சினிமா
தொடர்கள்
Published:Updated:

OTT கார்னர்

The Lord of the Rings: The Rings of Power
பிரீமியம் ஸ்டோரி
News
The Lord of the Rings: The Rings of Power

MCU-வின் நான்காவது ஃபேஸில் தயாராகியிருக்கும் இந்தக் கடைசி வெப்சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது.

The Lord of the Rings: The Rings of Power
The Lord of the Rings: The Rings of Power
OTT கார்னர்

The Lord of the Rings: The Rings of Power - series

‘லார்டு ஆஃப் தி ரிங்க்ஸ்’ திரைப்படங்களின் முன்கதையைச் சொல்கிறது இந்த ‘தி ரிங்ஸ் ஆஃப் பவர்.’ லார்டு ஆஃப் தி ரிங்க்ஸ் தொடரின் கதை என்பது பல மோதிரங்களைச் சுற்றி இருக்கும். தி ரிங்ஸ் ஆஃப் பவர் முதல் சீசனின் கதை மூன்று மோதிர உருவாக்கத்தையும், சாரோன் யார் என்பதைக் குறித்தும் பேசுகிறது. என்னங்க, கொஞ்சம்கூடப் புரியலையா? உண்மையில் அதுதான் கதையும்! நிறைய கிளைக்கதைகளை முதல் எபிசோடில் இருந்தே உருவாக்கி நமக்குப் பாடம் எடுக்க ஆரம்பித்துவிடுகிறது. அதே சமயம் எல்வ்ஸுக்கும் மனிதர்களுக்குமான பிணைப்பு, தீய சாரோனின் எழுச்சி எனப் பல விஷயங்களை பற்பல கதைமாந்தர்களின் வழி சொல்லிச் செல்கிறது இந்தத் தொடர். பிரமாண்டத்தில் புதிய உச்சத்தைத் தொட்ட இந்தத் தொடர், அடுத்தடுத்த எபிசோடுகளில் கதையிலும் சுவாரஸ்யத்தைக் கூட்டி பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் ஒருசேர அதிகரிக்கச் செய்தது. அடுத்தடுத்த சீசன்கள் நிச்சயம் வரும் என்பதால், எல்லோரும் அமேசான் ப்ரைமில் அடுத்த சீசனுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

OTT கார்னர்
OTT கார்னர்

The Redeem Team - (Documentary)

அமெரிக்கர்களின் கூடைப்பந்து மோகம் உலகப் பிரசித்தம். உலகளவில் அதிகம் பார்க்கப்படும் விளையாட்டுத் தொடர்களுள் அமெரிக்க பேஸ்கட்பால் லீக்கான என்.பி.ஏ-வும் ஒன்று. பணமும் புகழும் குவிந்துகிடக்கும் இடத்தில் பிரச்னையும் இருக்கும்தானே? இந்தத் தொடரில் கிடைக்கும் அதீத பணம், திறன் வாய்ந்த வீரர்களைத் தேசிய அணிக்காக விளையாடவிடாமல் முழு நேரமும் இந்த லீக்கிலேயே கவனம் செலுத்தும்படி செய்கிறது. அன்றைய அமெரிக்கச் சட்டங்களின்படி என்.பி.ஏ லீக்கில் ஒப்பந்தமாகியிருக்கும் வீரர், தேசிய அணிக்காகத் தகுதி பெற முடியாது. விளைவு, அதுநாள் வரை ஒலிம்பிக் பேஸ்கட்பாலில் தங்கம் வென்று வந்த அமெரிக்கா 90-களில் தட்டுத்தடுமாறத் தொடங்குகிறது. உள்ளூரில் வெறுப்பு, சர்வதேச மீடியாக்களில் கேலி என மொத்த அமெரிக்கக் கூடைப்பந்து உலகமும் இருட்டுப் பாதையில் பயணிக்க, வேறு வழியே இல்லாமல் விதியைத் தளர்த்தி என்.பி.ஏ வீரர்களைக் கொண்டுவந்து அவர்களின் ஈகோவை உடைத்து நாட்டிற்காக ஒன்றுபடச் செய்து தங்கம் வென்ற சாகசக் கதைதான் இந்த ஆவணப்படம். மறைந்த வீரர் ஃகோபி ப்ரையன்டுக்கான அஞ்சலியாகவும் இந்த நெட்ப்ளிக்ஸ் படம் விரிவது நெகிழ்ச்சி அத்தியாயம். ஸ்போர்ட்ஸ் விரும்பிகள் தவறவிடக்கூடாத தொடர் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

