சினிமா
தொடர்கள்
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

மம்மூட்டி, பார்வதி, நெடுமுடி வேணு, இந்திரன்ஸ் என மலையாளத்தின் அசகாய நடிகர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து கொண்டுவந்திருக்கும் படைப்பு இது

OTT கார்னர்
OTT கார்னர்

Russian Doll Season 2 - Web Series

நடாஷா லயோன் எழுதி, நடித்து, சில எபிசோடுகளை இயக்கவும் செய்த `ரஷ்யன் டால்' சீசன் 1 நெட்ப்ளிக்ஸில் வெளியாகிப் பெரும் வரவேற்பு பெற்றது. அதன் இரண்டாவது சீசன் இது. கதையின் முக்கிய மாந்தர்களான நாடியாவும், ஆலனும் 6-ம் நம்பர் டிரெயினில் பயணித்தால் அவர்களின் இறந்தகாலத்துக்குப் போகிறார்கள். இறந்தகாலத்தில் நாடியா தன் அம்மாவாகவும், ஆலன் தன் பாட்டியாகவும் உடல்ரீதியாக மாறிவிட, அங்கே அவர்கள் செய்யும் மாற்றங்கள் அவர்களின் நிகழ்காலத்தையும் மாற்றுகின்றன. முதல் சீசன் உயிர் பிழைத்திருப்பதைப் பற்றி என்றால், இந்த சீசன் `உயிர் வாழ்வது என்றால் என்ன' என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இருத்தலியல் பிரச்னைகள், தலைமுறை இடைவெளி, பெற்றோர்களின் முடிவுகள் குழந்தைகளை பாதிப்பது எனத் தத்துவரீதியாகவும் விளையாடியிருக்கிறார்கள். காலத்தையே வளைத்துச் சொல்லும் திரைக்கதை என்றாலும் குழப்பமின்றி நகர்வது இத்தொடரின் பெரும்பலம். அட்டகாசமான வசனங்கள். வித்தியாச முயற்சிகளை விரும்புவர்களுக்கு சரியான சீரிஸ்.

OTT கார்னர்
OTT கார்னர்

The 7 Lives Of Lea - Web Series

டைம்டிராவலில் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையையும் மிக்ஸ் செய்த சயின்ஸ் பிக்‌ஷன் ஃபேன்டஸி, நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள The 7 Lives Of Lea. பார்ட்டி ஒன்றில் போதை மாத்திரைகளை அதிகமாக உட்கொள்ளும் லியா அங்கிருக்கும் ஒரு பிணத்தைக் கண்டுபிடிக்கிறார். வீட்டுக்குச் சென்று தூங்கும் லியா, காலையில் இஸ்மேலின் உடலில் விழிக்கிறார். எனவே1991-ம் ஆண்டு நடக்கும் நிலப்பரப்புக்குச் செல்கிறார் லியா. இஸ்மேல் எப்படி இறந்தார், லியாவின் குடும்பத்துக்கும் இஸ்மேல் குடும்பத்துக்கும் என்ன பிரச்னை என்பதையெல்லாம் அடுத்தடுத்த எபிசோடில் விவரிக்கிறார்கள். முதல் நாள் இஸ்மேலின் உடல், அடுத்த நாள் தன் தாயின் உடல், அடுத்த நாள் தந்தை உடல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உடலில் லியா எழுகிறார். இஸ்மேலைக் காப்பாற்ற லியா எடுக்கும் முடிவு என்ன என்பதை சஸ்பென்ஸ் கலந்து சொல்கிறது இந்த பிரெஞ்சு படைப்பு. வித்தியாசமான கதைக்களத்தை ரசிப்பவர்களுக்கான வெப் சீரிஸ் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

Puzhu - Movie

மம்மூட்டி, பார்வதி, நெடுமுடி வேணு, இந்திரன்ஸ் என மலையாளத்தின் அசகாய நடிகர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து கொண்டுவந்திருக்கும் படைப்பு இது. ஆதிக்க சாதியைச் சேர்ந்த மம்மூட்டியால் தன் தங்கை பார்வதி ஒரு ஒடுக்கப்பட்டவரைத் திருமணம் செய்துகொண்டதைத் தாங்க முடியவில்லை. மனதிற்குள் பொருமிக்கொண்டே இருக்கிறார். மற்றொருபுறம் மம்மூட்டியைக் கொல்ல தொடர்ச்சியாய் முயற்சிகள் நடக்கின்றன. இந்த இரண்டும் ஒன்றிணையும் புள்ளியில் உண்மையை நம் மேல் அறைகிறது படம். சாதியம், ஆணாதிக்கம், குடும்பக் கட்டமைப்பில் நிகழும் வன்முறை ஆகியவற்றை அழுத்தமாய்ப் பேசியவகையில் முக்கிய சினிமாவாகிறது சோனி லைவில் வெளியாகியிருக்கும் புழு. மெதுவாய் நகரும் த்ரில்லர் என்பதால் பொறுமை அவசியம். ஆயினும் தன் நடிப்பால் நம்மை படம் நடக்கும் உலகத்திற்குள் இழுத்துச் செல்கிறார் மம்மூட்டி. நாடகத்தின் வழியே கதையை நகர்த்திக் கருத்தும் சொன்னவகையில் அறிமுக இயக்குநர் ரதீனா கவனம் ஈர்க்கிறார்.

OTT கார்னர்
OTT கார்னர்

12th Man - Movie

இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த இணை மோகன் லால் - ஜீத்து ஜோசப். த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 என இரண்டு பாகங்கள், அதன் பன்மொழி ரீமேக்குகள் என ட்ரெண்ட்செட்டர் ஜோடி இது. அதனாலயே அவர்கள் அடுத்ததாய் ஜோடி சேர்ந்த இந்தப் படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியது. ஒரு மழைநாளில் ரிசார்ட் ஒன்றில் கல்லூரிக்கால நண்பர்களும் அவர்களின் வாழ்க்கைத்துணைகளும் பார்ட்டி செய்கிறார்கள். அப்போது அவர்கள் விளையாடும் ஒரு விளையாட்டு ஒவ்வொருவரைப் பற்றிய ரகசியங்களையும் அம்பலமாக்க, விளைவு, ஒரு மரணம். குற்றவாளி யார் என மோகன்லால் துப்பறிவதுதான் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் இதன் மீதிக்கதை. ஏகப்பட்ட நடிகர்கள், அவர்களுக்கான பின்கதைகள் என படம் ரொம்பவே நீளம். அதை முடிந்தவரை சுவாரஸ்யமாக்க முயல்கிறார் ஜீத்து. உளவியல் சிக்கலை ஒரு `குற்றமாய்' சொல்லியிருப்பது உறுத்தல். அகதா க்றிஸ்டி சாயல் கதையை இன்னமுமே சுருக்கமாய்ச் சொல்லியிருக்கலாம்.