கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

OTT கார்னர்

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

நிகழ்கால உலகில், சூப்பர்மேன் மறைந்துவிட, அந்த எண்ணம் மீண்டும் துளிர்விடத் தொடங்குகிறது.

Zack Snyder’s Justice League - MOVIE

அதே கதை, அதே நடிகர்கள்; ஆனால், வேறு திரைக்கதை என வித்தியாசமான ஃபார்மட்டை உலகுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார் இயக்குநர் ஜேக் ஸ்நைடர். வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துக்கு இயக்குநர் ஜேக் ஸ்நைடர் எடுத்த ஜஸ்டிஸ் லீக் பிடிக்காமல்போக, வேறு ஒரு இயக்குநரை வைத்து மீதிக் காட்சிகளை எடுத்தது. அந்தப் படம் 2017-ம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிக காமெடி, தெளிவில்லாத திரைக்கதை எனப் பல்வேறு காரணங்களால் சோபிக்காமல்போனது அந்தத் திரைப்படம். ‘அப்ப நாங்க ஸ்நைடரோட வெர்ஷன பார்த்தாகணுமே’ என ரசிகர்கள் தூக்கிய போர்க்கொடிக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. உலகெங்கும் HBO MAXலும் இந்தியாவில் BookMyShow, AppleTV போன்றவற்றிலும் வெளியாகியிருக்கிறது Zack Snyder’s Justice League. முழுக்க முழுக்க வெப் சீரிஸுக்கான ஃபார்மட்டில் ஆறு பாகங்களாக, ஒவ்வொரு ஹீரோவுக்கும் முன் கதையுடன் எமோஷனலாக வெளிவந்திருக்கிறது இந்தத் திரைப்படம்.

OTT கார்னர்

வெவ்வேறு உலகங்களைக் கைப்பற்றி அழித்த டார்க்சீட், பூமியையும் அழிக்க வருகிறார். ஆனால், அதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முறியடித்துவிடுகிறார்கள் அப்போதைய சூப்பர் ஹீரோக்கள். நிகழ்கால உலகில், சூப்பர்மேன் மறைந்துவிட, அந்த எண்ணம் மீண்டும் துளிர்விடத் தொடங்குகிறது. தன் எஜமானான டார்க்சீடை வரவழைக்க, ‘மதர் பாக்ஸ்களை’க் கண்டுபிடித்து மீண்டும் அழிவுப் பாதையை தொடக்குகிறார் ஸ்டெப்பன்வுல்ஃப். அதையெப்படி இக்கால சூப்பர் ஹீரோக்கள் முறியடிக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. பேட்மேன், அக்வாமேன், சைபார்க், ஃபிளாஷ், வொண்டர் வுமன், சூப்பர் மேன் என எல்லா ஹீரோக்களின் எமோஷனல் பக்கங்களையும், ஸ்டெப்பன்வுல்ஃபின் போராட்டங்களையும் பேசுகிறது இந்த சினிமா. ஆறு பாகங்கள், அதற்கேற்ற திரைக்கதை அமைப்பு, அடுத்த பாகத்துக்கான லீடு, முன் கதைகள் என எல்லாவற்றிலும் பக்காவாக இருக்கிறது இந்தத் திரைப்படம். 4 மணி நேரம் என்பதுதான் பெரிய குறை. அதேபோல், சில காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டதே என்பதற்காக இணைத்திருக்கிறார்கள். எது எப்படியோ, ‘2017-ல் வெளிவந்த வெர்ஷனுடன் ஒப்பிடுகையில் இது எவ்வளவோ மேல்’ என்பதுதான் எல்லோருடைய விமர்சனமாக இருக்கிறது. ரசிகர்கள் நினைத்தால், எந்தவொரு பெரு நிறுவனத்தையும் பணியவைக்க முடியும் என்பதை முதல்முறையாக நிரூபித்திருக்கிறது ஜஸ்டிஸ் லீக்.

OTT கார்னர்

The Good Doctor - SERIES

சான் ஹோசே மருத்துவமனையில் அறுவைசிகிச்சை நிபுணராகச் சேர ஆசைப்படுகிறார் ஆட்டிசம் பிரச்னையுள்ள டாக்டர் ஷான் மர்ஃபி. சாவன்ட் சிண்ட்ரோம் எனப்படும் அதீத திறன் கொண்டிருப்பதாலும், அந்த மருத்துவமனையின் தலைவருக்கு நெருக்கமானவர் என்பதாலும், அந்த வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. சிலர் அதை வரவேற்கிறார்கள். சிலர் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில், ‘நாங்கள் நார்மல்’ என்று கருதுபவர்களுக்கு இடையே எப்படி தன் மருத்துவப் பயணத்தை ஷான் தொடர்கிறார் என்பதே ‘குட் டாக்டர்’ தொடர். அமேசான் ப்ரைமில் முதல் மூன்று சீசன்களும், சோனி லைவில் நான்கு சீசன்களும் வெளியாகியிருக்கின்றன. ஷான் தான் இந்த சீரிஸின் ஹீரோ. ஆனால், அவர் சூப்பர் ஹீரோவாகக் காட்டப்படவில்லை. தவறுகள் செய்கிறார், மற்றவர்களைக் காயப்படுத்துகிறார், ரிலேஷன்ஷிப்பில் தடுமாறுகிறார். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறார்! அதுதான் இந்தத் தொடரின் மிகப்பெரிய பிளஸ். ஷானை மட்டும் பிரதானப்படுத்தாமல், அவரைச் சுற்றியிருக்கும் மருத்துவர்கள், நண்பர்கள், அவர்கள் வாழ்க்கை என்றும் நகர்கிறது இந்தத் தொடர். பரவும் கொடும் நோய், மடியில் நிகழும் மரணங்கள், சக மருத்துவர்களின் இழப்பு என மருத்துவர்கள் வாழ்வின் மறுபக்கத்தையும் சொல்கிறது.

OTT கார்னர்

Penguin Bloom - MOVIE

நாம் உடைந்துவிழும் ஒவ்வொரு தருணத்திலுமிருந்தும் நம்மை மீட்க கண்டிப்பாக ஏதேனும் தூதன் வருவான் என்னும் தத்துவத்தை முன்வைக்கிறது பென்குயின் ப்ளூம். தாய்லாந்தில் விடுமுறையைக் கழிக்கச் செல்கிறது கேமரூன் ப்ளூமின் குடும்பம். எதிர்பாராத விதமாக கேமரூனின் மனைவி சாம், பால்கனியிலிருந்து கீழே விழுந்துவிடுகிறார். முதுகுப் பகுதியில் அடிபட்டு, வீல்சேரில் முடங்கிப்போகிறார். சாம் ப்ளூமின் மூன்று மகன்களும் அடிபட்ட ஒரு ஆஸ்திரேலிய மேக்பை பறவையை வீட்டுக்குள் எடுத்துவருகிறார்கள். அப்பறவை கொஞ்சம் கொஞ்சமாய் குணமாக, புதிய வாழ்க்கையின் யதார்த்தத்தை உணரத்தொடங்குகிறார் சாம். கேமரூன் ப்ளூம் தன் மனைவுக்கு நிகழ்ந்த சம்பவங்களை வைத்து எழுதிய Penguin Bloom என்ற புத்தகத்தின் திரைவடிவம்தான் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படம். எல்லா சோகங்களிலிருந்தும் நம்மை அன்பால் மேலெழச் செய்யமுடியும் என்பதனை அழகாகச் சொல்கிறது பென்குயின் ப்ளூம்.