Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

ஸ்ட்ரீம்பாய்

OTT கார்னர்

ஸ்ட்ரீம்பாய்

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்
OTT கார்னர்

OK Computer - hotstar - series

‘ரோபோ குறித்த படமென்றால் ரோபோக்கள் மனிதர்களைவிட அதிக சக்தி பெற்று உலகத்தை அடக்கி ஆள்வது’ என்ற தேய்வழக்குக் கதைகளிலிருந்து மாறுபட்டு சிந்தித்திருக்கிறது ஹாட் ஸ்டாரில் வெளியான ‘ஓகே கம்ப்யூட்டர்’ வெப்சீரிஸ். உலகளவிலான பல பிரச்னைகளைத் தீர்க்கும் மகத்தான ஆற்றல் கொண்ட ‘அஜீப்’ என்ற ரோபோவை உருவாக்குகிறது இந்திய அறிவியல்துறை. ஆனால் அஜீப்போ ஒருகட்டத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஸ்டேண்ட்-அப் காமெடியனாக மாறிவிட, ஒட்டுமொத்த மக்களும் அஜீப்பை வெறுக்கத்தொடங்குகிறார்கள். இடையில் ஒரு கொலை நிகழ, போலீஸ் அதிகாரி சாஜனும் அவரின் முன்னாள் மனைவி லட்சுமியும் நடத்தும் விசாரணையில் அஜீப் மீது சந்தேகப்பார்வை விழுகிறது. ஆனால் க்ளைமாக்ஸில் எல்லாமும் தலைகீழாக மாறுகின்றன. கடைசி எபிசோடில் முன்வைக்கப்படும் ‘மனிதர்கள் தங்கள் ஆற்றலைக் கொண்டு எதைச் சாதித்தார்கள், முதலாளித்துவத்தின் பங்கு என்ன’ என்பது போன்ற கேள்விகள் முக்கியமானவை. ஆனால் அதற்குச் சொல்லப்படும் தீர்வு விவாதிக்கப்பட வேண்டியது. பாதி எபிசோட் கேமிங்கில் நிகழ்வது உள்ளிட்ட உத்திகள் சுவாரஸ்யமானவை. ஆனால் சுமாரான மேக்கிங், நடிகர்களின் நாடகத்தனமான உடல்மொழி, தலையைச் சுற்றவைக்கும் கதைசொல்லல் ஆகியவற்றால் முழுமனதுடன் ‘ஓகே’ சொல்லமுடியவில்லை.

OTT கார்னர்
OTT கார்னர்

IRUL - Movie

மழையிரவொன்றில் தனித்திருக்கும் பங்களாவில் ஒரு காதல் ஜோடியும், இன்னொருவரும் மாட்டிக்கொள்கிறார்கள். மூவரில் ஒருவர் சீரியல் கில்லர் என்னும் த்ரில்லர் ஒன்லைனில் மெதுவாகக் கதை சொல்கிறது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘இருள்.’ நாவலாசிரியராக சௌபின் ஷஹிர். அவரின் புதுக் காதலியாக தர்ஷனா ராஜேந்திரன். அந்த வீட்டிலிருக்கும் நபராக பகத் பாசில். ‘மேடம், நான் திருடன்’ எனக் கதறும் காட்சி பகத் ஸ்பெஷல். கொரோனாச் சூழலில் எடுக்கப்பட்ட சினிமா என்பதால், படத்தில் மொத்தமே இந்த மூன்று கதாபாத்திரங்கள்தான். சிங்கிள் ஷாட்டில் நகரும் கேமரா, யார் சீரியல் கில்லர் என அலைபாய வைக்கும் திரைக்கதை போன்றவை ப்ளஸ். நம்மை அதிர்ச்சியடையச் செய்ய வைக்கும் ஜிம்மிக்ஸ்களும், நகர மறுக்கும் கதையும்தான் படத்தின் முக்கிய வில்லன். ‘மெதுவாத்தான்யா வருவான்’ என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு இந்த த்ரில்லரை நீங்கள் பார்க்கத் தயாராகலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

