டத்தின் பார்வையை விடுத்து உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கச் சொல்லுகிறது இந்தப் படம்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘பரம் சுந்தரி’ பாடல் ஆட்டம்போட வைக்கிறது.