Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

2012-ல் வெளியான கஹானி படத்தில் வரும் கொலைகார கேரக்டரான பாப் பிஸ்வாஸின் கதையைத் தனி ஸ்பின் ஆப் படமாக எடுத்து ஜீ5-ல் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்

OTT கார்னர்

2012-ல் வெளியான கஹானி படத்தில் வரும் கொலைகார கேரக்டரான பாப் பிஸ்வாஸின் கதையைத் தனி ஸ்பின் ஆப் படமாக எடுத்து ஜீ5-ல் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

14 Peaks: Nothing Is Impossible - Documentary

OTT கார்னர்
OTT கார்னர்

மலையேற்றத்தில் இந்த நூற்றாண்டின் சூப்பர்ஸ்டாராகக் கொண்டாடப்படுபவர் நிர்மல் புர்ஜா. மலையேற்றத்தின் எவர்கிரீன் ஜாம்பவனாகக் கருதப்படும் மெஸ்னரால் அங்கீகரிக்கப்பட்ட மிகச்சில மலையேற்ற வீரர்களில் ஒருவர். 2019-ல் உலகில் இருக்கும் எட்டாயிரம் மீட்டர்களுக்கு மேற்பட்ட 14 சிகரங்களையும் ஒரே மூச்சில் ஏறத் தொடங்குகிறார் நிர்மல். சராசரியாக ஆண்டுக்கணக்கிலாகும் இந்த முயற்சியை மொத்தமாக முடிக்க நிர்மல் எடுத்துக்கொண்ட காலம் ஆறு மாதங்கள் ஆறு நாள்கள் மட்டுமே. மலையேற்றத்தில் ஈடு இணையில்லாத சாதனையாகப் பார்க்கப்படும் அந்த அசாத்திய முயற்சியை விவரிக்கிறது நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்த ஆவணப்படம். அதுவும் எவரெஸ்ட், லோட்ஸே, மக்காலு சிகரங்களை இரண்டே நாள்களில் ஏறிக் கடப்பதைப் பார்க்கும்போது மனித முயற்சியின் எல்லைகள் விரிவடைவதை உணரமுடிகிறது. மலையேறுதல் முயற்சியோடு நேபாளிகளின் வாழ்க்கை, மலையேறுதல் வரலாற்றில் அவர்களுக்கான இடம் தொடர்ந்து மறுக்கப்படுவது, அவர்களுக்கிடையிலான நட்பு ஆகியவை பற்றியும் பேசியிருப்பது சிறப்பு. 100 நிமிடங்களில் சட்டென ஆவணப்படம் முடிந்துவிடுவதுதான் குறை.

Inside Edge - SERIES

OTT கார்னர்
OTT கார்னர்

இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் நீக்கப்பட்டு மும்பையைச் சேர்ந்த வாயூ ராகவன் தேர்ந்தெடுக்கப்படுகிறார். முதல்முறையாக இந்திய அணிக்கு ஒரு பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சற்று குழப்புகிறதா? ஆம், அதுதான் அமேசான் ப்ரைமில் தொடராக வெளிவரும் இன்சைட் தொடரின் கதை. கிரிக்கெட்டில் நடக்கும் தகிடுதத்தங்களை மையமாக வைத்து நிஜ கேரக்டர்களுக்கு வேறு பெயர்கள் சூட்டி வேறொரு கதையை உருவாக்கி ஹிட் அடித்துவருகிறார்கள். வாயூ ராகவன் என்ற வீரர் எப்படி மும்பை கிரிக்கெட் மாபியாவுடன் இணைந்து இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ஆனார்; இந்தியா - பாகிஸ்தான் தொடர்; இந்தியாவுக்காக ஆடும் காஷ்மீரி இளைஞர்; தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு உரிமை; பெட்டிங் எனப் பல விஷயங்களை உள்ளடக்கி இந்த சீசனை வடிவமைத்திருக்கிறார்கள். கேமிங், பெட்டிங் என இரண்டு விஷயங்களை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட தொடர், இந்த சீசனில் சற்றே எமோஷனல் பக்கம் ஒதுங்குவதால் சற்று தொய்வடைந்துவிடுகிறது. முதலிரண்டு சீசன்கள் தமிழில் டப் செய்யப்பட்டு இருந்தாலும், இந்த சீசன் இன்னும் தமிழில் வெளிவராதது சின்னக் குறை.

