சினிமா
Published:Updated:

OTT கார்னர்

Apollo 10 1⁄2: A Space Age Childhood
பிரீமியம் ஸ்டோரி
News
Apollo 10 1⁄2: A Space Age Childhood

‘இதுக்குமேல என்ன இருக்கு’ என வாழ்க்கையை சலிப்பாக அணுகும் அத்தனை பேருக்கும் நம்பிக்கை அளித்த பெயர் ‘பிரவீன் டாம்பே.

Apollo 10 1⁄2: A Space Age Childhood
Apollo 10 1⁄2: A Space Age Childhood
OTT கார்னர்

Apollo 10 1⁄2: A Space Age Childhood - Movie

நிலாவில் மனிதர்கள் தரையிறங்கிய சம்பவத்தை இன்றளவிலும் புனைவு எனச் சொல்லிவரும் நபர்கள் உண்டு. மனிதர்களை ஏற்றிச் சென்ற அந்த அமெரிக்க விண்வெளி ஓடத்தின் பெயர் அப்போலோ 11. சில சின்னச்சின்னப் பிரச்னைகளால் குட்டியான ஒரு விண்வெளி ஓடத்தை உருவாக்கும் அமெரிக்கா, அதில் ஸ்டேன் என்னும் பத்து வயதுச் சிறுவனை ஏற்றிச் செல்ல விரும்புகிறது. அதன்படி நிலாவில் கால்பதிக்கப் போகும் முதல் மனிதர் ஆகிறான் ஸ்டேன். பல்வேறு கிளாசிக் சினிமாக்களை எடுத்த ரிச்சர்ட் லிங்க்லேட்டர் மீண்டும் அனிமேஷன் சினிமாவான அப்போலோ 10 1/2-உடன் நெட்பிளிக்ஸுக்கு வந்திருக்கிறார். 1960களில் டெக்ஸாஸ் மாகாணத்து வாழ்வியல், வயதான ஸ்டேனின் பார்வையில் சொல்லப்படுகிறது. ஜான் F கென்னடி இறக்கவில்லை என நம்பும் ஸ்டேனி பாட்டில் முதல் வியட்நாம் போர் வரை பல விஷயங்கள் படத்தில் பேசப்படுகின்றன. ஒரு வித்தியாசமான அனிமேஷன் திரைப்பட அனுபவத்துக்கு அப்போலோவை நீங்கள் க்ளிக் செய்யலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Kaun Pravin Tambe?- Movie

‘இதுக்குமேல என்ன இருக்கு’ என வாழ்க்கையை சலிப்பாக அணுகும் அத்தனை பேருக்கும் நம்பிக்கை அளித்த பெயர் ‘பிரவீன் டாம்பே.’ 12 வயதில் கிரிக்கெட் ஆடத் தொடங்கி 28 ஆண்டுகள் விடாமல் போராடி தன் 41வது வயதில் முதல்தர கிரிக்கெட் ஆடாமலேயே ஐ.பி.எல்லுக்குள் நுழைந்து அங்கும் அசாத்திய வெற்றிகளைக் கண்டவர். அவரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ஹாட்ஸ்டார் படம்தான் இது. அப்படியே அச்சுஅசல் டாம்பேயைத் திரையில் கொண்டுவந்திருக்கிறார் ஸ்ரேயாஸ் தல்படே. அஞ்சலி பாட்டீல், ஆஷிஷ் வித்யார்த்தி என நமக்குத் தெரிந்த முகங்களும் முதிர்ச்சியான நடிப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். ஸ்போர்ட்ஸ் படங்களுக்கான அதே டெம்ப்ளேட் என்றாலும் வியர்வையையும் உழைப்பையும் கொட்டி நம் கண்முன் சாதித்த ஒரு சராசரி இளைஞனைப் பற்றிப் பேசுவதால் கவனம் பெறுகிறது இந்தப் படம். கிரிக்கெட் பார்க்காதவர்களும்கூட வெறியும் விடாமுயற்சியும் ஒருவரை எந்த உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்கிற நிதர்சனத்தை உணர்ந்துகொள்ள கட்டாயம் பார்க்கலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

