சினிமா
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

உலக மக்களுக்கு நிகழவிருக்கும் ஆபத்தைத் தடுத்து நிறுத்த ஆதரவற்ற நான்கு சிறுவர்களை ஒரு மிஷனுக்கு அனுப்புகிறார் பெனெடிக்ட்.

OTT கார்னர்
OTT கார்னர்

The Mysterious Benedict Society - series

உலக மக்களுக்கு நிகழவிருக்கும் ஆபத்தைத் தடுத்து நிறுத்த ஆதரவற்ற நான்கு சிறுவர்களை ஒரு மிஷனுக்கு அனுப்புகிறார் பெனெடிக்ட். அடுத்து என்ன நடக்கிறது என்பதை எட்டு எபிசோடுகளின் வழி சொல்லியிருக்கிறது ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸான The Mysterious Benedict Society. மோர்ஸ் கோடு, குழந்தைகளுக்கான புதிர்கள் எனத் தொடரில் நடக்கும் பல விஷயங்கள் குழந்தைகளின் மனநிலையில் இருந்து பார்க்க வேண்டியது. ‘இதுல எப்படிண்ணே லைட்டு எரியும்’ என லாஜிக் கேள்விகளெல்லாம் கேட்டால், நீங்கள் அந்த வயதைத் தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம். கதையின் நாயகனாக வரும் ரெய்னி கதாபாத்திரத்தின் ஆசிரியையாக வருபவரின் பெயர் மிஸ் பெருமாள் என்பதும், அவர் தமிழ் பேசுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

OTT கார்னர்
OTT கார்னர்

The swarm - movie

நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் வித்தியாசமான பிரெஞ்சு ஹாரர் திரைப்படம். வருங்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு நிகழும்போது மக்கள் பூச்சிகளை உட்கொள்ளத் தொடங்குவார்கள் என்கிற தியரியின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம். கணவரை இழந்த விர்ஜேன், தன்னையும் இரு குழந்தைகளையும் காப்பாற்றிக்கொள்ள வெட்டுக்கிளி வளர்ப்பில் கவனம் செலுத்துகிறார். ஆனால் அதில் போதுமான லாபம் இல்லை. ஊரில் ‘பூச்சி வளர்க்கும் குடும்பம்’ என்கிற அவப்பெயரும் வேறு. தற்செயலாக ஒருநாள் பூச்சிகள் விரும்பி உண்பது ரத்தம்தான் எனத் தெரியவர, அதைத் தன் உடலிலிருந்தே எடுக்கிறார். மனிதச் சுவைக்குப் பழக்கப்பட்ட பூச்சிகள் தன்னிச்சையாக இயங்கத் தொடங்க, அதன் விளைவுகள்தான் மீதிக்கதை. தூக்கிவாரிப்போடவைக்கும் ஹாரர் ரகமில்லை. ஆனால் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்கிற ஒருவித அருவருப்பே அமானுஷ்யமாக எடுபடுகிறது. விர்ஜேனாக வரும் சுலேன் ப்ராஹிமும் ஒலிக்கலவையும் படத்தின் பலம். ஆனால் படம் குழந்தைகளுக்கானதல்ல!

OTT கார்னர்
OTT கார்னர்

Modern love - movie

‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் வெளியாகும் வாசகர்களின் காதல் கதைகளின் திரைவடிவம்தான் ‘மாடர்ன் லவ்’ ஆந்தாலஜி சீரிஸ். எட்டு எபிசோடுகள் கொண்ட இதன் இரண்டாவது சீசன் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது.

பணத்தேவை ஏற்படும்போதும் தன் முதல் கணவனின் பழைய ஸ்போர்ட்ஸ் காரை விற்கத் தயங்குகிறாள் ஒரு பெண். கடந்துபோய்விடுதல் நன்மை என்றாலும் நினைவுகளுடன் வாழ்வதும் இன்பமே என்று எடுத்துரைக்கிறது ‘On a Serpentine Road, With the Top Down.’ இரவுக்கும் பகலுக்கும் காதல் என்பதுபோல, இருவேறு வாழ்க்கைமுறை கொண்டிருக்கும் இருவர் காதலில் இணைவதுதான் ‘The Night Girl Finds a Day Boy.’

ரயிலில் சந்தித்துக் காதலில் பயணித்து, பிரியும் ஜோடி, மீண்டும் இணைந்ததா என்பதற்கு விடை சொல்கிறது Strangers on a (Dublin) Train. சிறுவயது முதலே காதலில் தவிக்கும் பெண்ணுக்கும் நட்பை மட்டுமே விரும்பும் ஆணுக்குமான காதலைச் சொல்கிறது A Life Plan for Two, Followed by One. பதின்பருவப் பெண்கள் இருவர் தங்களுக்குள் இருக்கும் தன்பால் ஈர்பபை அறிந்துகொள்வதே Am I..? Maybe This Quiz Game Will Tell Me.

திருமணம் தாண்டிய உறவினால் பிரியும் இரண்டு ஜோடிகளில், ‘ரிதம்’ பாணியில் மீதமிருக்கும் மற்ற இருவர் காதல் வயப்பட்டால் தவறாகிவிடுமா என்று கேள்வி கேட்கிறது In the Waiting Room of Estranged Spouses. முன்னாள் காதலர்கள் இருவரின் நினைவுகள் வழியே அவர்களின் இறந்தகாலத்தை நமக்குக் காட்டுகிறது ‘How Do You Remember Me?’ விவாகரத்து பெற்றுவிட்ட ஒரு ஜோடி, மீண்டும் காதலில் விழுவதைக் குறித்துப் பேசுகிறது Second Embrace, With Hearts and Eyes Open.

இறப்பைத் தாண்டிய காதல், பார்த்தவுடன் வரும் காதல், நட்புடன் ஒளிந்திருக்கும் காதல், தன்பால் ஈர்ப்பாளர்களின் காதல், விவாகரத்துக்குப் பின் வரும் காதல், கடந்துபோக முடியாத காதல், கடந்துவிட்ட காதல் என திடீரென அடிக்கும் மழைபோல நம்மை நனைக்கின்றன இந்தக் கதைகள். கிட் ஹாரிங்டன், சூசன் பிளாக்வெல் என ஒருசில தெரிந்த முகங்களே எட்டிப்பார்த்தாலும் பல கதாபாத்திரங்களுடன் நம்மால் ஒன்றிவிட முடிகிறது. நாடகத்தனம் இருந்தாலும், பிரிதல், ஒன்றுசேருதல் என்ற முடிவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, இந்த நிஜ மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள் நமக்குள் ஓர் உரையாடலைத் தொடங்கி வைக்கின்றன.