

2024 - Movie
கோ ப்ரோ, ஐபோன் எனப் பல்வேறு தொழில்நுட்பங்களில் முழுநீளத் திரைப்பட முயற்சிகள் நடந்திருக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக ‘2024' படத்தை ‘ஒன்ப்ளஸ் 9 ப்ரோ' மொபைலில் மட்டுமே எடுத்திருக்கிறார்கள். பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் விக்ரமாதித்ய மோத்வானே தயாரிப்பில், ரோஹின் ரவீந்திரன் நாயர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த ஒரு மணிநேர இந்திப் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. 2024-ம் வருடத்தில் கொரோனா போன்றே ‘C-24' என்ற வீரியமிக்க வைரஸ் தாராவியில் மையம் கொள்ள, மும்பை நகரமே லாக்டௌன் செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் வாழ்க்கைக்குத் தள்ளப்படுகிறது. இந்த வைரஸ் தாக்கியவர்கள் ஒரு சில மணிநேரத்தில் இறந்துவிடுவார்கள் என்பதால் எங்கும் கலவரம், பீதி, பயம். அப்படியானதொரு இரவில், அந்த மாநகரில் ஒன்றாக வளர்ந்த நான்கு கடவுளின் குழந்தைகள் படும் பாடுகளே கதை. அலோக்நந்தா தாஸ் குப்தாவின் பின்னணி இசையும், லினேஷ் தேசாயின் ஒளிப்பதிவும்தான் படத்தின் நிஜ ஹீரோக்கள். ஆனால், கொரோனாப் பரவல் தடுப்பைச் சிறப்பாகக் கையாண்ட தாராவியை வைரஸ் உருவாகும் இடமாகக் காட்டியிருப்பது நெருடல். அதேபோல் க்ளைமாக்ஸில் டீனேஜ் பெண்கள், அரைப்பக்க வசனத்தில் டான்களை காட்ஃபாதர்களாக மாற்றுவதெல்லாம் மலிவான மசாலா.


Money Heist - Series
ஒருவழியாக மணிஹெய்ஸ்ட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது நெட்பிளிக்ஸ். இரண்டு சீசன்களில் முடிக்க வேண்டிய தங்க வேட்டையை, கொஞ்சம் இழுத்துத்தான் பார்ப்போமே என இழுத்து, அதிலும் ஐந்தாம் சீசனை இரண்டு பாகங்களாகப் பிரித்து என, பார்வையாளர்களை ஈர்க்க எல்லாவற்றையும் செய்து பார்த்தது நெட்பிளிக்ஸ். ஆனால், எல்லாவற்றுக்கும் சேர்த்து கடைசி இரு எபிசோடுகளில் அப்ளாஸ் அள்ளிவிட்டது மணி ஹெய்ஸ்ட் டீம். புரொபசரின் திறமைக்குத் தீனி கொடுத்தது போல், ட்விஸ்ட்டுகளால் அசத்தியிருக்கிறார்கள். வெறுமனே மறைந்து நின்று தாக்கும் நபரல்ல என்பதாக நகரும் திரைக்கதை அமைப்பு, தொடருக்கு மிகப்பெரிய பிளஸ். எது எப்படியோ, முடிவு அமர்க்களமாய் அமைந்திருப்பதால், கிளாசிக் பட்டியலில் இனி நிச்சயம் மணி ஹெய்ஸ்ட்டும் இடம்பெறும். இன்னும் சில ஆண்டுகளில் பெர்லின் கதாபாத்திரத்தை வைத்துத் தனியாக ஒரு தொடர் எடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது நெட்பிளிக்ஸ். வேட்டைகள் தொடரும்.


The Power of the Dog - Movie
யாரையும் எளிதாக எடை போட்டுவிடாதீர்கள் என்கிற ஒன்லைனை அசத்தலான நடிப்புடன் சொல்கிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் The Power of the Dog. முரட்டு ஆசாமியான ஃபில்லும், எளிமையான ஜார்ஜும் சகோதரர்கள். மகன் பீட்டருடன் உணவகம் நடத்திவரும் ரோஸை ஜார்ஜ் திருமணம் செய்துகொள்வதை சகோதரர் ஃபில்லால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பெனெடிக்ட் கம்பர்பேட்ச், கிறிஸ்டன் டன்ஸ்ட் இருவருக்கும் பேசிக்கொள்ள வசனங்கள்கூடப் பெரிதாய் இல்லை. ஆனால், ஃபில்லாக வரும் கம்பர்பேட்ச் ஒவ்வொரு காட்சியிலும் வெறுப்பை உமிழ்கிறார். குடும்ப உறவுகளுக்குள் பகை மூளும்போது என்ன நிகழும் என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஜேன் கேம்பியன். பல்வேறு விருதுகளை வென்றிருக்கும் இத்திரைப்படம், ஆஸ்கர் ரேஸிலும் நிச்சயம் இடம்பெறும்.


Annette - Movie
புகழில் மங்கிக்கொண்டிருக்கும் ஸ்டாண்ட் அப் காமெடியனுக்கும் புகழின் உச்சாணிக் கொம்பிலிருக்கும் பாடகிக்கும் திருமணம் நடக்கிறது. பணம், புகழ் போதையுடன், அந்த எதுவும் இல்லாத வெறுப்பும் சூழ்ந்துகொண்டால் என்ன நடக்கும் என்பதைக் காட்டுகிறது முபியில் வெளியாகியிருக்கும் Annette. ஓபரா பாடகியாக மரியான் காடில்லார்டும், வஞ்சத்தை வைத்துக்கொண்டு தக்க சமயம் பார்த்துக் காத்திருக்கும் காமெடியனாக ஆடம் டிரைவரும் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். மியூசிக்கல் படம் என்பதால் மூச்சு விடும் இடைவெளிகளில்கூட பாடல்களால் நிரப்பியிருக்கிறார்கள். இருவரின் மகளாக வரும் ஆனட்டுக்கும் படம் முழுக்க பாடல்கள்தான். வித்தியாசமான உருவகங்களுடன் இப்படத்தை இயக்கியிருக்கிறார் லியோஸ் கரக்ஸ். ஃபேன்டசியாக நகரும் காட்சிகள் படத்தின் பிளஸ்.