Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

இதுவொரு உடல் ஹாரர் வகைமைத் திரைப்படம். வயது வந்தோர்க்கும், சினிமாவில் அதிக ஆர்வம் இருப்போர்க்கு மட்டும்.

OTT கார்னர்

இதுவொரு உடல் ஹாரர் வகைமைத் திரைப்படம். வயது வந்தோர்க்கும், சினிமாவில் அதிக ஆர்வம் இருப்போர்க்கு மட்டும்.

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

Untold: The Race of the Century - Documentary

Yacht Racing எனப்படும் இலகுரக படகுப்போட்டி நமக்கு வேண்டுமானால் அன்னியமாய் இருக்கலாம். ஆனால் அமெரிக்கா போன்ற பணம் கொழிக்கும் நாடுகளுக்கு அவை அந்தஸ்து சம்பந்தப்பட்ட விளையாட்டு. பிற விளையாட்டுகளில் உலகக் கோப்பை இருப்பதுபோல இந்தப் படகோட்டத்தில் ‘America's cup'. 150 ஆண்டுகளுக்கும் மேலாய் நடந்து வரும் இந்த பாரம்பரியத் தொடரில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தியது அமெரிக்கா. விளையாட்டுலகில் எந்தவொரு நாட்டிடமும் தொடர்ந்து 132 ஆண்டுகள் ஒரு சர்வதேசக் கோப்பை இருந்ததில்லை என பிரமிக்கும்படியான ஆதிக்கம். அதை முதன்முறையாக உடைத்து 1983-ல் வரலாற்றை மாற்றிய ஆஸ்திரேலிய அணியைப் பற்றிய நெட்ப்ளிக்ஸ் ஆவணப்படம் இது. சர்வதேசக் கோப்பைகளுக்குப் பின்னால் இருக்கும் அழுகுணி அரசியல், அமெரிக்காவின் ஏகாதிபத்திய மனநிலையும் மேட்டிமைத்தனமும் என ஏராளம் இருந்தாலும் முன்னிற்பது, ஒரு தேசமே எப்படி அந்த 12 மீட்டர் படகின் பின்னால் அணிவகுத்தது என்கிற சிலிர்ப்பூட்டும் கதைதான். விறுவிறுப்பாய்ப் படமாக்கியுள்ளனர் என்பதால் ஸ்போர்ட்ஸ் விரும்பிகள் பார்க்கவேண்டிய படம் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

Crimes of the Future - Movie

இதுவொரு உடல் ஹாரர் வகைமைத் திரைப்படம். வயது வந்தோர்க்கும், சினிமாவில் அதிக ஆர்வம் இருப்போர்க்கு மட்டும். எந்தக் காலம் என எதுவும் சொல்லப்படாத ஒரு எதிர்காலத்தில் மனிதர்களின் எல்லாமும் மாறியிருக்கிறது. அந்தக் காலத்தில் மனிதர்களை இன்பத்தில் வைத்திருப்பவை, அறுவை சிகிச்சைகள்தான். செக்ஸ் அளவுக்கு, மனிதர்களுக்கு அறுவை சிகிச்சைகளைப் பார்ப்பது அதீத இன்பம் தருகிறது. ஒரு சிறுவன், அவன் வீட்டில் பாதுகாப்பாய் உணரக்கூடிய ஒரு பெண்ணால் கொல்லப்படுகிறான். அதிர்ச்சிக்காக இந்தக் காட்சி முதலில் வருகிறது என நினைத்தால், இந்தப் படம் இப்படித்தான் இருக்கப்போகிறது என்பதற்கான டிஸ்கிளைமராகவே இந்தக் காட்சியைக் கருத வேண்டியுள்ளது. எல்லாவற்றிலும் அதீத பொழுதுபோக்கினை விரும்பும் இந்தச் சமூகம் வெகு விரைவில் இப்படி மாறிவிடக்கூடும் என்பதை உணர்த்தவோ, அல்லது அப்படி ஆகிவிடக்கூடாது என எச்சரிக்கவோ இதை இயக்குநர் டேவிட் க்ரோனெண்பெர்க் எடுத்திருக்கலாம். லீ சீடக்ஸ், விக்கோ மோர்டென்சென், கிரிஸ்டன் ஸ்டீவர்ட்டின் மாறுபட்ட நடிப்புக்காகவும் இந்த சினிமாவை முபி தளத்தில் காணலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Indian Predator: The Diary of a Serial Killer - Docuseries

ராஜா கொலந்தர் - இந்தியா பார்த்த கொடூரமான சீரியல் கில்லர். அப்போதைய அலகாபாத்தின் வறட்சியான புறநகர்ப் பகுதியில் சத்தமே இல்லாமல் ஏகப்பட்ட பேரைக் கொன்று தன் பண்ணையில் புதைத்தவன். அவர்களின் உடல்பாகங்களை எல்லாம் சமைத்துச் சாப்பிட்டவன் - இப்படியெல்லாம் குற்றம் சாட்டப்பட்ட ராஜா கொலந்தரின் வாழ்க்கையையும் பின்னணியையும் விரிவாய் அலசுகிறது நெட்ப்ளிக்ஸின் இந்த ஆவணத் தொடர். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள், விசாரித்த அதிகாரிகள் ஆகியோரோடு இறுதியாய் சிறையிலிருக்கும் ராஜாவின் பேட்டியும் தொடரில் இடம்பெற்றிருப்பதே இந்தத் தொடரை வழக்கமான ஆவணப்படங்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. காடுகள் ஒழிப்பு எப்படி தொல்குடிகளின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, 90களில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சி என அரசியலைத் தொடவும் தவறவில்லை. தொடரின் மிக முக்கியமான உறுத்தல், குற்றம் செய்தவரை அவர் பிறந்த சாதியை வைத்தே எப்படி முன் தீர்மானத்தோடு அதிகாரம் அணுகுகிறது என்பது. த்ரில்லர் விரும்பிகளுக்கான தொடர் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

I Came By - Movie

அதிகாரம் மற்றும் பணம் படைத்த மனிதர்களின் வீடுகளுக்குள் சென்று கிராஃபிட்டி வடிவில் ‘I Came By’ என்ற வாசகத்தை வரைந்து எதிர்ப்பைக் காட்டுகிறார் 23 வயது இளைஞரான டோபி. அப்படி ஒருமுறை ஓய்வுபெற்ற நீதிபதியான ஹெக்டர் பிளேக்கின் வீட்டுக்குள் செல்லும்போது அங்கே அவர் பார்த்துவிடும் ஒரு ரகசியம் அவரின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. டோபிக்கு என்னவானது, அவன் தாயாரும், நண்பனும் என்ன செய்தார்கள், அந்த வீட்டில் அப்படியென்ன ரகசியம் இருந்தது... இதுதான் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தின் கதை. சுவாரஸ்யமாகவும், மர்மத்துடனும் தொடங்கும் படம், பாதிக்குமேல் அவற்றைத் தக்கவைக்க முடியாமல் திணறியிருக்கிறது. கதையின் நாயகன் என்றே ஒருவர் இல்லாத உணர்வையே கதையின் போக்கு நமக்குக் கொடுக்கிறது. ஆனால், அடுத்து என்ன என்று யூகிக்க முடியாத திரைக்கதை இதன் பலம். வில்லனாக வரும் ஹூக் போன்வில்லின் நடிப்பு மிரட்டல் ரகம். 90 நிமிட ஆங்கிலத் த்ரில்லர்களின் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் பிடிக்கும்.