


Jeffrey epstein filthy rich
பணம் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கான உதாரணம் ஜெஃப்ரி எப்ஸ்டீன். சிறுமிகள்மீதான பாலியல் கொடுமைக் குற்றங்களுக்காக, பல போராட்டங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட எப்ஸ்டீனின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியிருக்கிறது நெட்ப்ளிக்ஸ். அரசு, மீடியா, காவல்துறை, நீதித்துறை என எல்லாமும் எப்ஸ்டீனின் பணத்துக்கு முன் வாலாட்டின. மசாஜ் என்னும் பெயரில் சிறுமிகளை இந்த வலைக்குள் தள்ளுவது... பின் அந்தச் சிறுமிகள் மூலம் பல சிறுமிகளை இதனுள் இழுத்து இதையொரு நெட்வொர்க் போல் விரிவுபடுத்தினார் எப்ஸ்டீன். க்ளின்டன் முதல் ட்ரம்ப் வரை எல்லோருக்குமே நண்பர் எப்ஸ்டீன். அவரின் மீது கை வைக்க அனைவருமே அஞ்சினர். 2008-ல் இருந்து இன்றளவும் அடுக்கடுக்காய் வழக்குகள் குவிகின்றன (2019-ல் சிறைக்குள்ளேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எப்ஸ்டீன்). போதுமான சாட்சியங்கள் இருந்தும், துணிந்து இதைப் பற்றிப் பேச பெண்கள் தயாராய் இருந்தும் எப்ஸ்டீனுக்கு எதிராக ஓர் அணுவும் அசையவில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்த நான்கு மணி நேர டாக்குமென்டரி.
ரேட்டிங் 3.5/5


கதம் - தெலுங்கு
ஒரு விபத்தில் நினைவுகளை இழக்கும் நாயகன் தன் காதலியுடன், தொலைதூரத்தில் இருக்கும் தன் தந்தையைத் தேடிச் செல்கிறான். வழியில் கார் பிரேக்டௌன் ஆகிவிட இவர்களுக்கு உதவி செய்ய வரும் ஒருவரின் வீட்டில் அடைக்கலம் புகுகிறார்கள். அவரும் அவரின் மகனும் வசிக்கும் அந்த கேபினில் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள் இவர்களுக்குக் கலவரத்தை ஏற்படுத்த, யார் நல்லவர் யார் கெட்டவர் என்ற குழப்ப விளையாட்டைச் சுவாரஸ்யமாக நடத்துகிறது திரைக்கதை. 90 நிமிடங்களுக்குச் சற்றே அதிகமாக ஓடும் படம் சூடுபிடிக்கச் சற்று நேரம் எடுத்தாலும் பின்னர் பரபரவென ட்விஸ்ட் அடித்து டாப் கியரில் பறக்கிறது. கிட்டத்தட்ட நினைவுகளை இழந்த நாயகன் போலத்தான் நாமும் யார் நல்லவர் யார் கெட்டவர் என்ற குழப்பத்திலேயே பயணிக்கிறோம்.
ரேட்டிங்: 3/5