Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

ஈழப் போரில் மத்திய அரசின் பங்கு, மத்திய அரசை ஏன் தமிழக மக்கள் விரும்புவதில்லை, வட இந்தியர்களின் அபத்தங்கள் நிறைந்த பொதுப்புத்தி போன்றவற்றையும் தொட்டுச் சென்றிருக்கிறார்கள்.

The Family Man 2 - Movie - amazon prime video

ரகசியக் காவல்துறை அதிகாரியான ஸ்ரீகாந்த் திவாரியின் குழுவினர் எப்படி தீவிரவாதத் செயல்களிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் ‘தி ஃபேமிலி மேன் 2’ தொடரின் ஒன்லைன். கேரளாவில் மூளைச்சலவை செய்யும் ISI, காஷ்மீர், பாகிஸ்தான் எனச் சுற்றித் திரிந்தது முதல் பாகம். இந்த பாகத்தில் தமிழ்நாடு, ஈழம். வெளிப்படையாக யார் எனச் சொல்லாமல் பெயர் சொல்லப்படாத ஈழப் போராளிகள், ஐ.எஸ்.ஐ தீவிரவாதம் எனக் கதை பயணிக்கிறது. ஈழத் தமிழர்கள் என்றாலே முகத்துக்குக் கறுப்பு மை பூசுவது, தமிழ்நாடு என்றாலே குடிசைகளையும், தண்ணீருக்குக் காத்திருக்கும் மக்களையும் காட்டுவது என இன்னும் பழைய பாலிவுட் படைப்பாளிகளின் அபத்த புரிதல்களிலிருந்து வட இந்தியர்கள் வெளியே வரவில்லை.

OTT கார்னர்
OTT கார்னர்

அதே சமயம், ஈழப் போரில் மத்திய அரசின் பங்கு, மத்திய அரசை ஏன் தமிழக மக்கள் விரும்புவதில்லை, வட இந்தியர்களின் அபத்தங்கள் நிறைந்த பொதுப்புத்தி போன்றவற்றையும் தொட்டுச் சென்றிருக்கிறார்கள். அதே சமயம், ஸ்லீப்பர் செல்கள் என்னும் பேராபத்தான விஷமத்தை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு படைப்பாளிகள் கையில் எடுத்து, பாதிக்கப்பட்டவர்களை மேலும் நிலைகுலையச் செய்யப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. மனோஜ் பாஜ்பாய், சமந்தாவின் நடிப்புக்காகவும் த்ரில்லர் கதைக்காகவும் ‘தி ஃபேமிலி மேன் 2’ பேசப்படும்.

OTT கார்னர்
OTT கார்னர்

The Power - Movie - amazon prime video

1970-களில் லண்டனில் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அவ்வப்போது இரவுகளில் மின்சாரம் தடைப்படும். கிழக்கு லண்டனின் அரசு மருத்துவமனையில் இந்த மின் துண்டிப்பின்போது இரவுப் பணியில் அமர்த்தப்படுகிறார் செவிலியர் வேல் (Val). அந்த ஓர் இரவு, அது கடத்தும் அமானுஷ்ய உணர்வு, அங்கே புதைந்திருக்கும் பல உண்மைகளை வெளியே கொண்டு வருகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு ‘தி கான்ஜூரிங்’ வகை ஜம்ப் ஸ்கேர் சினிமா. பிரிட்டிஷ் படமான இது முழுக்க முழுக்க சுற்றியிருக்கும் பொருள்கள், அவற்றால் ஏற்படும் விநோத சத்தங்கள், நீண்ட நெடிய இருள்மண்டிய சுவர்களிலிருந்து கேட்கும் அமானுஷ்யக் குரல்கள் என ஒரு அட்மாஸ்பியரிக் த்ரில்லராக விரிகிறது. படத்தின் 90 சதவிகிதக் காட்சிகளில் இருள்தான் என்றாலும், சிறிய லாந்தர் வெளிச்சம், ஜெனரேட்டரால் எரியும் சின்னச் சின்ன பல்புகள் எனக் கிடைத்த ஒளியை வைத்து மாயாஜாலம் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் லாரா பெல்லிங்க்ஹம். பயமுறுத்தலில் பாதி வேலையை ஒளிப்பதிவு செய்துவிட, மீதி வேலையை ஒலிப்பதிவு செய்திருக்கிறது. விதவிதமான ஒலிகள், குரல்கள் எனக் கலந்துகட்டி திகிலூட்டியிருக்கின்றனர். வேலாக ரோஸ் வில்லியம்ஸ் பதற்றம் படிந்த முகத்துடன் உலாவுகிறார். இந்தியச் சிறுமியாக வரும் ஷகிரா ரஹ்மான் ஈர்க்கிறார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு பற்றிப் பேசும் படம் என்பதாலும், பயமுறுத்தும் காட்சி அமைப்பு என்பதாலும் இளகிய மனம் படைத்தவர்கள் தவிர்த்துவிடவும்.

