சினிமா
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

சோனிலைவில் வெளியாகியிருக்கும் ‘சல்யூட்’ மலையாளத் திரைப்படம். மனச்சாட்சி உறுத்தும் துணை ஆய்வாளராக துல்கர் சல்மான் அசத்தலாக நடித்திருக்கிறார்.

OTT கார்னர்
OTT கார்னர்

Jalsa - MOVIE

புகழ்பெற்ற டி.வி நிருபரான மாயா மேனன் தவறுதலாக ஒரு விபத்தை நிகழ்த்திவிட, அதனால் மன அழுத்தத்துக்கும் குற்றவுணர்வுக்கும் உள்ளாகிறார். கூடுதல் சோகமாக, அந்த விபத்தில் அடிபட்டது அவர் வீட்டில் வேலை பார்க்கும் ருக்ஸானாவின் மகள். உண்மை தெரிந்த மாயாவுக்கும், உண்மையைத் தேடும் ருக்ஸானாவுக்கும் இடையே நடக்கும் மறைமுகமான இந்த யுத்தம், அதிகாரம், பணபலம், செல்வாக்கு எனப் பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. மாயாவாக வித்யா பாலன், கறைபடிந்த கரங்களாகக் குற்றவுணர்வில் தவிக்கும்போது நமக்கும் அந்த உணர்வைக் கடத்துகிறார். பிரஜ்வால் சந்திரசேகர், அப்பாஸ் தலால், ஹுசைன் தலால் ஆகியோரின் ஸ்கிரிப்டுக்கு அட்டகாசமாக உயிர்கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் திரிவேணி. ஒரு க்ரைம் த்ரில்லராக மாற்றுவதற்கு வாய்ப்புகள் இருந்தும் ஒரு டிராமாவாக மட்டுமே திரைக்கதையை அமைத்திருப்பதால், சுவாரஸ்யம் தாண்டி, கதை பேச வந்த உணர்வுகளையும் நமக்குக் கச்சிதமாகக் கடத்துகிறது அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் ‘ஜல்சா.’

OTT கார்னர்
OTT கார்னர்

Salute - MOVIE

உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் காவல்துறை எப்படி புதிய குற்றவாளிகளைக் ‘கண்டுபிடிக்கிறது’, அதற்காகச் சாட்சியங்களும் தடயங்களும் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதை ஒரு த்ரில்லராக அம்பலப்படுத்துகிறது, சோனிலைவில் வெளியாகியிருக்கும் ‘சல்யூட்’ மலையாளத் திரைப்படம். மனச்சாட்சி உறுத்தும் துணை ஆய்வாளராக துல்கர் சல்மான் அசத்தலாக நடித்திருக்கிறார். போலீஸ் டீமின் தலைமை அதிகாரியாக, துல்கர் அண்ணனாக மனோஜ்.கே.ஜெயனின் நடிப்பும் சிறப்பு. குறிப்பாக அண்ணன் - தம்பி முரண்பாடுகள், வழக்கு தொடர்பான பிரச்னைகள் தங்கள் வீட்டுப் பெண்களுக்குத் தெரியாமல் காட்டிக்கொள்ளும் காட்சிகள் ரொம்பவே புதுசு. ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் உண்மையான குற்றவாளியை அடையும் தருணம் பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும். காவல்துறைக் கட்டமைப்பில் உள்ள இருண்ட மறுபக்கங்கள் குறித்துத் திரைப்படங்கள் வெளிவரும் சூழலில், சுவாரஸ்ய படமாக அதற்கு வலுச்சேர்த்திருக்கிறது ‘சல்யூட்.’

OTT கார்னர்
OTT கார்னர்

Deep Water - MOVIE

விவாகரத்து அக்கப்போர்களிலிருந்து விடுபட மனைவி மெலிண்டாவுக்கு ‘அளவற்ற சுதந்திரம்’ தருகிறார் பணக்காரரான விக் வேன் ஆலன். அனுமதி இருந்தாலும், பொறாமையும் கோபமும் சும்மா விட்டுவிடாது என்பதால் மெலிண்டாவின் காதலர்களுக்கு செக் மேட் வைக்கிறார் விக். அடுத்து என்ன நடக்கிறது என்பதை ‘அடல்ட் த்ரில்லர்’ பாணியில் சொல்ல நினைத்திருக்கிறார் எண்பது வயதான அட்ரியன் லின். 9½ Weeks, Fatal attraction, Lolita, Indecent proposal என இந்த வகைமைப் படங்களின் மாஸ்டரான அட்ரியன் இருபதாண்டுகளுக்குப் பிறகு இயக்க வந்திருக்கிறார் என்பதால் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அதே போல், படத்தின் நாயகர்களான பென் அஃப்லெக்கும், அனா டெ அர்மஸும் ஷூட்டிங் சமயத்தில் லிவ் இன்-னில் இருந்ததால் எதிர்பார்ப்பு இன்னும் எகிறியது. ஆனால், சர்வ சாதாரணமாகிவிட்ட விவாகரத்தும் 1957-ல் எழுதப்பட்ட நாவலின் முடிவை மாற்றுகிறேன் என இன்னும் சுமாரான க்ளைமாக்ஸை எழுதியதும் என ஏகப்பட்ட பிழைகளால் இந்த அமேசான் பிரைம் படம் த்ரில்லராக மாறவில்லை.

OTT கார்னர்
OTT கார்னர்

Lalitham Sundaram - MOVIE

பரீட்சார்த்த முயற்சிகளைப் போலவே நல்லுணர்வுத் திரைப்படங்களும் எக்கச்சக்கமாய் வெளியாகின்றன மலையாளத் திரைப்பட உலகில். சமீபத்திய பீல் குட் வகைத் திரைப்படம், ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள இந்த ‘லலிதம் சுந்தரம்.’ வளர்ந்தபின் வேலைப்பளுவில் குடும்பத்தை விட்டு விலகிச் சென்றுவிடுகிறார்கள் மூன்று பிள்ளைகள். தங்கள் அம்மாவின் நினைவு நாளுக்குப் பல ஆண்டுகள் கழித்து ஒன்றுசேரும் மூவரும் தங்களுக்குள் நிலவும் வேற்றுமைகளைக் களைகிறார்களா என்பதுதான் கதை. நம்மூர் விக்ரமன் பட பாணிதான் என்பதால் எளிதாக யூகிக்க முடிகிறதுதான். இருந்தாலும் மஞ்சு வாரியர், பிஜு மேனன் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களின் நடிப்பு இதை ஒரு வீக்கெண்ட் வாட்ச்சாக மாற்றுகிறது. ஆனால் இன்னும் எத்தனை படங்களில்தான் ஹீரோக்களின் நல்லியல்பை நிறுவ தமிழர்களை மோசமாகக் காட்டுவார்களோ தெரியவில்லை.