
இருவருக்கும் நடக்கும் உரையாடலும் அதன் பிறகு நிகழும் திகில் திருப்பங்களும்தான் இந்த ‘Mirrage.' காமெடிக்குப் பெயர்போன இயக்குநர் ராஜேஷ், த்ரில்லர் பக்கம் வந்திருக்கிறார்
Victim
இயக்குநர்கள் பா.இரஞ்சித், ராஜேஷ்.எம், சிம்புதேவன், வெங்கட் பிரபு ஆகிய நால்வரின் இயக்கத்தில் சோனி லைவ் ஓ.டி.டி-யில் வெளியாகியிருக்கிறது இந்த ஆந்தாலஜி சினிமா.
தம்மம்
குறுகியதொரு பாதையில் இருவர் எதிரெதிரே வர, யார் கீழிறங்கி வழிவிடுவது என்பதைக்கூடச் சாதியே தீர்மானிக்கிறது என்கிறது இந்த ‘தம்மம்.' ஓர் உயிரைக் காப்பதைவிட இங்கே ரத்தத்துக்கு பதிலாக ரத்தம் எடுப்பதையே சாதிவெறி விரும்புகிறது என்பதைச் சமரசமின்றிப் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். குருசோமசுந்தரம், அவரின் மகளாக வரும் பூர்வதாரிணி, கலையரசன் என அனைவருமே தங்களின் பாத்திரங்களை உள்வாங்கி நடித்திருக்கின்றனர். இசையமைப்பாளர் தேன்மா பல இடங்களில் அமைதி காத்து, பின்னர் இசைத்து நம்மைப் பதறவைக்கிறார். சிறுமி மீன் பிடிக்கும் காட்சி, வயல்வெளிகள், புத்தர் சிலை என மேக்கிங்கிலும் சிறப்பானதொரு படைப்பு.

Confession
வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பல ரகசியங்களைத் தன்னுள் வைத்திருக்கும் அமலா பாலிடம் வாக்குமூலம் பெற வருகிறார் ஸ்னைபர் கொலைகாரரான பிரசன்னா. இருவருக்கும் இடையேயான போன் கால் என்னும் ஆடுபுலி ஆட்டத்தை ஒரு ட்விஸ்ட்டுடன் முடித்தால் அதுதான் வெங்கட் பிரபுவின் ‘Confession.' ஸ்டைலாக பிரசன்னா தலைகாட்ட, அமலா பால் பதற்ற உணர்வைச் சிறப்பாகவே கொண்டு வந்திருக்கிறார். அந்த ட்விஸ்ட் அட்டகாசம் என்றாலும், அங்கேயே முடிந்துவிட்ட கதையை அதன் பிறகும் ஜவ்வாக இழுத்திருப்பது சறுக்கல். ‘எல்லோருக்கும் ஒரு கறுப்புப் பக்கம் உண்டு' என்று சொல்லும் கதையில் ஆணின் நியாய தர்மங்கள் மட்டுமே பிரதானப்படுவது சற்றே சிக்கலான அணுகுமுறை.


Mirrage
சென்னைக்கு ஒரு வேலையாக வரும் பிரியாபவானி சங்கர், நடராஜ் (நட்டி) மேனேஜராக இருக்கும் ரிசார்ட்டில் தங்குகிறார். இருவருக்கும் நடக்கும் உரையாடலும் அதன் பிறகு நிகழும் திகில் திருப்பங்களும்தான் இந்த ‘Mirrage.' காமெடிக்குப் பெயர்போன இயக்குநர் ராஜேஷ், த்ரில்லர் பக்கம் வந்திருக்கிறார். ஆனால், அதற்கேற்ற வலுவான ஸ்கிரிப்ட் மிஸ்ஸிங். நடிப்பில் நட்டி பாஸ் மார்க் பெற்றாலும், ட்விஸ்ட் என்று வரும் விஷயங்கள் எல்லாம் பல குறும்படங்களில் பார்த்துப் பழகிய ஒன்றுதான். மனநலப் பிரச்னை, அதற்கான விழிப்புணர்வு என்பது குறித்தெல்லாம் ஆழமாகச் சிந்திக்காமல் ட்விஸ்ட்டுக்காக மட்டுமே அதைப் பயன்படுத்தி எண்டு கார்டு போடுகிறார் இயக்குநர்.

கொட்டைப் பாக்கு வத்தலும்... மொட்டை மாடி சித்தரும்!
கொரோனா லாக்டௌனால் வேலையிழக்கும் அபாயத்திலிருக்கும் பத்திரிகையாளர் தம்பி ராமையா, பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் சித்தர் ஒருவரைப் பேட்டியெடுத்துத் தன் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார். சித்தர் நாசருக்கும், தம்பி ராமையாவுக்கும் நடக்கும் கலகல உரையாடலே இந்தக் குறும்படம். இயக்குநர் சிம்புதேவன் வழக்கம்போல ட்விஸ்ட்டுகள் கலந்த பேன்டஸி கதையை நகைச்சுவையுடன் கொடுக்க முயன்றிருக்கிறார். தம்பி ராமையா மிகை நடிப்பை அள்ளிக்கொட்ட, நாசர் மட்டுமே நம் மனதில் நிற்கிறார். முடிவிலும் வித்தியாசமாக நான்கு க்ளைமாக்ஸ்கள் என்று யோசித்திருந்தாலும், அவை நிஜமான க்ளைமாக்ஸின் நீட்சிகளாக மட்டுமே விரிகின்றன.



Paper Rocket (Series)
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் Zee5 தளத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் சீரிஸ் இது. தந்தையை இழந்த துக்கத்தில் இருக்கும் காளிதாஸ் ஜெயராம், கவுன்சலிங்கில் சிலரைச் சந்திக்கிறார். வெவ்வேறு சோகங்களைச் சுமந்தபடி வாழும் அவர்கள் அத்தனை பேரின் ஒரே ஆசை - ஒரு நெடிய பயணம் போகவேண்டும் என்பது. தன் அப்பாவுக்குச் செய்யும் கடமையாய் நினைத்து காளிதாஸ் அந்தப் பயணத்தை ஒருங்கிணைக்க, அதன்பின்னான நிகழ்வுகள்தான் கதை. காளிதாஸ், தன்யா, ரேணுகா, கருணாகரன் என நடித்திருக்கும் அனைவருமே ஏதோவொரு தருணத்தில் நம்மை நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறார்கள். இசை, இந்தத் தொடரின் பெரும்பலம். மரணம், உளவியல் சிக்கல்கள் ஆகியவை குறித்த முதிர்ச்சியான உரையாடல்களை நிகழ்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர். எளிதில் யூகித்துவிடக்கூடிய கதையமைப்பும் சில இடங்களில் செயற்கையாய் நாடகத்தன்மையோடு திணிக்கப்பட்டுள்ள சென்டிமென்ட் காட்சிகளும் மைனஸ். நல்லுணர்வுத் திரைப்படங்கள் தமிழில் அரிதாகிவரும் இந்தச் சூழலில், அப்படியொரு தொடரை குடும்பமாய்ப் பார்க்க நினைப்பவர்களுக்கு ஏற்ற சாய்ஸ் இது.


Street Food: USA (Series)
நெட்ப்ளிக்ஸின் Street Food தொடர் மிகவும் பிரபலம். ஒவ்வொரு பிரதேசத்தின் சாலையோர உணவுகளையும் அவற்றின் பின்னணியையும் விவரிக்கும் சீரிஸ் இது. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இதன் முதல் சீசனில் இந்தியாவில் டெல்லியின் உணவைப் பற்றி மட்டுமே இந்தத் தொடர் பேச, அப்போதே அது சர்ச்சையானது. இந்த முறை அமெரிக்காவின் ஆறு முக்கிய நகரங்களில் உட்கொள்ளப்படும் சாலையோர உணவுகள், அவற்றைத் தயாரிக்கும் குடும்பங்களின் கதை, அதன் பின்னாலுள்ள பொருளாதார, அரசியல் காரணங்கள் என கொஞ்சம் நிறையவே பேச முயன்றிருக்கிறார்கள். அமெரிக்கா என்பது உலகெங்கிலும் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தின் ஒன்றியமே என்பதை மீண்டும் அழுத்தமாக நிறுவுகிறது இந்தச் சாலையோர உணவுகள் சொல்லும் வரலாறு. மேக்கிங்கில் எப்போதும் நெட்ப்ளிக்ஸ் குறை வைக்காதென்பதால் கண்கள் உணவின் மீதான காதலால் நிறைய, காதுகள் கதை கேட்டு மகிழ என சாப்பாட்டுப்பிரியர்களுக்கு ஏற்ற சீரிஸ் இது.