
க்ரூட் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு விஷயங்களின் தொகுப்புதான் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் I Am Groot.


Only Murders in the Building - Series
அப்பார்ட்மென்ட்டில் நடக்கும் கொலை குறித்து மூன்று நபர்கள் செய்யும் பாட்காஸ்ட்டும், அந்தக் கொலைக்கும் அவர்களுக்குமான சம்பந்தமும்தான் ஹாட்ஸ்டாரில் வந்துகொண்டிருக்கும் Only Murders in the Building. உலக அளவில் ஹுலுவில் வெளியான தொடர், நமக்கு ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. ஸ்டீவ் மார்ட்டின், மார்ட்டின் ஷார்ட், செலினா கோம்ஸ் மூவரும்தான் கதையின் நாயகர்கள். செலினா கோம்ஸுக்கும் அந்தக் கொலைக்குமான சம்பந்தம் என்ன என்பதை முதல் சீசனில் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொல்ல, இரண்டாம் சீசனிலோ இந்த மூவருமே கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆகிறார்கள். அந்தக் கொலையாளியைத் தேடும் பயணத்தில் ஒவ்வொருவரும் தம் தந்தையுடனான, மகனுடனான உறவை மீண்டும் திரும்பிப் பார்க்கத் தொடங்குகிறார்கள். முதல் சீசனுக்குக் கிடைத்த அதே வரவேற்பு இரண்டாவது சீசனுக்கும் கிடைத்திருக்கிறது. கொலையும் தேடலும் பற்றிய தொடராக இருந்தாலும், அந்த அப்பார்ட்மென்ட் மாந்தர்கள்போல் நாமும் ஹாயாகப் பார்க்கலாம்.


I Am Groot - Series
க்ரூட் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு விஷயங்களின் தொகுப்புதான் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் I Am Groot. மார்வெல் சினிமாக்களில் ஒரு பகுதியான கார்டியன்ஸ் ஆஃப் காலக்ஸியில் எல்லோருக்கும் பிடித்த கதாபாத்திரம் க்ரூட்தான். அந்தக் கதாபாத்திரம் சொல்லும் ஒரே வாக்கியம், I am Groot. அதில் என்ன சுவாரஸ்யம் என்கிறீர்களா? வெவ்வேறு தொனியில் இதே வசனத்தை மாற்றி மாற்றிப் பேசி அசத்தியிருப்பார், இந்தக் கதாபாத்திரத்துக்குக் குரலுதவி செய்த வின் டீசல். குழந்தைப் பருவத்தில் இருந்து க்ரூட் சந்திக்கும் வித்தியாசமான பிரச்னைகளை நகைச்சுவையாக இதில் சொல்லியிருக்கிறார்கள். இதிலும் க்ரூட் சொல்லும் வசனம் I am groot தான். ‘Groot's First Steps’, ‘The Little Guy’, ‘Groot's Pursuit’, ‘Groot Takes a Bath’, ‘Magnum Opus’ என ஒவ்வொரு குறும்படத்திலும் ஒவ்வொரு குட்டிக் கதை. க்ரூட்டே குட்டி என்றால், க்ரூட்டை விடவும் குட்டியாக இருக்கும் உயிரினங்களுடனான ‘The little guy' குறும்படம் இன்னும் முரட்டுக் காமெடி. இதுபோலவே இன்னும் ஐந்து குறும்படங்களை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இப்படி சின்னச் சின்னப் படங்களாக எடுப்பதற்குப் பதிலாக க்ரூட்டை வைத்து ஒரு முழுநீளப் படமே எடுக்கும் அளவுக்கு ரசிகர்களின் சூப்பர் ஹீரோவாக மாறியிருக்கிறார் க்ரூட்.


Day Shift - Movie
இரண்டு உலகங்கள் இயங்குகின்றன அமெரிக்காவில். ஒன்று, காலையில் வேலைக்குப் போய் மாலையில் வீடடையும் சராசரி மனிதர்களுக்கானது. மற்றொன்று, அப்படி வீட்டுக்கு வராமல் வெளியே இரவில் சுற்றியபடி மனிதர்களை வேட்டையாடும் ரத்தக்காட்டேரிகளுக்கானது. இந்த ரத்தக்காட்டேரிகளை வேட்டையாட என ஒரு குழு, அவர்களை அங்கீகரிக்க ஒரு சங்கம், ரத்தக்காட்டேரிகளுக்குள் இருக்கும் இனப்பிரிவுகள், கொல்லப்படும் ரத்தக்காட்டேரியின் இனத்தையும் பல்லையும் பொறுத்துப் பரிசு என ஏகப்பட்ட ரகளையான ஐடியாக்களை வைத்திருக்கிறார்கள் இந்தப் படத்தில். ஆனால் நல்ல ஐடியாவை சொதப்பி சுமார் படைப்பாக மாற்றுவதுதானே நெட்ப்ளிக்ஸின் வழக்கம். எனவே இந்தப் படத்தையும் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் எனக் குழப்பியடித்திருக்கிறார்கள். ஹீரோ ஜேமி பாக்ஸ் என்பதால் நகைச்சுவைக்குப் பஞ்சமிருக்காது என உட்கார்ந்தால் அங்கும் ஏமாற்றமே. ஸ்னூப் டாக் வரும் காட்சிகள் மட்டுமே மாஸான நாஸ்டாலஜியாவாக இருக்கின்றன. சும்மா ஒரு படம் பார்க்கணும் என மதிய நேரம் ரிமோட் தேய்ப்பவர்களுக்கான படம் இது.


Tamilrockerz - Series
ஆக்ஷன் ஸ்டார் ஆதித்யாவின் 300 கோடி ரூபாய் பட்ஜெட் கொண்ட படம் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது. ஆனால், ரிலீஸுக்கு முந்தைய நாளே படத்தை நல்ல தரத்தில் இணையத்தில் வெளியிடுவோம் என்று சவால்விடுகிறது தமிழ்ராக்கர்ஸ் டீம். இதைத் தடுத்து நிறுத்தக் கிளம்புகிறார் சைபர் க்ரைம் அதிகாரியான அருண் விஜய். தமிழ்ராக்கர்ஸ் யார், அவர்களின் நோக்கம் என்ன, பின்னணி என்ன என்பதைக் கற்பனையாக அலசுகிறது எட்டு எபிசோடுகளாக சோனி லைவ்வில் வெளியாகியிருக்கும் இந்த சீரிஸ். பெரும்படையே நடித்திருப்பினும் அருண் விஜய், அழகம் பெருமாள் தவிர்த்து வேறு யாருக்குமே அழுத்தமான பாத்திரம் இல்லை. தமிழ்ராக்கர்ஸ் எனப் பலரும் அறிந்த ஒரு வார்த்தைக்குப் பின்னால் ஒரு சாதாரண பழிவாங்கும் கதையை வைத்தது, ஒரு கட்டத்தில் படத்தயாரிப்பாளரின் மற்றொரு பக்கத்தைக் காட்டியது போன்றவை ‘பைரஸி'க்கு எதிரான வாதங்களாக அமையாமல், அதற்கு ஆதரவானவையாக மாறி நிற்கின்றன. டெக்னாலஜி தொடர்பான விஷயங்களிலும் அதீத மெத்தனமே தெரிகிறது. துப்பறியும் பாணியிலேனும் கூடுதல் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் தமிழில் புதியதொரு படைப்பாக அமைந்திருக்கும்.