சினிமா
தொடர்கள்
Published:Updated:

OTT கார்னர்

Ms Marvel - Series
பிரீமியம் ஸ்டோரி
News
Ms Marvel - Series

மார்வெல் யுனிவர்ஸின் வெப் சிரீஸ் வரிசையில் புதிய வரவு, ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் Ms Marvel.

OTT கார்னர்
OTT கார்னர்

The Longest Night - Series

நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஸ்பானிய மொழி த்ரில்லர். பல ஆண்டுகளாக போலீஸைத் தடுமாற வைத்துக்கொண்டிருக்கும் சீரியல் கில்லர் பற்றிய க்ளூ கிடைக்க, அவனைக் கைது செய்கிறார்கள். வழக்கமான சிறைக்குக் கொண்டு செல்லாமல், பாதுகாப்பு குறைந்த ஒரு மனநலக் காப்பகத்தோடு கூடிய சிறை ஒன்றில் அவனை அடைக்கிறார்கள். விடிந்தால் வழக்கின் விசாரணை. நள்ளிரவில் அந்தச் சிறையின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தாக்குதல் நடத்தும் கும்பலின் ஒரே கோரிக்கை, அந்த சீரியல் கில்லரைத் தங்களிடம் உயிரோடு ஒப்படைக்கவேண்டும் என்பதுதான். அந்தக் கும்பலை அதிகாரிகளும் நோயாளிகளும் எப்படி சமாளிக்கிறார்கள் என்கிற பரபர கதையை ஆறே எபிசோடுகளில் போரடிக்காமல் சொல்லியிருக்கிறார்கள். தொடர் நெடுக எக்கச்சக்க கேள்விகளை நமக்குள் எழுப்பிவிட்டு பாதிக்கு பதிலே சொல்லாமல் முதல் சீசனை முடித்திருப்பது மட்டுமே மைனஸ். குட்டியாய், விறுவிறுப்பாய் ஒரு த்ரில்லர் பார்க்க நினைப்பவர்களுக்கு ஏற்ற சாய்ஸ் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

Ms Marvel - Series

மார்வெல் யுனிவர்ஸின் வெப் சிரீஸ் வரிசையில் புதிய வரவு, ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் Ms Marvel. பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த கமாலா கானின் குடும்பப் பின்னணியையும், அவரின் குடும்பத்துக்கு இருக்கும் அபூர்வ சக்திகளையும் பற்றி விவரிக்கிறது இந்தத் தொடர். கமாலா கானாக இமான் வெல்லனி அசத்தலான தேர்வு. அடுத்து வரவிருக்கும் ‘தி மார்வெல்’ என்னும் திரைப்படத்திலும் அவரே நடிக்கவிருக்கிறார் என்பதால் இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது. அதைப் பூர்த்தி செய்திருக்கிறார் இமான் வெல்லனி. சூப்பர் ஹீரோ கதைகளின் வழியாக இந்திய - பாகிஸ்தான் பிரிவினையையும், மக்கள் அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் காட்டியிருப்பது சிறப்பு. இந்திய, பாகிஸ்தானிய விண்டேஜ் பாடல்கள் பலவற்றை இந்தத் தொடரில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில் லிங்கா பாடலும் அடக்கம். 2K கிட்ஸ் இந்திய பாகிஸ்தான் பிரிவு வரலாற்றை அறிந்துகொள்ள இந்தத் தொடரைப் பரிந்துரை செய்யலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

The Sea Beast - Movie

`The Inevitable' என்ற பெயருடைய வேட்டைக்கார கப்பலின் கேப்டன் க்ரோவுக்கு, கடல் மிருகங்களிலேயே கொடியதான ரெட் பிளஸ்டரை அழிக்கவேண்டும் என்பதே லட்சியம். தன் வளர்ப்பு மகன் ஜேக்கப்புடன் இணைந்து ரெட் பிளஸ்டரைத் தேடிப் பயணிக்கிறார். வேட்டையில் ஆர்வமுள்ள மெய்ஸி என்னும் சிறுமியும் இவர்களுக்கே தெரியாமல் பயணத்தில் இணைந்துகொள்கிறாள். மெய்ஸி், ஜேக்கப் கண்டறியும் ரகசியங்களும், செய்யும் சாகசங்களுமே படம். நெட்ப்ளிக்ஸின் முழுநீள அனிமேஷன் படமான இதை இயக்கியிருப்பவர் டிஸ்னியின் ஆஸ்தான கிரியேட்டர்களில் ஒருவரான கிறிஸ் வில்லியம்ஸ். நடுக்கடலில் விநோத மிருகங்களுடன் நடக்கும் சண்டைக் காட்சிகளை அட்டகாசமாக உருவாக்கியிருக்கிறார் கிறிஸ். நல்ல மெசேஜ், அட்டகாசமான மேக்கிங் என ஒரு பக்கா அனிமேஷன் படத்துக்கான எல்லா பாக்ஸையும் டிக் அடிக்கலாம். குறிப்பாக, ``You can be a hero and still be wrong’’ போன்ற வசனங்கள் நச்!

OTT கார்னர்
OTT கார்னர்

Meme Boys - Series

கல்லூரி மாணவர்களுக்கும் டீனுக்கும் நடக்கும் யுத்தமே சோனி லைவில் வெளியாகியிருக்கும் இந்த ‘மீம் பாய்ஸ்’ தொடரின் ஒன்லைன். நான்கு மாணவர்கள், ‘மீம்ஃபெஸ்ட்’ என்னும் போட்டிக்காக தங்கள் கல்லூரியை நக்கல் அடித்து மீம்கள் வெளியிட, ஒவ்வொன்றும் தீயாய் ஹிட் அடிக்கிறது. கடுப்பாகிறது கல்லூரி நிர்வாகம். இவர்களுக்குள் நிகழும் சண்டைகளை ஜாலி, கேலி, ரகளை என எட்டு எபிசோடுகளாக எடுத்திருக்கிறார்கள். ஆதித்யா பாஸ்கர், ஜெயந்த், நம்ரிதா, சித்தார்த்துடன் குரு சோமசுந்தரம், படவா கோபி என கல்லூரிக்குள் காமெடியாய் காட்சிகள் நகர்கின்றன. எல்லாவற்றிலும் நகைச்சுவையைப் புகுத்த வேண்டும் என வலிந்து திணித்திருப்பதாலேயே எமோசனல் காட்சிகள் பெரிதாக ஈர்க்கவில்லை. லாஜிக் இல்லையென்றாலும், இக்கால இளைஞர்கள் பயன்படுத்தும் பல வார்த்தைகளுடன் ஒரு காமெடி தொடர் வந்திருப்பதே ஆரோக்கியமான விஷயம் என்பதால் இத்தகைய தொடர்களை வரவேற்கலாம்.