சினிமா
பேட்டிகள்
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

குழந்தைகளுக்கான ஹாரர் படங்கள் என்ற வெற்றிடத்தை நிரப்புவதற்காகவே நெட்ப்ளிக்ஸ் இறக்கியிருக்கும் படம் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

Kaanekkaane - MOVIE

டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் SonyLiv தளத்தில் வெளியாகியிருக்கும் மலையாளப்படம். த்ரில்லர் படம் எடுப்பதில் மலையாள இயக்குநர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருக்கும் போல. தன் மகளை விபத்தில் பறிகொடுக்கும் சுராஜ் வெஞ்சரமூடு, மறுமணம் செய்துகொண்ட மருமகனிடமே பேரனை வளர்க்கக்கொடுக்கிறார். அவ்வப்போது போய் அவனைப் பார்த்துவிட்டு வருவது மட்டுமே அவருக்கான ஆசுவாசம். அப்படி ஒருமுறை மருமகன் டொவினோ வீட்டிற்குப் போகும்போது அவருக்குச் சில உண்மைகள் தெரிய வருகின்றன. பின் நிகழும் விறுவிறு சம்பவங்களே கதை. திரைக்கதை ட்விஸ்ட்கள் எல்லாம் தாண்டி மனதில் ஆணியடித்து நிற்பது சுராஜ் என்கிற பெருங்கலைஞனின் நடிப்பாற்றல்தான். யூகிக்க முடிந்த க்ளைமாக்ஸ் மட்டுமே படத்தின் மைனஸ். வீக்கெண்ட் பார்க்க வேண்டிய பட லிஸ்ட்டில் கண்டிப்பாய் இந்தப் படத்தைச் சேர்த்துக்கொள்ளலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Schumacher (Documentary)

மைக்கேல் ஷூமேக்கர் - 90களில் உலகம் முழுக்க உச்சரித்த பெயர். ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தைக் கண்டங்கள் தாண்டிக் கொண்டு போய்ச் சேர்த்த முகம். அவரின் தொடக்கம், கோ கார்ட் ரேஸிங்கிலிருந்து ஃபார்முலா ஒன் வரை வளர்ந்தது, அவரின் ஆதர்சமும் பரம வைரியுமான சென்னாவின் மரணம், பெராரியுடனான ஆரம்பக்கால முட்டல் மோதல்கள், பெராரிக்கு வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுத்தந்தது என ப்ரொபஷனலாக அவரின் சாதனைகள் மட்டுமல்லாமல் பர்சனல் பக்கங்களை நிறைய பேசியிருக்கிறது நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்த ஆவணப்படம். புகைப்படங்கள், நேர்காணல்கள், ரேஸ் வீடியோக்கள் வழியே காலவரிசைப்படி கதை சொல்லியிருக்கும் விதம் ஈர்க்கிறது. முக்கியமாக களத்தில் சென்னாவிற்கு நிகழ்ந்ததைப் பற்றி ஷூமேக்கர் பேசும்போது அவரின் இன்றைய நிலையைப் பொருத்திப் பார்த்து மனம் கனத்துப்போகிறது. ‘வெற்றிக்காக எந்த எல்லைக்கும் போவார்’ என ஷூமேக்கர் மேலிருக்கும் குற்றச்சாட்டுகள், விபத்து நிகழ்ந்து ஏழாண்டுகள் ஆகியும் அவரின் உடல்நிலை குறித்த தகவல்கள் ஆகியவை பற்றி இந்த ஆவணப்படம் பேசாததுதான் குறை.

OTT கார்னர்
OTT கார்னர்

Nightbooks - MOVIE

குழந்தைகளுக்கான ஹாரர் படங்கள் என்ற வெற்றிடத்தை நிரப்புவதற்காகவே நெட்ப்ளிக்ஸ் இறக்கியிருக்கும் படம் இது. பேய்க்கதைகளை எழுதிக் குவிக்கும் அலெக்ஸ் என்கிற சிறுவனுக்கு அவை மட்டுமே உலகம். அதனாலேயே அவனைப் பள்ளியில் மற்ற மாணவர்கள் ஒதுக்குகிறார்கள். ஒருநாள் திடீரென அலெக்ஸ் கடத்தப்படுகிறான். கடத்திய மந்திரவாதிக்கு அவன் தினமும் ஒரு பேய்க்கதை சொல்லவேண்டும். இல்லையென்றால் அவன் கொல்லப்படுவான். இந்த டீலுக்கிடையில் அவனும் அங்கு ஏற்கெனவே அடைபட்டிருக்கும் இன்னொரு சிறுமியும் எப்படி மந்திரவாதியை ஏமாற்றித் தப்பிக்கிறார்கள் என்பதே கதை. வண்ணங்களாலான கலை இயக்கம், ஆங்காங்கே தெறிக்கும் குறும்புகள், சின்னச் சின்ன ட்விஸ்ட்கள், நடுநடுவே பயம் என ஜாலியாய் நகர்கிறது படம். குழந்தைகளுக்கான கதை என்பதால் பெரியவர்களும் லாஜிக் பார்க்காமல் டைம்பாஸ் செய்யலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Sex Education - SERIES

மூர்டேலில் இருக்கும் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையைச் சுற்றி நடக்கிறது ‌நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸான Sex education. உண்மையில் ‌பாடத்திட்டமும் கல்வியும் இங்கு மாணவர்களுக்கிடையேயான பாலியல் பிரச்னைகளை எப்படி அணுகுகிறது என்பதைச் சொல்கிறது இத்தொடர். ஓட்டிஸ், மேவ் என்ற இரு மாணவர்களைப் பற்றி நகர ஆரம்பித்த தொடர் தற்போது மூன்றாவது சீசனில் அந்தப் பள்ளியைச் சார்ந்த மாணவர்கள், அவர்களின் குடும்பங்கள், பாலியல் பிரச்னைகள் போன்றவற்றையும் அலசுகிறது. Pan sexual (முழு ஈர்ப்பினர்), Non binary போன்ற பிரிவினர் குறித்த உரையாடலைச் சமூக வலைதளங்களில் ஒலிக்க வைத்ததில் இந்த சீரிஸின் பங்கு அளப்பரியது. முதல் இரண்டு சீசன்கள் அளவுக்கு மூன்றாவது சீசன் அடர்த்தியாக ‌இல்லை என்றாலும், சக மனிதர்களின் பாலியல் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. வயது வந்த அனைவரும் பார்க்க வேண்டிய தொடர் என்றாலும் strictly 18+ எனச் சொல்ல வேண்டிய சமூகத்தில்தான் வாழ்கிறோம்.