Bob Biswas - MOVIE

OTT கார்னர்
OTT கார்னர்

2012-ல் வெளியான கஹானி படத்தில் வரும் கொலைகார கேரக்டரான பாப் பிஸ்வாஸின் கதையைத் தனி ஸ்பின் ஆப் படமாக எடுத்து ஜீ5-ல் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். கஹானியில் பாப் பிஸ்வாஸாக நடித்த சஸ்வதா சாட்டர்ஜிக்குப் பதில் இந்தப் படத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கத் தொடங்கியபோதே, `சஸ்வதாவே இந்த ரோலுக்குப் பொருத்தமானவர். அவரை மாற்றவேண்டிய அவசியமென்ன?' என சர்ச்சைகள் வரிசைகட்டின. ஆனால் தானும் அந்த ரோலுக்குப் பொருத்தம்தான் என நிரூபித்திருக்கிறார் அபிஷேக். பாவம் கதைதான் அவர் உழைப்பிற்குரிய நியாயம் சேர்க்கவில்லை. விறுவிறுப்பாகத் தொடங்கி வழக்கமான த்ரில்லராக மாறி ஏமாற்றுகிறது படம். பரண் பண்டோபாத்யாயின் நடிப்பு, ஆங்காங்கே வரும் சுவாரஸ்யக் காட்சிகள் ஆகியவை எல்லாம் சேர்ந்து ஒரு ஓகேவான த்ரில்லராக, வீக் எண்டில் பார்க்கக்கூடிய படமாக இதை மாற்றுகின்றன.

சித்திரைச் செவ்வானம் - MOVIE

OTT கார்னர்
OTT கார்னர்

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்குநராக மாறியிருக்கும் படம், ஜீ5-ல் வெளியாகியிருக்கும் `சித்திரைச் செவ்வானம்.' மருத்துவமனையே இல்லாத கிராமத்தில், மின்சாரத்தாக்குதலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வழியில்லாமல் தன் மனைவியை இழக்கிறார் ஒரு விவசாயி. தன் ஊர் மக்களுக்காக சிகிச்சை அளிக்கவேண்டும் என்று மகளுக்கு மருத்துவக்கனவை விதைக்கிறார். நீட் பயிற்சி மையத்தில் படிக்கும் அந்த மகளை ஆபாச வீடியோ எடுத்துச் சில மிருகங்கள் சிதைக்கின்றன. அதற்கான நீதியைத் தேடியலையும் தந்தையின் பயணமே படம். கேட்பதற்கு நன்றாக இருக்கும் இந்த ஒன்லைன், எதிர்பார்த்த திருப்பங்கள், லாஜிக் மீறல்கள், அமெச்சூர்த்தனங்களால் நல்ல படம் ஆவதற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. மகளுக்கு இழைக்கப்பட்ட்ட அநீதி கண்டு பரிதவிக்கும் தந்தையாக சமுத்திரக்கனி உணர்ச்சிகளைக் கொட்டியிருக்கிறார். சாய் பல்லவியின் தங்கை பிரியா கண்ணன் பாசக்காட்சிகளில் தேறும் அளவுக்கு சோகக்காட்சிகளில் பொருந்தவில்லை. எதிர்பார்ப்பைத் தூண்டி ஏமாற்றத்தில் முடிகிறது ரீமா கல்லிங்கல் பாத்திரம். ஆபாச வீடியோக்களோ பாலியல் வன்முறையோ பெண்கள் துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும், முடங்கிவிடக்கூடாது என்று அழுத்தம் கொடுத்திருப்பது ஆறுதல்.