OTT கார்னர்
OTT கார்னர்

The woman in the window - Movie - Netflix

ஓராண்டாகத் தயாரிப்பிலிருந்து அதன்பின் ரிலீசுக்குக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் காத்திருந்து வெளியாகியிருக்கும் படம். சைக்காலஜிஸ்ட்டான ஏமி ஆடம்ஸுக்கு பொது இடங்களைக் கண்டால் பயப்படும் ஆக்ரோபோபியா பிரச்னை. அதனால் வீட்டை விட்டு வெளியே வராமல் அக்கம்பக்கத்தினரை ஜன்னல் வழியே நோட்டம்விடுவது மட்டும்தான் வேலை. அப்படி ஒருநாள் எதிர்த்த வீட்டில் ஒரு கொலை நடப்பதைப் பார்ப்பவர், போலீஸில் புகார் அளிக்கிறார். விசாரணையின்போது கொல்லப்பட்டவரே ஏமி முன் நிற்க, விஷயம் சிக்கலாகிறது. கொலை நடந்ததா, இல்லை ஏமிக்கு மனப்பிறழ்வா எனச் சுற்றியடிக்கும் திரைக்கதை பார்க்கும் நமக்கு சுவாரசியத்தைக் கொஞ்சமாகவும் சலிப்பை அதிகமாகவும் கொடுத்து ஒருவழியாய் விடை சொல்லி முடிகிறது. தேர்ந்த கலைஞரான ஏமியின் நடிப்பு மட்டுமே இதில் ஒரே ஆறுதல்.

OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

Scoob - Movie - amazon prime video

கார்ட்டூன் நெட்வொர்க் பார்த்த 90ஸ் கிட்ஸுக்குப் பரிச்சயமானதொரு பெயர் ஸ்கூபி டூ. நான்கு நண்பர்கள், ‘கோவா பட ஸ்டைல்’ வண்டி, ஒரு நாய். இந்தக் குழு எப்படி கெட்டவர்களைக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் அந்த கார்ட்டுனின் ஒன்லைன். பேய், பூதங்களுக்கு எதிரான பகுத்தறிவு கார்ட்டூன் தொடர் என்றால் மிகையாகாது என்றுகூடச் சொல்லலாம். ‘முகமூடிக்குப் பின்னால் யாரு’ என்கிற புதிருடன் ஹிட் அடித்த கார்ட்டூனைத் திரைப்படமாக வெளியிட்டிருக்கிறார்கள். கார்ட்டூன் கதாபாத்திரங்கள் தற்கால டெக்னாலஜியில் கலக்குகிறார்கள். காமெடி ஒன்லைனர்களும் அட்டகாசமாக செட் ஆகியிருக்கிறது. நாஸ்டால்ஜியா உணர்வைக் கட்டாயம் தரும் என்கிற உறுதியுடன் ஸ்கூப் சினிமாவை அமேசான் ப்ரைமில் பார்க்கலாம்.