Published:Updated:

சினிமா விகடன் : OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

ஸ்ட்ரீம்பாய்

சினிமா விகடன் : OTT கார்னர்

ஸ்ட்ரீம்பாய்

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

Bliss

க்
ரெக்கிற்கு விவாகரத்து ஆகிவிட்டது. வேலையும் போய்விட்டது. தன் மகளுடனும் மகனுடனும் நேரம் செலவழிக்க விரும்புகிறான். அப்போது ஒரு கொலைப் பழியிலிருந்து க்ரெக்கைக் காக்கும் இஸபெல்லா, அவனின் புதிய தோழியாகவும் பின்னர் காதலியாகவும் மாறுகிறாள். அவளிடம் ஓர் அசாதாரண நம்பிக்கை இருக்கிறது. அது, நாம் வாழும் வாழ்க்கை என்பது நிஜமானதல்ல. யாரோ ஆட்டுவிக்க நாம் இங்கே இருக்கிறோம் என்பதை அவள் உறுதியாக நம்புகிறாள். முதலில் இதை நம்ப மறுக்கும் க்ரெக் பின்னர் அடுத்தடுத்து நிகழும் விநோதமான சம்பவங்களால், அது உண்மைதான் என்பதை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், உண்மையில் எது நிஜம், எது பொய்? விடை சொல்லாமல் புரிய வைக்கிறது ‘ப்ளிஸ்.’

movie
movie
சினிமா விகடன் : OTT கார்னர்

சீனியர் சல்மா ஹெய்க் போதைக்கு அடிமையானவராய் சிறப்பாக நடித்துள்ளார். ஒப்புருவாக்கம் (simulation) - இது பல படங்கள் கட்டம் போட்டு வெவ்வேறு வடிவத்தில் காட்டிய கதைக்கருதான் என்றாலும் அதனுள் ஒரு காதல், தந்தை - மகள் பாசப் போராட்டம், அதனால் எடுக்கப்படும் முடிவுகள் எனப் பல்வேறு தளங்களில் பயணிக்கிறது கதை. போதை வஸ்துகள் நிரம்பிய, ஏழ்மை குடிகொண்டுள்ள, தவறுகள் பல நிறைந்த இந்த உலகம் நிஜமானதா, கண்ட கனவுகள் அனைத்தும் உண்மையென கண்முன் நிற்கும் சொர்க்க உலகம் நிஜமானதா? எது நிஜமெனச் சொல்லாமல் படம் முடிந்தாலும் நம்மால் அந்த ட்விஸ்டைப் புரிந்துகொள்ள முடிகிறது என்பது ஆறுதல். மாற்றி மாற்றி உலகைக் காட்டாமல் ஓரே மூச்சாக ஓர் இடத்திலேயே திரைக்கதையில் பாதி தங்கிவிடுவது அயர்ச்சி. உலகம் மாறும் வித்தையை இன்னமும் கொஞ்சம் மாற்றி யோசித்து மேலும் சில மாயாஜாலங்கள் சேர்த்து, காதல் கதையை இன்னும் சற்று வலுப்படுத்தியிருந்தால் இது அழியா அமரகாவியம் ஆகியிருக்கும்.

SERIES
SERIES
சினிமா விகடன் : OTT கார்னர்

Snowpiercer

லகம் உறைந்த ஒரு பனிக்காலத்தில், கடைசி மனிதர்களுக்கெனப் பனியைக் குடையும் ரயில் ஒன்றை உருவாக்குகிறார் வில்ஃபோர்டு. மனிதர்களைக் கட்டுக்குள் வைக்க, உலகத்தைப் போலவே, அங்கும் மனிதர்கள் படிநிலைகளின்படி பிரிக்கப்படுகிறார்கள். இந்த ரயிலை மெலானி என்ற பெண்மணி இயக்க, வில்ஃபோர்டுக்கு என்ன ஆனது என்பதை விவரிக்கிறது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘ஸ்நோபியர்சர்’ என்னும் வெப் சிரீஸ். இந்த ரயிலுக்குப் போட்டியாக இன்னொரு ரயிலுடன் தடதடக்க ஆரம்பித்திருக்கிறது இரண்டாவது சீசன். ‘பாராசைட்’ பட இயக்குநரால் ஒரு நாவலிலிருந்து உருவான திரைப்படமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே கதை வெளியானது. தற்போது அதை நெடுந்தொடராக ஓட்ட, இன்னும் சில பெட்டிகளை இணைத்திருக்கிறார்கள். காலத்தின் சுழற்சியில் படிநிலைகளில் மாற்றும் மனிதர்கள், அதிகாரம் கேள்விக்குள்ளாவது, கம்யூனிசம், முதலாளித்துவம் எனப் பலவற்றைப் பேசி ரசிக்க வைக்கிறது இந்தத் தொடர்.

SERIES
SERIES
சினிமா விகடன் : OTT கார்னர்

Live Telecast

பேயை வைத்துக் கதை சொல்லி நிகழ்ச்சி நடத்தும் TRP வெறிக் கூட்டம், அதையே லைவ்வாக நடத்தினால் எப்படி இருக்கும் என யோசித்துச் சிக்கலில் மாட்டிக்கொள்வதுதான் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் Live டெலிகாஸ்ட் வெப் சீரிஸ். காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி என மற்றுமொரு பெரிய திரை நடிகர் பட்டாளத்தை ஓ.டி.டி தளத்துக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. ஓ.டி.டி என்பதால் காஜலுக்கு சிகரெட்டும், ஒரு டஜன் வசவு வார்த்தைகளும் கூடுதலாகக் கொடுத்திருக்கிறார்கள். அது படத்தில் வரும் பேயைப் போலவே அந்நியமாக உறுத்துகிறது. பழிவாங்கும் பேய்களுக்கு மத்தியில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் பாவப் பேய்களைக் கையிலெடுத்து எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. ஒன்லைன் சுவாரஸ்யமாய் இருந்தாலும், அவ்வப்போது தொங்கும் திரைக்கதையும், ‘பயம்னா என்னன்னு தெரியுமா’ என பாஸ் மார்க் வாங்க முடியாத டைப்பில் நடிக்கும் நடிகர்களும் சோதிக்க வைக்கிறார்கள். 220 நிமிடங்கள் நீளும் இந்த வெப் சீரிஸை ஆங்காங்கே கட் செய்து இன்னும் சுவாரஸ்யமாக்கியிருக்கலாம்.

SERIES
SERIES
சினிமா விகடன் : OTT கார்னர்

Fireball: Visitors from Darker Worlds

நா
ம் வாழும் இந்த உலகத்தின் ஆதி உயிரினங்களான டைனோசர்களின் வீழ்ச்சிக்கு முழுமுதல் காரணம் எங்கிருந்தோ விழுந்த விண்கற்கள்தான். நம் பூமிக்கும் முந்தைய தலைமுறையிலிருந்து இங்கு வந்து ஒவ்வொரு நாளும் விழுந்துகொண்டிருக்கும் விண்கற்கள் பற்றிப் பேசுகிறது ஆப்பிள் டிவியில் வெளியாகியிருக்கும் Fireball. யூக்கட்டன் தீபகற்பத்திலிருக்கும் மெரிடாவில் நடக்கும் விண்கல் திருவிழாவில் ஆரம்பிக்கும் இந்த டாக்குமென்ட்ரி, மெக்கா, ராஜஸ்தானிலிருக்கும் சிவன் கோயில், கிறிஸ்துவம், மாயன்கள் என இந்த உலகில் வாழ்ந்த வாழும் ஒவ்வொரு குழுவும் விண்கல்லை எப்படி அணுகினர் என்பதைக் காட்சிப்படுத்துகிறது. விண்கல் வேற்றுலகிலிருந்து நமக்கு ஏதோ ஒன்றைச் சொல்ல விழைகிறது எனப் பலரும் நம்புகிறார்கள் என்பதைப் பதிவு செய்தாலும், ஆங்காங்கே பகுத்தறிவு ‘பளார்’களையும் மதங்களின் மீது அடிக்கத் தவறவில்லை. இந்த டாக்குமென்ட்ரியில் தொடர்ந்து பேசியும், அதை இயக்கியும் இருப்பது 80 வயதை நெருங்கும் தலைசிறந்த இயக்குநரான வெர்னர் ஹெர்சாக். உலகத்தின் மீது விழ எத்தனிக்கும் ஒவ்வொரு விண்கல்லையும் கண்காணிக்க ஒரு குழு இயங்கிக்கொண்டிருக்கிறதாம். தற்சமயம், எந்தப் பெரிய விண்கல்லும் விழாது என்றாலும், என்றேனும் கண்டிப்பாய் விழும் என உறுதியாய் நம்புகிறார்கள். விண்கல் பற்றிய ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்துப் படமாக்கியதில் கவனம் பெறுகிறது இந்த டாக்குமென்ட்ரி.