சினிமா
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் ‘சன்னி', நடிகர் ஜெயசூர்யாவின் 100வது படம்

OTT கார்னர்
OTT கார்னர்

Midnight Mass - SERIES

ஹாரர் படங்களுக்குப் பெயர் பெற்றவரும், ‘தி ஹாண்டிங் ஆஃப் ஹில் ஹவுஸ்' மற்றும் ‘தி ஹாண்டிங் ஆஃப் ப்ளை மேனார்' தொடர்களை இயக்கியவருமான மைக் ஃப்ளேனகனின் அடுத்த லிமிடெட் வெப்சீரிஸ். தனிப்பெரும் தீவில் ஒரு சமூகமாக நூறுபேர் வாழ்கிறார்கள். அங்கிருக்கும் சர்ச்சுக்குப் புதிய பாதிரியார் ஒருவர் வருகை தர, பல்வேறு அதிசயங்கள் அந்தத் தீவில் நிகழத் தொடங்குகின்றன. அதற்கான காரணமும், அந்தப் பாதிரியார் யார் என்ற மர்மமும்தான் இதன் மையக்கதை. ஹாரர் என்றாலும் அலறவைக்கும் திடுக்கிடல் காட்சிகள், அதிரவைக்கும் பின்னணி இசை போன்றவற்றைத் தவிர்த்து கதையின் தாக்கமாக மட்டுமே பய உணர்வை ஏற்படுத்துகிறார்கள். கட்டே இல்லாத நீண்ட உரையாடல்கள் சில இடங்களில் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏழு எபிசோடுகள் என்றாலும் எட்டு மணி நேரம் தொடர் நீள்வது மைனஸ். இருந்தபோதும் வித்தியாசமான ஸ்லோபேர்ன் ஹாரர் கதைகளைப் பார்க்க விரும்புகிறவர்களுக்கு இந்த நெட்ப்ளிக்ஸ் சீரிஸ் ஒரு நல்ல சாய்ஸ்!

OTT கார்னர்
OTT கார்னர்

Sunny - MOVIE

அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் ‘சன்னி', நடிகர் ஜெயசூர்யாவின் 100வது படம். ஜெயசூர்யா துபாயிலிருந்து கிளம்பி கொச்சிக்கு வந்து ஒரு ஹோட்டலில் க்வாரன்டீனுக்கு உள்ளாகிறார். ஒற்றை அறையில் நிகழும் கதையிலேயே ஜெயசூர்யாவின் தொழில் மற்றும் குடும்பச்சிக்கல்கள், மனித உணர்வுகளின் நுட்பம் அனைத்தும் நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதிலும் தொலைபேசிவழி கவுன்சலிங் தரும் மருத்துவருக்கும் ஜெயசூர்யாவுக்குமான உரையாடல் உறவு அழகிய கவிதை. தனக்கு மேலுள்ள தளத்தில் தங்கியிருக்கும் பெண்ணுடனான உரையாடல் ஒரு நல்ல சிறுகதைக்கான தளம். தனிமை, கொரோனா, வாழ்க்கைச்சிக்கல்கள் ஆகியவற்றை ஒரு நேர்க்கோட்டில் இணைத்து நல்லுணர்வுத் திரைப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் சங்கர்.

OTT கார்னர்
OTT கார்னர்

squid Game - SERIES

வெவ்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் மனிதர்களுக்கு வரப்பிரசாதமாக ஒரு விளையாட்டு வாய்க்கிறது. வென்றால் பணம், இல்லையேல் ரத்தம் கசியும் துன்பம். உயிர்பயம் விளையாட்டை விட்டு ஓடச்செய்ய, பணவெறி விளையாட்டை நோக்கி ஓட வைக்கிறது. சடசடவெனக் காட்சிகள் விரையும் ஒரு அட்டகாச த்ரில்லரை வெளியிட்டு அசத்தியிருக்கிறது நெட்ப்ளிக்ஸ். வெறுமனே கேம்களின் மீதான மோகமாக அல்லாமல், எமோஷனல் விஷயங்களையும் சரியான விகிதத்தில் கலந்து அசத்தியிருக்கிறார்கள். BLACK MIRROR: BANDERSNATCH, ALICE IN BORDERLAND வரிசையில் Squid Game மூலம் மீண்டுமொருமுறை அப்ளாஸ் அள்ளியிருக்கிறது நெட்ப்ளிக்ஸ். வன்முறைக் காட்சிகள் சற்று அதிகம் என்பதால் ஸ்டிரிக்ட்லி 18+. டோண்ட் மிஸ்.

OTT கார்னர்
OTT கார்னர்

Intrusion - MOVIE

பரபரப்பான நகர வாழ்க்கையை விட்டு விலகி ஊருக்கு ஒதுக்குப்புறமாய் பிரமாண்ட வீடு கட்டி வாழ்கிறது ஒரு ஜோடி. ஒருநாள் இரவு அவர்கள் வீட்டிற்குள் புகுந்து சிலர் அவர்களைத் தாக்குகிறார்கள். நடக்கும் மோதலில் அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர் கொல்லப்படுகிறார். அந்த மரணம் ஏகப்பட்ட கேள்விகளை விட்டுச் செல்கிறது. அதற்கு பதில் தேட அந்த மனைவி முற்பட, பின் நிகழும் ட்விஸ்ட்களே இந்தப் படம். விறுவிறுவெனத் தொடங்கி ஒருகட்டத்திற்குப் பின் யூகிக்க முடிவதாய் மாறுவதுதான் படத்தின் பெருங்குறை. நாயகி ப்ரீடா பின்டோ மட்டுமே தன்னையும் படத்தையும் காப்பாற்றப் போராடுகிறார். ‘Home invasion' வகைப் படங்கள் ஏராளம் வந்துவிட்ட நிலையில் கதைக்காகக் கொஞ்சமும் மெனக்கெடாமல் ஏற்கெனவே பார்த்துச் சலித்த கதைக்களத்திலேயே பயணிப்பதுதான் சோகம்.