Published:Updated:

OTT கார்னர்

அந்த த்ரில் உணர்வு அப்படியே இருந்தாலும், சாகசங்களும் சுவாரஸ்ய திருப்பங்களும் மட்டும் பார்த்துப் பழகிய உணர்வையே தருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்
OTT கார்னர்

Mumbai Diaries 26/11 - SERIES

26/11/2008... பத்து பயங்கரவாதிகளின் பிடியில் மொத்த மும்பைப் பெருநகரமும் நிலைகுலைந்த நாளை அதே பதைபதைப்புடன் கொஞ்சம் கற்பனை சேர்த்துச் சித்தரிக்கிறது நிகில் அத்வானியின் மும்பை டைரீஸ் 26/11. மும்பை பயங்கரவாதத் தாக்குதலை மையப்படுத்தி ஏற்கெனவே பல படைப்புகள் வெளிவந்திருந்தாலும் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், ஹோட்டல் பணியாளர்கள் என முன்களப் பணியாளர்கள் வழி கதை சொல்லியிருக்கிறார்கள். நகரம் எங்கும் தாக்குதல்கள் நிகழ, ஓர் இரவில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குப் படையெடுக்கின்றனர். மருத்துவப் பணியாளர்கள் எப்படி அதைச் சமாளிக்கிறார்கள் என்பதே கதையின் பெரும் பகுதி. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்புடன் காட்சிகள் நகர்வது இந்த அமேசான் ப்ரைம் தொடரின் முக்கிய ப்ளஸ். மோஹித் ரெய்னா, கொங்கனா சென் ஷர்மா, டினா தேசாய் போன்ற தேர்ந்த நடிகர்களின் நடிப்பில் செம த்ரில்லர் அனுபவமாக கவனம் ஈர்க்கிறது. ஆங்காங்கே கமர்ஷியலாகச் சேர்க்கப்பட்ட புனைவுகள்தான் மைனஸ்.

OTT கார்னர்
OTT கார்னர்

Into The Night - SERIES

ஜேசக் டுகாஜ்ஜின் நாவலை மையமாக வைத்து நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்த பெல்ஜியத் தொடரான இதன் முதல் சீசன் அதிரிபுதிரி ஹிட். சூரியனே எதிரியாகிவிட, அதனிடமிருந்து தப்பிக்க, விமானம் ஒன்றில் இரவு நோக்கிப் பயணிக்கிறது ஒரு குழு. முதல் சீசனின் ஆறு எபிசோடுகளையும் ஒரே மூச்சில் பார்க்கவைத்த அதன் திரைக்கதை விறுவிறுப்பு இந்த சீசனிலும் தொடர்கிறது. ராணுவப் பாதுகாப்பு பங்கரில் தங்கும் இந்தப் பயணிகள் குழு, சூரியனைத் தவிர்த்து வாழப் பழகுகிறது. அப்போது உணவை எடுத்துவர ஒரு சிலர் மட்டும் மீண்டும் விமானத்தில் பயணத்தைத் தொடங்குகிறார்கள். இங்கே பங்கரில் ராணுவ வீரர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் மோதல் வலுக்கிறது. இறுதியில் என்ன என்பதை அடுத்த சீசனுக்கான லீடோடு முடித்திருக்கிறார்கள். கடந்த சீசன் போலவே அதே 6 எபிசோடுகள், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கதை என அதே ஃபார்மேட் இங்கேயும் நீள்கிறது. அந்த த்ரில் உணர்வு அப்படியே இருந்தாலும், சாகசங்களும் சுவாரஸ்ய திருப்பங்களும் மட்டும் பார்த்துப் பழகிய உணர்வையே தருகின்றன. மூன்றாவது சீசன் இதைச் சரி செய்யும் என நம்புவோம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Tuck Jagadish - MOVIE

பெரும் எதிர்பார்ப்பிற்குப் பின் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் நானியின் படம். நிலத்திற்காக உடன்பிறந்தவர்களையே போட்டுத்தள்ளும் ரத்த சரித்திரம் கொண்டது நானியின் ஊர். அங்கே பிரச்னைகளை சுமுகமாக முடிப்பது நாசரின் குடும்பம். இவர்களின் செல்வாக்கு பிடிக்காமல் நாசரோடு மல்லுக்கு நிற்கிறது டேனியல் பாலாஜியின் குடும்பம். ஒருகட்டத்தில் நாசர் இறந்துவிட, டேனியல் பாலாஜியோடு கைகோக்கிறார் நாசரின் மூத்த மகன் ஜெகபதி பாபு. அவரைத் திருத்தி, சிதைந்த குடும்பத்தை இணைத்து வில்லனை வீழ்த்தி இளைய மகன் நானி வெற்றி பெறுவதுதான் கதை. வழக்கமான மசாலாக் கதையின் ஒரே ப்ளஸ், நானியின் தேர்ந்த நடிப்பு மட்டுமே. நம் விக்ரமன் படங்கள் தொடங்கி லேட்டஸ்ட் `நம்ம வீட்டுப்பிள்ளை' வரை எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அடித்த கலவை இது.

OTT கார்னர்
OTT கார்னர்

Bhoot Police - MOVIE

பேய் விரட்டுவதாக ஊரை ஏமாற்றித் திரியும் இரண்டு சகோதரர்களாக சயிஃப் அலிகான், அர்ஜுன் கபூர். சயிஃப் ஜாலி கேலியாகச் சுற்ற, நிஜமானதொரு பேயைத் தன் தந்தைபோலவே விரட்ட வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் அர்ஜுன் கபூர் இருக்கிறார். நிஜமாகவே ஒரு பேயை ஓட்டும் அசைன்மென்ட்டுடன் வருகிறார் யாமி கௌதம். அவரின் டீ எஸ்டேட் கிராமத்தில் உலாவும் கிச்கண்டி பேயை, இந்தப் போலி சாமியார்கள் பிடித்தார்களா என்பதே ஒன்லைன். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் இந்தப் படம், காமெடி கலந்த ஹாரர் என்றாலும், பெரும்பாலும் ஹாரரைத் தாண்டி காமெடியே முதன்மை. சயிஃப், ஜாக்குலின் பெர்ணாண்டஸ், எஸ்டேட் மேனேஜர் மற்றும் கிராம மக்கள் காமெடி டிபார்ட்மென்ட்டிலேயே ஓவர்டைம் பார்க்க, அர்ஜுன் கபூர், யாமி கௌதம் இணை கதையை நகர்த்தப் போராடுகிறது. `பிரதர்ஸ் க்ரிம்', `சூப்பர்நேச்சுரல்' என ஹாலிவுட் படைப்புகள் வேறு கண்முன் வந்துபோகின்றன. ரொம்பவும் காமெடி கலந்துவிட்டதால், பேயையே பார்த்தாலும் பேய் பயம் வரமாட்டேன் என்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு