தொடர்கள்
சினிமா
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

கேன்சர் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு, தங்களின் இறுதி நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் பதின்வயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆதரவுக்கூடமாகத் திகழ்கிறது பிரைட்கிளிஃப்

OTT கார்னர்
OTT கார்னர்

House of the Dragon - TV Series

`கேம் ஆஃப் த்ரோன்ஸ்' நிகழ்வுகளுக்கு 176 ஆண்டுகள் முன், தங்கள் டிராகன்களால் ஏழு ராஜ்ஜியங்களையும் கட்டி ஆள்கிறது டார்கெரியன் வம்சம். டிராகன்கள் இருக்கும் வரை டார்கெரியன்களை யாராலும் வீழ்த்த முடியாது, வெஸ்டெரோஸில் இனி நிரந்தர அமைதியே என அனைவரும் நினைத்திருக்க, டார்கெரியன்களே இரு அணிகளாகப் பிரிந்து சண்டையிட்டால் என்னவாகும் என்பதுதான் ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்' ஒன்லைன். மன்னர் விசேரிஸ் டார்கெரியனுக்கு ஆண் வாரிசு இல்லாததால் வழக்கத்தை மீறி ஒற்றை மகள் ரெனீராவைத் தன் வாரிசாக அறிவிக்கிறார். இதன் விளைவாக வெடிக்கும் வாரிசு அரசியலின் பின்னணியை முதல் சீசன் விவரிக்கிறது. ஒவ்வொரு எபிசோடுக்கும் நடுவில் சில ஆண்டுகள் கடந்துவிடும் என்பதால், கதாபாத்திரத்தின் வயதுக்கு ஏற்ப நடிகர்களும் மாற வேண்டும். இதை உறுத்தல் இல்லாமல் செய்ததிலேயே பாதி வெற்றியைப் பெற்றுவிட்டது தொடர். தேர்ந்த நடிப்பு, VFX, கலை இயக்கம், இருக்கை நுனியில் கட்டிப்போடும் டிராமா என ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்' மேஜிக் இங்கும் நிகழ்கிறது. HBO-வின் தயாரிப்பான இதை, இந்தியாவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரசிக்கலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

The Stranger - Movie

ஒரு 13 வயதுச் சிறுவன் காணாமல் போகிறான். அவனைக் கடத்தியதாக ஓர் ஆள்மீது அனைவருக்கும் சந்தேகம் வருகிறது. ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அவர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடுகிறார். அவரைப் பின்தொடர்ந்து, கண்காணித்து, ஏமாற்றி, எட்டு ஆண்டுகள் கழித்து கையும் களவுமாகப் பிடிக்கும் போலீஸ் அண்டர்கவர் ஆபரேஷனை விவரிக்கும் படம் இது. ஆஸ்திரேலியாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால், நாம் வழக்கமாய்ப் பார்க்கும் மசாலா அண்டர்கவர் போலீஸ் படங்களைப்போல் அல்லாமல் நம்பகத்தன்மையோடு இருக்கிறது. ‘Slow burn' ரகம், எனவே பார்ப்பதற்குப் பொறுமை மிக அவசியம். நெட்ப்ளிக்ஸை அமெரிக்க த்ரில்லர் படங்கள் கைவிட்டாலும், மற்ற நாட்டுப் படங்கள் கைகொடுத்துத் தூக்கிவிடுகின்றன. அந்த வகையில் இது நெட்ப்ளிக்ஸ் ஆஸ்திரேலியாவின் பங்களிப்பு. நல்ல த்ரில்லர் படம் பார்க்க விரும்புபவர்கள் தாராளமாய் க்ளிக்கலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

The Midnight Club - Series

கேன்சர் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு, தங்களின் இறுதி நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் பதின்வயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆதரவுக்கூடமாகத் திகழ்கிறது பிரைட்கிளிஃப். அங்கே புதிதாகச் சேரும் இலோன்கா, அங்கிருக்கும் நோயாளிகள் நடத்தும் ‘தி மிட்நைட் கிளப்'பில் இணைகிறார். பேய்க்கதைகளைச் சொல்லிக் கொண்டாடும் அந்தக் குழு சந்திக்கும் அமானுஷ்யங்களும், இறப்பை வெல்ல இலோன்கா எடுக்கும் முயற்சிகளுமே 10 எபிசோடுகள் கொண்ட இந்த நெட்ப்ளிக்ஸ் சீரிஸின் கதை. ஹாரர் மன்னரான மைக் ஃப்ளேனகனின் உருவாக்கம். ஒரே எபிசோடில் 21 திடுக்கிடும் காட்சிகளை வைத்து கின்னஸ் சாதனை செய்துள்ளனர். பிரதான கதையைத் தாண்டி, ஒவ்வொரு எபிசோடிலும் கதாபாத்திரங்கள் சொல்லும் பேய்க்கதைகளும் சுவாரஸ்யமாகப் படமாக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் பிரதான கதையின் பாத்திரங்களையே நடிக்க வைத்திருப்பது புத்திசாலித்தனமான மேக்கிங். யூகிக்கக்கூடிய ட்விஸ்ட்கள், மெதுவாக நகரும் திரைக்கதை என்ற மைனஸ்களைத் தாண்டி, விநோத வழிபாட்டுச் சடங்குகள், அமானுஷ்ய நிகழ்வுகள், பயமுறுத்தும் ஒலிக்கோவைகள் என நல்ல ஹாரர் ட்ரீட்!

OTT கார்னர்
OTT கார்னர்

Jhansi - Series

நினைவுகளை இழந்து ஆபத்தான சூழ்நிலையில் காப்பாற்றப்படும் நாயகி, தனக்கு ஆதரவளிக்கும் நாயகனுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்துகொண்டே, தான் யார் என்பதைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ‘ஜான்சி' வெப் சீரிஸின் ஒன்லைன். மொத்தம் 6 எபிசோடுகளைக் கொண்ட சீசன் 1-ல் பெண்கள், சிறுமிகள்மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை வீரமாகச் சண்டையிட்டுப் பழி தீர்க்கும் ஜான்சியாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் மஹிதாவாகவும் இரண்டு ரோல்களில் நடிப்பில் அசத்தியுள்ளார் அஞ்சலி. பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக, ஆண்களின் துணை இல்லாமல், ஒரு பெண் மாவீரத்தோடு போராடுவதுபோல் திரைக்கதை அமைத்ததற்காகவும் சமூகத்திற்கான கதையைத் தேர்ந்தெடுத்ததற்காகவும் இயக்குநர் திருவையும் தயாரிப்பாளர் கிருஷ்ணாவையும் பாராட்டலாம். அஞ்சலியிடம் அசத்தலான நடிப்பை வாங்கிய இயக்குநர் திரைக்கதையிலும் சற்று மெனக்கெட்டிருக்கலாம். ஆறு எபிசோடுகளை ஓட்டவேண்டும் என்பதற்காகவே வெவ்வேறு கிளைக்கதைகளை வெட்டி ஒட்டியுள்ளனர். இதனால் ஒரு வழக்கமான ரிவெஞ்ச் கதையாக மட்டுமே இந்த ஜான்சி திருப்திப்பட்டுக்கொள்கிறாள்.