சினிமா
தொடர்கள்
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

ஜோஸ் ஆண்ட்ரே - அமெரிக்காவின் புகழ்பெற்ற குக். செஃப் என்பதைவிட குக் என்கிற பதமே அவருக்குப் பிடித்தமானது என்கிறார்.

OTT கார்னர்

சுழல்: The Vortex - SERIES

சாம்பலூரில் இருக்கும் சிமென்ட் தொழிற்சாலை இரவோடு இரவாகத் தீக்கிரையாகிறது. கூடுதல் அதிர்ச்சியாக, யூனியன் தலைவர் பார்த்திபனின் இரண்டாவது மகள் காணாமல்போகிறாள். அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களைச் சமாளித்து, காணாமல்போன பெண் என்னவானாள் என்பதைத் துப்புத்துலக்குகிறது அந்த ஊர் போலீஸ் டீம். புஷ்கர் - காயத்ரியின் எழுத்தில், பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கத்தில் 8 எபிசோடுகள் கொண்ட துப்பறியும் த்ரில்லர் கதையாக விரிகிறது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் `சுழல்.' மென்சோகம் ஒரு பக்கம் இழையோடினாலும் துணிச்சலான பெண் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஊருடன் ஒத்துவாழும் புத்திசாலி எஸ்.ஐ-யாகக் கதிர், அடாவடியாக அட்டகாசம் செய்யும் இன்ஸ்பெக்டராக ஸ்ரேயா ரெட்டி என அனைத்து முக்கியமான பாத்திரங்களும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. கதை தேங்கி நிற்கும் அந்தவொரு எபிசோடைத் தவிர, அங்கே இங்கே நகரவிடாமல், தொடர் திருப்பங்களுடன் தடதடக்கிறது திரைக்கதை. யார் குற்றவாளி என்று யூகிக்கும் விளையாட்டை இறுதி எபிசோடுவரை நீட்டித்திருப்பது நல்லதொரு ஸ்க்ரிப்ட்டின் அடையாளம். சாம் சி.எஸ்-ஸின் பின்னணி இசை, அருணின் கலை இயக்கம், முகேஸ்வரனின் ஒளிப்பதிவும் கூடுதல் பிரமிப்பைச் சேர்க்கின்றன. தமிழில் தவறவிடக்கூடாத ஒரு வெப்சீரிஸ்!

OTT கார்னர்

We feed People - Documentary

ஜோஸ் ஆண்ட்ரே - அமெரிக்காவின் புகழ்பெற்ற குக். செஃப் என்பதைவிட குக் என்கிற பதமே அவருக்குப் பிடித்தமானது என்கிறார். அமெரிக்கா முழுக்க உணவகங்கள், பல மில்லியன் டாலர் பரிவர்த்தனை என பிசினஸ் ஒருபக்கமிருந்தாலும் ஆண்ட்ரே அறியப்படுவது அவரின் மனிதநேயச் செயல்களுக்காகத்தான். உலகம் முழுக்க இயற்கைச் சீற்றங்கள் எங்கே நடந்தாலும் அங்கே தனது என்.ஜி.ஓவான 'World Central Kitchen' குழுவினரோடு களமிறங்கி பாதிக்கப்பட்டவர்களின் பசியாற்றுகிறார். ஒரு நாளைக்கு லட்சம் பேருக்குச் சமைப்பது, செஞ்சிலுவைச் சங்கம், வல்லரசு நாடுகளே கைவிட்ட இடங்களில் ஒரு சின்னக் குழுவோடு பம்பரமாய்ச் சுழல்வது என அவரின் சேவையைப் பேசும் ஹாட்ஸ்டார் ஆவணப்படமே இது. பேரிடர்களில் மிஞ்சி நிற்பது பசியும் அதனைப் போக்கும் மனிதமும்தான் என அழுத்தமாய், நெகிழ்ச்சியாய்ச் சொல்லிச்செல்கிறது இந்த ஆவணப்படம்.

OTT கார்னர்

‘இன்னலே வரே’ - MOVIE

`சயின்ஸ் ஃபிக்‌ஷன்' படம் எடுக்கும் ஹீரோவை அதே சயின்ஸ் டெக்னாலஜி உதவியுடன் சைலன்டாகக் கடத்திப் பணம் பறிப்பதே சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘இன்னலே வரே' படத்தின் ஒன்லைன். படத்திலும் ஹீரோவாகவே வரும் ஆசிஃப் அலி மூன்று படங்களை எடுத்து தொடர் தோல்விகளைச் சந்திக்கிறார். வட்டிக்குக் கடன் கொடுத்தவர்கள் கட்டிப்போட்டு அடிக்காத குறையாய் டார்ச்சர் செய்கிறார்கள். பணத்திற்காக இன்னல்படும் சூழலிலும் ஆசிஃப் அலியைக் கடத்தி ஒரு வீட்டில் அடைத்து வைத்துப் பணம் கேட்டு மிரட்டுகிறார் நாயகி நிமிஷா சஜயன். ஹீரோ ஆசிஃப் அலி ஏன் கடத்தப்பட்டார்? நிமிஷா சஜயனுக்கு அப்படி என்னதான் ஹீரோவுடன் பிரச்னை என்பதே `இன்னலே வரே' மீதிக்கதை. விறுவிறுப்பாகப் படம் சென்றாலும் முடிவை எட்டும் கணங்களில், ‘என்ன, லாஜிக்கே இல்லையே’ என்று யோசிக்கவைக்கிறது.

OTT கார்னர்

குத்துக்கு பத்து - SERIES

ஒருவரின் செயலால் சங்கிலித் தொடர் போல் சில விஷயங்கள் நடக்கின்றன. நடக்கும் எல்லா துன்பவியல் சம்பவங்களுக்கும் காரணம் யார் என்பதை காமெடியாகச் சொல்லியிருக்கிறது ஆஹா தமிழில் வெளியாகியிருக்கும் குத்துக்கு பத்து. ஒரு தலைக் காதல், மெக்கானிக்கின் கோபம், எம்.எல்.ஏ செய்யும் துரோகம், ரங்கபாஷ்யத்தின் அட்ராசிட்டி எனப் பல்வேறு கிளைக்கதைகளைத் தாங்கிச் செல்கிறது குத்துக்கு பத்து. துள்ளுவதோ இளமை, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என எபிசோடின் பெயர்களில் கூட காமெடியைச் சேர்த்திருக்கிறார் இயக்குநர் விஜய் வரதராஜ். எல்லாவற்றையும் மீறி தன் மகனுக்காகப் போராடும் தாவூத் கதாபாத்திரத்தின் மூலம் இந்தக்கால சூப்பர் சீனியர் நடிகர்களையும் நக்கலடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் பின்னணி இசை , தமிழ் சினிமாவில் புதியதொரு முயற்சியாகவே இருக்கும். அதிக அளவில் வசவுச் சொற்கள் திரையை மீறிக்கொண்டு கரைபுரண்டு வருவதால் கட்டாயமாக வயது வந்தோருக்கு மட்டும். ஓ.டி.டி-யில் வித்தியாசமாக ஏதாவது பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் இதை லைக் செய்யலாம்.