The Bubble - Movie

மார்க்கெட்டிங்கில் சூப்பராக ஸ்கோர் செய்து கதையில் வழக்கம் போல கோட்டைவிட்டிருக்கும் நெட்ப்ளிக்ஸின் மற்றுமொரு திரைப்படம். கொரோனா தொடங்கியதும் ஜுராஸிக் பார்க் உள்ளிட்ட படங்களின் நட்சத்திரங்கள் பயோ பபிளுக்குள் சென்று ஷூட்டிங்கை முடித்துக்கொடுத்தார்கள். அந்த நிகழ்வுகளை ஸ்பூப் செய்யும் முயற்சிதான் இந்தப்படம். ‘Cliff Beasts 6’ என்கிற புதுப்பட அறிவிப்பை ஒருநாள் வெளியிட்டது நெட்ப்ளிக்ஸ். ‘இப்படி ஒரு படமா? அதுவும் முன்னாடி அஞ்சு பார்ட் வந்துடுச்சா?’ என எல்லாரும் தலையைப் பிய்த்துக்கொள்ள அதன்பின் ‘அப்படி ஒரு படம் ஷூட் பண்ணப்போற நடிகர்களுக்கு பபிள்ல என்ன நடக்குதுன்னு ஒரு படம். அதான் இது’ என வாழைப்பழ காமெடி எல்லாம் செய்ய, படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்தது. கேரன் கில்லன், பெட்ரோ பாஸ்கல். நம்மூர் வீர்தாஸ் என வெரைட்டியான கலைஞர்கள் நடித்தாலும் படம் சுமாரான காமெடியின் கீழ் வருகிறது என்பதுதான் சோகம். நீளத்தைக் குறைத்திருந்தால் ஒருவேளை எடுபட்டிருக்கலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Sharmaji Namkeen - Movie

இரண்டு மகன்களுடன் டெல்லியில் வசிக்கும் 58 வயது ஷர்மாஜி, பணி ஓய்வு என வீட்டுக்கு அனுப்பப்படுகிறார். அடுத்து என்ன என யோசித்து ஏதேதோ வேலைகள் செய்து கடைசியில் பெண்களின் பார்ட்டிகளுக்கு சமைக்கத் தொடங்குகிறார். அங்கு கிடைக்கும் நண்பர்கள், மூத்த மகனின் காதல், அதற்காக அவன் போகும் எல்லைகள் இவையெல்லாம் ஷர்மாஜியை எப்படி பாதிக்கின்றன, அதிலிருந்து அவர் எப்படி மீண்டுவருகிறார் என்பதே இந்த ‘ஷர்மாஜி நாம்கீன்.’ மறைந்த ரிஷி கபூரின் கடைசிப் படம். பாதிப்படத்தில் மட்டுமே ரிஷிகபூர் இருக்க, மீதிப் படத்தில் அவர் ரோலில் நடித்திருக்கிறார் மூத்த நடிகர் பரேஷ் ராவல். அதாவது ஒரே கதாபாத்திரத்திற்கு இரண்டு நடிகர்கள். படங்களின் ஷூட்டிங் ஸ்க்ரிப்ட் வரிசைப்படி எடுக்கப்படுவதில்லை என்பதால் சில சமயம் ஒரே காட்சியில் இருவருமே மாறி மாறி வருகின்றனர். இந்த விவரம் அறியாதவர்களுக்கு இது சற்றே குழப்பத்தை ஏற்படுத்தலாம். மற்றபடி, வழக்கமான ஃபீல்குட் காமெடி டிராமாவாகவே படம் நகர்கிறது. ரிஷி கபூருக்கான இறுதி அஞ்சலியாக இந்தப் படத்தை அமேசான் ப்ரைமில் ரசிக்கலாம்.