She-Hulk: Attorney at Law - series

MCU-வின் நான்காவது ஃபேஸில் தயாராகியிருக்கும் இந்தக் கடைசி வெப்சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. ப்ரூஸ் பேனரின் (ஹல்க்) உறவினர் பெண்ணான ஜெனிஃபர் வால்டர்ஸுக்கு ஒரு விபத்தால் ஹல்க்கின் சூப்பர்பவர் வந்துவிடுகிறது. வழக்கறிஞராகப் பணியாற்றும் அவர், தன் துறையில் சாதிக்க நினைப்பதால் ‘ஷி-ஹல்க்’ என்ற சூப்பர்ஹீரோ பெயருடனே தன் வக்கீல் பணியையும் தொடர்கிறார். இந்த இரட்டை வாழ்க்கையில் ஜெனிஃபர் வால்டர்ஸைப் பலரும் புறந்தள்ளி, அவரின் ‘ஷி-ஹல்க்’ அவதாரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். 9 எபிசோடுகள் கொண்ட முதல் சீசனில் ப்ரூஸ் பேனர், வாங்க், டேர்டெவில், அபாமினேஷன் எனப் பலரையும் கேமியோவுக்கென கூட்டி வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு எபிசோடும் ஜாலியான வழக்கமான மார்வெல் காமெடி என்பதைத் தாண்டி ‘டெட்பூல்’ பாணியிலான ‘Fourth Wall Breaking’ சுவாரஸ்யங்களுடம் நீள்கின்றன. குறிப்பாக, கடைசி எபிசோடில் அதை உபயோகப்படுத்திய விதம் அட்டகாசம். டாட்டியானா மஸ்லானியின் நடிப்பு சிறப்பாக இருந்தாலும் பல காட்சிகளில் கிராஃபிக்ஸ் படு சுமாராகவே இருக்கிறது. கன்டென்ட்டாக ஒவ்வொரு எபிசோடிலும் இன்னமும் கூடுதலான விஷயங்கள் சேர்த்திருக்கலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Eesho - Movie

குழந்தைகள்மீதான பாலியல் குற்ற வழக்கில் காலையில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவிருக்கும் ஏ.டி.எம் காவலாளி, அவரைக் கொல்ல இரவு வரும் கொலையாளி - இருவருக்கும் இடையிலான உரையாடல், அதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களே ‘ஈஷோ’ மலையாளப்படத்தின் ஒன்லைன். நதிர்ஷா இயக்கத்தில் ஜெயசூர்யா, ஜாபர் இடுக்கி நடிப்பில் சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது இந்தப் படம். சிறுமிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் கொடூரங்கள் செல்வாக்கான மனிதர்களால் எப்படி மூடி மறைக்கப்படுகின்றன என்பதை சமூக நோக்கத்தோடு சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். த்ரில்லர் திரைக்கதையில் லாஜிக் ஓட்டைகள் விழுந்துவிடக்கூடாது என மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. ஏ.டி.எம் காவலாளி ஜாபர் இடுக்கி, ‘கொலையாளி’ ஜெயசூர்யா இருவரும் நடிப்பில் மாறி மாறி மிரட்டியிருக்கிறார்கள். படத்துக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது ராகுல் ராஜின் பின்னணி இசை. வழக்கமான பழிவாங்கல் கதையில் எளிதில் யூகித்துவிடக்கூடிய ட்விஸ்ட் என்பதாகப் படம் இருந்தாலும், தன் திக் திக் திரைக்கதையால் ரசிக்கவைக்கிறான் இந்த ‘ஈஷோ.’