சினிமா
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

தமிழ்சினிமாவின் சூப்பர் சீனியர்கள் ஓ.டி.டி பக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து வர, இது சரத்குமாரின் முறை.

Rudra: The Edge of Darkness - SERIES

ஆங்கிலத்தில் ஹிட்டடித்த ‘லூதர்’ சீரிஸை அப்படியே இறக்குமதி செய்திருக்கிறார்கள். மும்பை க்ரைம் போலீஸ் டி.ஜி.பி-யான ருத்ர பிரதாப் சிங், தான் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு கேஸையும் எப்படித் திறம்பட முடிக்கிறார் என்பதே இந்த டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சீரிஸின் கதை. ஒரு எபிசோடுக்கு ஒரு வழக்கு, அதனூடே தொடர்ச்சியாக நடக்கும் ஒரு பிரதான கதை என்பதாக விரிகிறது இந்த 6 எபிசோடுகள் கொண்ட முதல் சீசன். திறமையான, அடாவடியான காவல் அதிகாரி, அவருக்குச் சவால்விடும் கிரிமினல்கள் என்ற ஒன்லைனை மட்டும் வைத்துக்கொண்டு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து விளையாடியிருக்கிறார்கள்.

OTT கார்னர்
OTT கார்னர்

ருத்ராவாக திரையில் தோன்றும்போது பேசாமலே மிரட்டுகிறார் அஜய் தேவ்கன். ராஷி கண்ணா, இஷா தியோல் என இரு நாயகிகளில், ராஷி கண்ணாவின் பாத்திரப் படைப்பு புதுமை. ஆனால், அவரின் ஓவர்டோஸ் ஆக்ட்டிங்தான் சமயங்களில் அதை ரசிக்கவிடாமல் செய்கிறது. கோபக்காரர் ருத்ரா எனக் காட்டுவது ஓகேதான். ஆனால், அதற்காகச் சிறிய விஷயங்களுக்குக்கூட எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு உடைக்கும் டென்ஷன் பார்ட்டியாக அவர் உலா வருவது சற்றே அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

OTT கார்னர்
OTT கார்னர்

The Bombardment - MOVIE

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் நிகழ்ந்த ஒரு துர்சம்பவத்தை மையமாக வைத்து The bombardment என்னும் டேனிஷ் மொழி சினிமாவை எடுத்திருக்கிறார்கள். கோப்பன்ஹேகன் ‘கெஸ்டப்போ’ தலைமையகத்தைத் தகர்க்க வேண்டிய குண்டுகள் அருகிலிருக்கும் பள்ளியில் விழுந்துவிடுகின்றன. அங்கிருக்கும் குழந்தைகள், ஆசிரியர்களில் யாருக்கு என்ன ஆனது என்பதைச் சொல்கிறது இந்த நெட்பிளிக்ஸ் சினிமா. போர்ச்சூழலில் கடவுளின் இருப்பு குறித்த சந்தேகத்தில் உழலும் கன்னியாஸ்திரி; கோரச் சம்பவத்தைப் பார்த்ததால் பேசும் திறனை இழந்த சிறுவன்; தவறுதலாகச் சிலரைக் கொன்றுவிட்ட மன அழுத்தத்தில் உழலும் வீரர்கள் எனப் பல கிளைக்கதைகள். சமகாலத்தில் ரஷ்யா உக்ரைனின் மருத்துவமனைகள், பொது இடங்கள், வீடுகள் போன்ற மக்கள் இருக்கும் இடங்களில்கூட தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்துவது ஏனோ இந்தப் படம் பார்க்கும் போது நினைவுக்குவருகிறது. குழந்தைகள் இருக்கும் பள்ளியில் குண்டு விழும் காட்சிகள் நிச்சயம் இளகிய மனம் படைத்தோர்க்கானது இல்லை. போர் சாமானியர்களுக்கு ஒரு நாளும் நன்மை பயக்காது என்பதை மீண்டும் அழுத்தமாய்ச் சொல்கிறது The Bombardment.

OTT கார்னர்
OTT கார்னர்

Against the Ice - MOVIE

டெக்னாலஜி வளர்ந்துவிட்ட காலத்திலும் சர்வைவல் அட்வென்ச்சர் படங்களுக்கான ஆர்வம் குறையவே இல்லை. ரியாலிட்டி ஷோ, சீரிஸ் என ஏராளமாக இந்த ஜானரில் ஓ.டி.டி தோறும் வெளியாக, இந்தப் படம் நெட்பிளிக்ஸின் பங்கு. பரந்து விரிந்த பனிப்பிரதேசமான கிரீன்லாந்தின் சில பகுதிகள் யாருக்குச் சொந்தம் என்பதில் அமெரிக்காவிற்கும் டென்மார்க்கிற்கும் பல தசாப்தங்களாக மோதல் நிலவிவந்தது. ‘கிரீன்லாந்து முழுக்க ஒரே தொடர்ச்சியான பரப்புதான். எனவே டென்மார்க்கிற்கே சொந்தம்’ என்கிற கருத்தை முன்வைத்துப் பயணம் செய்து நிரூபித்த எய்னர் மிக்கெல்சனின் நிஜப் பயணக் குறிப்புகளையே படமாக எடுத்திருக்கிறார்கள். ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ புகழ் நிக்கோலஜ் கோஸ்டர் முதன்மைக் கதாபாத்திரத்தில் படத்தைத் தாங்கி நிற்க, ஒளிப்பதிவும் துணை நிற்கிறது. பெரிய கதையைச் சொல்லி முடிக்கவேண்டுமென்பதற்காக சட்சட்டென எல்லா நிகழ்வுகளையும் கடப்பதுதான் குறை.

OTT கார்னர்
OTT கார்னர்

இரை - SERIES

தமிழ்சினிமாவின் சூப்பர் சீனியர்கள் ஓ.டி.டி பக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து வர, இது சரத்குமாரின் முறை. கொடைக்கானலில் 80களின் இறுதி தொடங்கி இப்போது வரை சிறுமிகள் தொடர்ந்து கடத்தப்படுகிறார்கள். மற்றொருபுறம் அரசியல் வி.ஐ.பி ஒருவரும் கடத்தப்படுகிறார். வி.ஐ.பி கடத்தலை விசாரிக்கக் களத்திற்குள் வரும் சரத்தை அடுத்தடுத்த திருப்பங்கள் அலைக்கழிக்க, இறுதியில் பிரச்னைகளின் மையப்புள்ளியைத் தேடி அடைவதுதான் கதை. செம பிட்டாக, குறையாத எனர்ஜியோடு வலம் வருகிறார் சரத். ஆனால் அவரோடு கண்ணாமூச்சி ஆடவேண்டிய ட்விஸ்ட்களை நாமே யூகிக்க முடிவதுதான் தொடரின் சிக்கல். கமலின் சிஷ்யர் ராஜேஷ் எம்.செல்வாதான் இயக்குநர் என ஆர்வமாய் அமர்ந்தால், மேக்கிங் தொடங்கி திரைக்கதை வரை அனைத்திலும் கொஞ்சம் ஏமாற்றமே. தமிழில் ஒரு த்ரில்லர் பார்க்க விரும்புபவர்கள் ஆஹா தமிழில் வெளியாகியிருக்கும் ‘இரை’ பக்கம் ஒதுங்கலாம்.