Published:Updated:

OTT கார்னர்

The in between
பிரீமியம் ஸ்டோரி
The in between

விபத்தில் இறந்துவிட்ட காதலன், தன் காதலிக்காக சொல்ல நினைக்கும் விஷயங்கள்தான் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் The in between படத்தின் ஒன்லைன்.

OTT கார்னர்

விபத்தில் இறந்துவிட்ட காதலன், தன் காதலிக்காக சொல்ல நினைக்கும் விஷயங்கள்தான் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் The in between படத்தின் ஒன்லைன்.

Published:Updated:
The in between
பிரீமியம் ஸ்டோரி
The in between
OTT கார்னர்
OTT கார்னர்

அந்தாக்‌ஷரி (MOVIE)

அடுத்தடுத்து நடைபெறும் கொலைகளை நிகழ்த்தும் சீரியல் கில்லர் யார் என்ற வழக்கமான த்ரில்லர் கதையே, சோனி லைவில் வெளியாகியிருக்கும் ‘அந்தாக்‌ஷரி’ மலையாளத் திரைப்படம். ஆனால் ஒடுக்குமுறையும் நிராகரிப்பும் எப்படி வன்மமாகவும் வன்முறையாகவும் மாறுகிறது என்பதைச் சொன்னவிதத்திலும் நான் லீனியர் கதை சொல்லலிலும் கவர்கிறது ‘அந்தாக்‌ஷரி.’ பாட்டுக்குப் பாட்டு என்று நாம் பழகிய விளையாட்டுதான் கதையின் மூல உத்தி. ஒரு பாட்டின் எழுத்து அந்தாக்‌ஷரியில் அடுத்த பாட்டின் முதல் எழுத்தாவதைப்போல் ஒரு காரணமே அடுத்தடுத்த மரணங்களை விளைவிக்கிறது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறது படம். பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் படத்தை ஒற்றை ஆளாகத் தாங்கிப்பிடிப்பது இன்ஸ்பெக்டராக வரும் சாஜு குரூப். இதுமாதிரியான சஸ்பென்ஸ் படத்தில் பார்வையாளர்களை ஏமாற்றுவதற்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள், காட்சிகள் முழுமையடையாமல் இருப்பது முக்கியமான பலவீனம்.

OTT கார்னர்
OTT கார்னர்

அனந்தம் (SERIES)

1951-ல் கட்டப்பட்ட ‘அனந்தம்’ வீட்டில் வெவ்வேறு காலகட்டங்களில் வசித்த வெவ்வேறு குடும்பங்களின் கதைகளாக விரிகிறது ஜீ5-ல் வெளியாகியிருக்கும் இந்த வெப்சீரிஸ். சென்டிமென்ட், ஹாரர், த்ரில்லர், ரொமான்ஸ் என வெவ்வேறு ஜானர் கொண்ட கதைகளைத் தன் திரைக்கதையின் மூலம் ஒரே கதையாகச் சாமர்த்தியமாக இணைத்திருக்கிறார் இயக்குநர் பிரியா. தன்பால் ஈர்ப்பு, சிறார் வதை, வயது வித்தியாசம் பார்க்காமல் வரும் காதல் என அதிகம் பேசப்படாத கதைகளை அதற்குரிய புரிதலுடன் கையாண்டிருப்பது சிறப்பு. சம்பத், விவேக் பிரசன்னா, ஜான் விஜய், இந்திரஜா, வினோதினி வைத்தியநாதன், அம்ருதா ஸ்ரீனிவாசன் எனப் பலர் நடித்திருந்தாலும் பிரகாஷ்ராஜ் மற்றும் வினோத் கிஷன் இருவருமே தனி முத்திரை பதிக்கின்றனர். குறிப்பாக, இறுமாப்பு கொண்ட அப்பாவாக பிரகாஷ்ராஜ் இறுதி எபிசோடில் மிளிர்கிறார். பாரதியாரின் பாடல்களை ஆங்காங்கே கதைக்குப் பொருந்தும் வகையில் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. பீரியட் கதைகள் என்னும்போது வீட்டின் பெயின்டை மட்டும் மாற்றி மாற்றிச் சமாளிக்காமல் மேக்கிங்கிற்கும் சிறிது மெனக்கெட்டிருக்கலாம். கொஞ்சம் மெலோடிராமாவைத் தவிர்த்து, வசனங்களின் நாடகத்தன்மையையும் குறைத்திருந்தால் ‘அனந்தம்’ இன்னும் ஆனந்தம் சேர்த்திருக்கும்.

OTT கார்னர்
OTT கார்னர்

The in between (MOVIE)

விபத்தில் இறந்துவிட்ட காதலன், தன் காதலிக்காக சொல்ல நினைக்கும் விஷயங்கள்தான் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் The in between படத்தின் ஒன்லைன். புகைப்படக் கலைஞரான டெஸ்ஸாவும் ஸ்கைலரும் திரையரங்கம் ஒன்றில் சந்தித்துக் கொள்கிறார்கள். எந்த அறிமுகமும் இன்றி பிரியும் இருவரும், மீண்டும் இணைகையில் காதல் பிறக்கிறது. காதலித்த தருணங்களும், மருத்துவமனை நாட்களுக்குப் பின்னான டெஸ்ஸாவின் வாழ்வும் நான் லீனியராகச் சொல்லப்படுகிறது. ஒன்றாய் இருந்த தருணங்களின் நினைவுகள் டெஸ்ஸாவை வாட்டுகிறது. பிரிந்துவிடும் காதல்தான் உன்னதமான காவியமாக ‌மாறுகிறது என முதல் அறிமுகத்தில் சினிமா உதாரணங்களைச் சொல்லிச் சிரிக்கும் டெஸ்ஸாவுக்கு வாழ்வும் அப்படியே அமைந்துவிடுகிறதா, அல்லது, மரணம் கண்ட காதலனை காதலுக்காக அடைய முயல்கிறாளா டெஸ்ஸா என்பதாகச் செல்கிறது இந்தத் திரைப்படம். இதற்கிடையே அதீத ஃபேன்டஸியாக நிகழும் சில சம்பவங்கள்தான் படத்தைக் கீழ் இழுத்துவிடுகிறது. டெஸ்ஸாவாக வரும் ஜோயி கிங்கின் நடிப்பும், மெலடி பாடல்களும் பிளஸ்‌. எமோஷனலான ஒரு ஃபேன்டஸி காதல் கதை பார்க்க விரும்பும் காதலர்கள் இந்தப் படத்தை க்ளிக் செய்யலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Return to Space (DOCUMENTARY)

கடந்த பத்தாண்டுகளாக நாசா தன் விண்வெளி வீரர்களை அனுப்ப ரஷ்யாவையே நம்பியிருந்தது. அமெரிக்கத் தயாரிப்பான ஸ்பேஸ் ஷட்டில்களை பெரும் பொருட்செலவு காரணமாகவும் விபத்துகள் காரணமாகவும் நாசா நிறுத்தியதே இதற்குக் காரணம். மாறிவந்த அரசியல் சூழ்நிலைகளால் நாசா ரஷ்யாவை விடுத்து வேறொரு ஆப்ஷன் தேடியபோது அங்கே ஜம்மென வந்து அமர்ந்த ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் முயற்சிகள் பற்றியதே இந்த நெட்ப்ளிக்ஸ் ஆவணப்படம். நிறைய பணம், அதைவிட நிறைய நம்பிக்கை என சின்னக் குழுவோடு ‘வாழ்வா சாவா’ நிலையில் தொடங்கிய எலான் மஸ்க்கின் பயணம் இன்று விண்ணைத் தாண்டும் வெற்றியாக மாறியது எப்படி என்பதை விவரித்தாலும் ஆங்காங்கே ‘மஸ்க் மட்டும் இல்லன்னா என்னவாகியிருக்கும்?’ எனத் துதிபாடும் தொனிதான் இந்த டாக்குமென்ட்ரியின் முக்கிய மைனஸ். ஒரே மகனை பூமியில் விட்டுவிட்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணப்படும் ஜோடியின் வாழ்க்கை, தொடக்கக் காலத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தோடு இருக்கும் ஊழியர்களின் கதை என சில நெகிழ்ச்சிப் பக்கங்களும் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism