சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

OTT கார்னர்!

OTT கார்னர்!
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்!

- ஸ்ட்ரீம் பாய்

Roar: The Most Dangerous Movie Ever Made - Discovery Documentary

சில ‘ராமநாராயணன் டைப்’ மிருகப் படங்கள் எல்லா ஊரிலும் வெளியாகும். வெறுமனே மிருகங்களின் வாய் அசைவுக்கேற்ப எடுக்கும் படங்கள்தான் உலகெங்கிலும் கல்லா கட்டியுள்ளன. நோயல் மார்ஷல் என்பவர் சற்று வித்தியாசமாக 100 சிங்கங்கள், புலிகள், யானை என மிருகங்களுடன் ஒரு குடும்பம் வாழ்வது பற்றிய கதை ஒன்றை 1981ம் ஆண்டு வெளியிட்டார். நடிக்கும் போது ரத்தக்காயம், படக்குழுவினருக்குக் காயங்கள், மழை வெள்ளம் எனப் பல்வேறு அசம்பாவிதங்களால் 11 ஆண்டுகள் எடுக்கப்பட்ட படம். சுத்தமாக ஓடவில்லை.

OTT கார்னர்!

எந்த செட்டும், டூப்பும் இல்லாமல், நோயல் செய்த அந்த ரிஸ்க் வெளியே தெரியாமற்போனது பெருஞ்சோகம். படத்தின் மேக்கிங்கும் அமெச்சூர் ரகம்தான். இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டது என நோயல் மார்ஷலின் மகன்கள் சொல்லும் Roar: The Most Dangerous Movie Ever Made டாக்குமென்ட்ரி உண்மையில் பீதியைக் கிளப்புகிறது. மிகப்பெரிய பட்ஜெட், கைகளில் கால்களில் சிங்கங்கள் கடிப்பது, ரத்தம் பீறிடுவது என ஒரு சினிமாவுக்காக யாரும் செய்யத் துணியாத சாகசங்கள் நிறைந்த ஆவணப்படம் இது.

OTT கார்னர்!

THE BOYS - WEB SERIES - PRIME VIDEO

சினிமா உலகில் எங்கு பிரச்னை நடந்தாலும், தட்டிக்கேட்கும் நபர்கள்தான் சூப்பர் ஹீரோக்கள். உலகளவில் அதிக ரசிகர்களும் வசூலும் பெறும் படங்களும் அவைதான். ஆனால், இந்த சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் கார்ப்பரேட்டுக்கு வேலை செய்துகொண்டிருந்தால், அவர்களின் சக்தி எல்லாம் வெறும் மருந்துதான் என்றால் எப்படி இருக்கும். அதுதான் The boys தொடரின் ஒன்லைன். மக்களைக் காப்பாற்ற வேண்டுமா, இல்லை கொல்ல வேண்டுமா என எல்லாமே கார்ப்பரேட்டுகளின் முடிவுதான். இந்த சூப்பர் ஹீரோக்களைப் போட்டுத் தள்ள இவர்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒரு குழுவாக இணைகிறார்கள். தற்கால அரசியல், சமூகப் பிரச்னை எல்லாவற்றையும் அதீத நையாண்டியுடனும், சில அடல்ட் ரத்தக்களறிக் காட்சிகளுடனும் எடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான தொடர்களில், பல இளைஞரின் டாப் பேவரைட் The Boys தான்.

OTT கார்னர்!

In the Shadow of the Moon - Movie - NETFLIX

1988-ம் ஆண்டு ரத்த வெள்ளத்தில் சிலர் இறந்துகிடக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் லாக்ஹார்ட்டும், மேடாக்ஸும் இது குறித்து விசாரிக்க, ஒரு பெண் மாட்டிக்கொள்கிறாள். ‘உங்களுக்கு இன்று மகள் பிறக்கும்’ என லாக்ஹார்ட்டிடம் சொல்லிவிட்டு விபத்தில் இறக்கிறாள் அந்தப் பெண். சரியாக, ஒன்பது ஆண்டுகள் கழித்து, அதே மாடலில் கொலைகள் நடக்கின்றன. ஒன்பது ஒன்பது ஆண்டுகள் என 2042 வரை கதை விரிகிறது. சயின்ஸ் பிக்‌ஷன், டைம் டிராவல், பாசப் போராட்டம் என எல்லாம் கலந்து யூகிக்க முடியாத த்ரில்லராக முடிகிறது கதை. வித்தியாசமான படம் பார்க்க விரும்புபவர்கள் நிச்சயம் இந்தப் படத்தைத் தேர்வு செய்யலாம்.

OTT கார்னர்!

The Haunting of Bly Manor - WEB SERIES - NETFLIX

ஹாலோவீன் மாதமான அக்டோபரில் வரிசையாகப் பேய்ப்படங்கள் மற்றும் தொடர்களை இறக்குவது ஹாலிவுட்டின் வழக்கம். அதில் நெட்ப்ளிக்ஸின் இந்த வருட என்ட்ரி ‘தி ஹான்டிங் ஆப் ப்ளை மேனார்’. 2018-ம் ஆண்டு ‘தி ஹான்டிங் ஆப் ஹில் ஹவுஸ்’ என்ற தொடரின் மூலம் நம்மை அலறவிட்ட மைக் ப்ளேனகன் அதை அடையாளமாக வைத்துக்கொண்டு ‘தி ஹான்டிங்’ என்ற பெயரில் ஆந்தாலஜி கதைகளை ஒவ்வொரு சீசனாக வெளியிடத் திட்டமிட்டுள்ளார். ‘ஹில் ஹவுஸ்’ கதையில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் இதில் வெவ்வேறு பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆனால், அதுபோல பயமுறுத்தும் காட்சிகள் பெரிதாக இல்லாமல், போண்டாவுக்குள் உருளைக்கிழங்கை ஒளித்து வைப்பதுபோல பேய்க் கதைக்குள்ளே ஓர் அழகிய அமரக் காவிய காதல் கதையை ஒளித்து வைத்திருக்கிறார்கள். 2007-ல் ஒரு பெண், 1987-ல் ஒரு பழைய பண்ணை வீட்டில் நடந்த ஒரு திகில் கதையை விவரிப்பதாய் நகர்கிறது திரைக்கதை. கிராமப்புறத்தில் இருக்கும் அந்தப் பூர்வீக வீட்டில் தாய் தந்தையரை இழந்த குழந்தைகள் இருவரை (அண்ணன், தங்கை) பாதுகாக்க, படிப்பு சொல்லிக் கொடுக்க வருகிறாள் ஓர் இளம்பெண். அவளின் துயர் நிறைந்த இறந்தகாலம், அந்தப் பெரிய வீட்டின் வரலாறு, அங்கு பணியில் இருக்கும் பணிப்பெண், தோட்டத்தைப் பராமரிக்கும் பெண், சமையல்காரர் எனப் பலரின் கதைகள் பின்னிப் பிணைவதோடு பல ரகசியங்கள் வெளியே வருகின்றன. அந்தக் குழந்தைகள் இருவரும் ஏன் விநோதமாகச் செயல்படுகிறார்கள்? அந்தப் பழைய வீட்டின் ரகசியம்தான் என்ன? ஒரு புதிர்போல தன் முடிச்சுகளை அவிழ்க்கிறது இந்தத் தொடர். பொறுமை இருந்தால் ஒரு சுவாரஸ்யமான டைம்பாஸாக இருக்கும்.