சினிமா
தொடர்கள்
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

குடும்ப வன்முறையால் பாதிப்புக்குள்ளாகும் பெண், தன் கணவன் என்னும் ஆணை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதைச் சொல்கிறது அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘அம்மு' திரைப்படம்.

OTT கார்னர்

Maja Ma - Movie

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண்ணை விரும்பும் காதலன், கலாசாரத்தை விரும்பும் காதலியின் பெற்றோரை நிச்சயத்திற்காக இந்தியாவிற்கு அழைத்து வருகிறார். அப்போது, காதலனின் அம்மா ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என்பது தெரியவந்தால் என்னவெல்லாம் நடக்கும்? ஆனந்த் திவாரி இயக்கத்தில், மாதுரி தீட்சித் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘மஜா மா’ பட ஒன்லைன் இதுதான். எல்.ஜி.பி.டி எனப்படும் தன்பாலின உணர்வாளர்கள் குறித்த உண்மைகளைச் சொல்ல முயன்ற இயக்குநருக்கும் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த மாதுரிக்கும் பாராட்டுகளைக் குவிக்கலாம். அம்மாவையும் விட்டுக்கொடுக்க முடியாமல் காதலியையும் கரம்பிடிக்க முடியாமல் திணறும் காட்சியில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரித்விக் பெளமிக். இவரைவிட மிக முக்கியமானது மாதுரியின் மகளாக நடித்துள்ள சிருஷ்டி வஸ்தவா கதாபாத்திரம். எல்.ஜி.பி.டிகளுக்காக ஓங்கிக் குரல் கொடுக்கும் இளைய தலைமுறையாக அப்ளாஸை அள்ளுகிறார். கலாசாரக் காவலர்கள் பார்க்கவேண்டிய, புரிந்துகொள்ளவேண்டிய படம்.

OTT கார்னர்

Werewolf by Night - TV Special

மான்ஸ்டர்களை வேட்டையாடும் மனிதர்கள் ஓர் இரவில் பிளட்ஸ்டோன் மாளிகையில் கூடுகிறார்கள். அவர்களின் தலைவர் இறந்துவிட்டதால், அடுத்த தலைவர் யார், காலங்காலமாகப் பாதுகாக்கப்பட்டுவரும் பிளட்ஸ்டோன் அடுத்து யார் கைக்குச் செல்லவேண்டும் என்பதைக் கண்டறிய அங்கே போட்டி நடக்கிறது. அதில் யார், யாரை வீழ்த்தினார்கள் என்பதே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் இந்த டி.வி ஸ்பெஷல் எபிசோடின் கதை. MCU-வின் ஓர் அங்கமாக வந்திருக்கும் இந்தச் சிறப்புப் படைப்பு, அந்தக் காலக் கறுப்பு வெள்ளை சினிமா போலவே எடுக்கப்பட்டிருக்கிறது. பழங்கால கேமரா ட்ரிக்ஸ், நவீன கிராபிக்ஸ் இல்லாத ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் என வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மைக்கேல் கியாச்சினோ. அதே சமயம், MCU என்றாலும் இந்தக் கதை அதில் எங்கே, எந்தக் காலகட்டத்தில் நடக்கிறது, கறுப்பு வெள்ளை டு கலர் மாற்றத்தின் பின்னணி என்ன என்பதிலெல்லாம் தெளிவில்லை. மார்வெல் படங்களின் சாயலே இல்லாத ஒரு சுவாரஸ்யமான அந்தக் கால சாகச சினிமா என்ற அளவில் இதை ரசிக்கலாம்.

OTT கார்னர்

Ammu - Movie

குடும்ப வன்முறையால் பாதிப்புக்குள்ளாகும் பெண், தன் கணவன் என்னும் ஆணை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதைச் சொல்கிறது அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘அம்மு' திரைப்படம். பக்கத்து வீடுகளில் வசிக்கும் இரு குடும்பங்கள் திருமணத்தில் இணைகின்றன. திருமணமான புதிதில் தன் மனைவியிடம் காதலும் நேசமும் காட்டும் இன்ஸ்பெக்டர், போகப் போக வக்கிரமான ஆணாதிக்கவாதியாகக் கொடுமைகள் நிகழ்த்துகிறார். கணவனை விட்டுப் பிரிந்து செல்ல முடியாத சூழலில் எப்படி மனைவி வஞ்சம் தீர்க்கிறார் என்பதை இயக்குநர் சாருகேஸ் சேகர் திரைப்படமாக்கியிருக்கிறார். பொதுச்சமூகத்துக்கு ஒரு முகம், மனைவியிடம் இன்னொரு முகம் என்று நுட்பமான வித்தியாசங்களைத் திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார், இன்ஸ்பெக்டர் ரவியாக நடித்திருக்கும் நவீன் சந்திரா. பரிச்சயமான முகங்களான ஐஸ்வர்யா லெட்சுமியும் பாபி சிம்ஹாவும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். க்ளிஷேவான காட்சிகள் இருந்தாலும் குடும்ப வன்முறைகளை மையப்படுத்தி தொடர்ச்சியாகப் படங்கள் வரும் சூழலில், ‘அம்மு' வரவேற்கப்பட வேண்டியவள்.

OTT கார்னர்

The Curse of Bridge Hollow - Movie

ஹிட்டோ, ஃப்ளாப்போ பழைய எஸ்.டி.டி பற்றியெல்லாம் கவலையேபடாமல் சகட்டுமேனிக்கு ஹாரர் காமெடிகளை இறக்கிவிட்டுக்கொண்டே இருக்கிறது நெட்ப்ளிக்ஸ். அதில் லேட்டஸ்ட் வரவு இந்தப் படம். ப்ரிட்ஜ் ஹாலோ எனும் ஊருக்குப் பணியிட மாறுதல் வாங்கிக்கொண்டு குடும்பத்தோடு வருகிறார் அறிவியல் ஆசிரியரான மார்லன் வேய்ன்ஸ். அவர் மகள் ப்ரேயாவுக்கு அமானுஷ்யங்களின் மேல் அதீத ஆர்வம். இவர்கள் வந்திறங்கும் நேரம் அந்த ஊரில் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன. கூடவே ஒரு பழம்பெரும் பேயின் அட்டகாசங்களும். வீடுதோறும் ஹாலோவீனுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அத்தனை பொம்மைகளும் உயிர்பெற, ஊர் ரெண்டாகிறது. அப்பாவும் மகளும் அந்த ஊரை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதுதான் கதை. காமெடிக்கு எக்கச்சக்க வெளி இந்தக் கதையிலிருந்தும் ஓரளவுக்கே அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதன் காரணமாகவே எல்லாருக்குமான படமாக இல்லாமல் குழந்தைகளுக்கான வீக்கெண்ட் டைம்பாஸ் என்கிற அளவில் மட்டும் சுருங்கிப் போய்விடுகிறது இது.