PAGGLAIT - Movie

திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட, அந்தக் குடும்பம் அதை எப்படி எதிர்கொள்கிறது என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறது ‘பக்லாய்ட்.’ ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் ஜோதிகா, பூமிகாவைச் சந்திக்கும் காட்சிகளை வைத்துவிட்டு, சூர்யாவுக்கு போட்டோ மாட்டிவிட்டால் பக்லாய்ட் ரெடி. சாஸ்திர சம்பிரதாயங்களை முழுக்க முழுக்கப் பின்பற்றும் குடும்பத்தில், So what மனநிலையில் இருக்கிறார் புதிதாகத் திருமணமான சான்யா மல்ஹோத்ரா. அதற்கான காரணமும், கணவரின் முந்தைய காதலும், இன்ஷூரனஸ் பணமும் என நீள்கிறது கதை. உடைந்து அழுவதோ, கூலாக பெப்ஸி ப்ளீஸ் எனக் கேட்பதோ, பிரமாதப்படுத்தியிருக்கிறார் சான்யா மல்ஹோத்ரா. முன்னாள் காதலியாக சயானி வழக்கம்போல அசத்தல். சினிமாக்களில் மாற்றங்கள் நிகழ்ந்துவரும் சூழலில், நாயகியின் இறுதி முடிவு பாலிவுட் டெம்ப்ளேட் என்றாலும், இவ்வளவு தூரம் முற்போக்காக யோசித்ததற்கே கைகுலுக்கலாம் எனத் தோன்றுகிறது.

OTT கார்னர்
OTT கார்னர்

The Irregulars - Series

ஆர்தர் கானன் டாயலின் புகழ்பெற்ற ஷெர்லாக் கதாபாத்திரத்தின் ஸ்பின் ஆஃப் சீரிஸ் இது. லண்டனுக்குள் திடீரென அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்ந்து நடக்க, அவற்றைப் பற்றி விசாரிப்பதற்காகப் பதின்பருவ இளைஞர் குழு ஒன்றை வேலைக்கு வைக்கிறார் ஷெர்லாக்கின் நண்பரான டாக்டர் வாட்சன். அந்தக் குழு வழக்குகளை விசாரிக்க விசாரிக்க, அவ்வழக்குகளுக்கும் தங்களுக்கும் தொடர்பு இருப்பதையும், வாட்சன் தங்களைத் தற்செயலாகப் பணிக்கு அமர்த்தவில்லை என்பதையும் உணர்கிறார்கள். ஷெர்லாக், வாட்சன், அந்த நண்பர்கள் குழு இவர்கள் அனைவரையும் இணைக்கும் அந்த மையப்புள்ளி நோக்கி நகர்கிறது கதை. ஷெர்லாக்காக நடித்திருக்கும் ஹென்றி லாய்டும் இளைஞர் குழுவின் தலைவியாக வரும் தாட்யா கிரஹாமும் சீரிஸின் பலம். மெதுவாக நகரும் கதை, ஆங்காங்கே யூகிக்க முடிந்த காட்சிகள், சில குழந்தைத்தனமான ட்விஸ்ட்கள் போன்றவை மைனஸ். மாயாஜாலம், துப்பறியும் கதைகள் என இருப்பதால் இது குழந்தைகளுக்கான சீரிஸ் என நினைத்துவிட வேண்டாம். பதின்பருவத்தினர் மையக் கதாபாத்திரங்கள் என்பதால் வசனங்கள் ஆங்காங்கே அடல்ட்ஸ் ஒன்லி ரகம். எட்டே எபிசோடுகள்! ஷெர்லாக்கின் எந்தப் பரிமாணத்தையும் தவறவிட விரும்பாத ரசிகர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

OTT கார்னர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism