சினிமா
தொடர்கள்
Published:Updated:

OTT கார்னர்

Guillermo del Toro’s Cabinet of Curiosities
பிரீமியம் ஸ்டோரி
News
Guillermo del Toro’s Cabinet of Curiosities

அதீத வன்முறை, முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இருப்பதால் நிச்சயம் இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே

Guillermo del Toro’s Cabinet of Curiosities - Web Series

ஆஸ்கர் விருதுபெற்ற இயக்குநர் கியர்மோ டெல் டோரோ தேர்ந்தெடுத்த ஹாரர்/சூப்பர்நேச்சுரல் கதைகளை வெவ்வேறு இயக்குநர்கள் இயக்க, எட்டு எபிசோடுகள் கொண்ட ஆந்தாலஜியாக நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது ‘கியர்மோ டெல் டோரோ’ஸ் கேபினெட் ஆஃப் க்யூரியாசிட்டீஸ்.'

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு சிறுகதைகள், ஒரு வெப் காமிக்ஸ், ஒரு அசல் ஸ்க்ரிப்ட் எனப் பக்காவான அடித்தளங்களைப் பின்பற்றி உருவாகியிருக்கின்றன இந்த எட்டுப் படைப்புகள். ஒவ்வொரு எபிசோடு குறித்த அறிமுகத்தையும் கியர்மோவே தன் பாணியில் சொல்ல, டிம் பிளேக், டேவிட் ஹெவ்லட், முர்ரே அப்ரஹாம், கேட் மிகுஸ்ஸி, ரூபர்ட் கிரின்ட் உள்ளிட்ட நடிகர்கள் கதைமாந்தர்களாக வந்துபோகிறார்கள்.

OTT கார்னர்

‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற தீவிர வலதுசாரி மனநிலை கொண்ட ஒருவன் தன் பேராசையால் எப்படி ஒரு துர்தேவதையிடம் சிக்கிக்கொள்கிறான் என்பதைச் சொல்கிறது ‘Lot 36.' மயானத்து சமாதிகளில் பிணங்களிலிருந்து திருடும் சவக்குழித் திருடன் அங்கு உலாவும் எலிகளால் சந்திக்கும் பிரச்னைகளைப் பேசுகிறது ‘Graveyard Rats.' மனிதனைக் கட்டுப்படுத்த நினைக்கும் ஏலியன் ஒட்டுண்ணி ஒன்றை கேன்சரால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் எப்படி வீழ்த்துகிறார் என்பதை விவரிக்கிறது ‘The Autopsy.' தன்னை அழகில்லாதவள் என நினைத்துக்கொள்ளும் தன்னம்பிக்கை இல்லாத பெண் ஒருத்தியை அழகு சாதன க்ரீம் ஒன்று என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்பதை மிரட்டலாகக் காட்சிப்படுத்துகிறது ‘The Outside.'

OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

இதுபோக, பயமுறுத்தும் ஓவியங்களை வைத்து ஒரு குரூரமான அமானுஷ்யக் கதையைச் சொல்லும் ‘Pickman's Model', இறந்துவிட்ட இரட்டைச் சகோதரியை மீட்க எந்த எல்லைக்கும் போகும் சகோதரனின் துயரங்களை விவரிக்கும் ‘Dreams in the Witch House', மாளிகையில் பேய் என்ற வழக்கமான கதைக்கருவைக் கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்லும் ‘The Viewing', இழப்பைச் சந்தித்திருக்கும் தம்பதியரான பறவை ஆராய்ச்சியாளர்கள், ஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் சந்திக்கும் பிரச்னைகளைக் காட்டும் ‘The Murmuring' என விதவிதமான கதைகளைக் கொடுத்து ஹாரர் ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் விருந்து வைக்கிறது இந்த முதல் சீசன்.

அதீத வன்முறை, முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இருப்பதால் நிச்சயம் இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே. ஒரு ட்விஸ்ட்டுடன் முடியும் சிறுகதை பாணியிலான திரைக்கதை இதன் பெரும்பலம். ஆனால், ஒவ்வொரு எபிசோடும் கதைக்குள் செல்லக் காலம் எடுத்துக்கொள்வது சறுக்கல்.

OTT கார்னர்
OTT கார்னர்

Tadka - Movie

உணவுமீது காதல் கொண்ட நடுத்தர வயது ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதுதான், பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் நானா படேகர், ஷ்ரேயா, டாப்ஸி, அலி ஃபாசல் உள்ளிட்டோர் நடிப்பில் ஜீ5-ல் வெளியாகியிருக்கும் ‘Tadka.' கடந்த 2011-ம் ஆண்டு ஆஷிக் அபு இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘சால்ட் அண்ட் பெப்பர்' மலையாளப் படத்தின் ரீமேக்தான் இது. இன்னும் சொல்லப்போனால், இதே கதையைத்தான் கடந்த 2014-ம் ஆண்டிலேயே ‘உன் சமையலறையில்' என்று தமிழில் ரீமேக் செய்திருந்தார் பிரகாஷ்ராஜ். உணவு, காதல் என ருசித்து, ரசித்து பாரபட்சம் பார்க்காமல் அன்லிமிடெட் மீல்ஸ் போன்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நானா படேகர். ஷ்ரேயாவின் உறவினர் இளம்பெண்ணாக டாப்ஸி. ஆனால், இப்படத்தில் அவரையும் தாண்டி, நம் மனதில் நிற்பவர் ஷ்ரேயாதான். யூகிக்கக்கூடிய ட்விஸ்டுகளும் க்ளீஷே காட்சிகளும் பலவீனம். ‘உன் சமையலறையில்' என்ற தலைப்புக்கேற்ப அறைகளுக்குள்ளேயே காட்சிப்படுத்தியிருந்தாலும் படம் எங்குமே சலிக்கவில்லை. புதைந்து கிடக்கும் காதலைத் தோண்டி எடுத்து, உணர்வுகளைக் கடத்திய விதத்தில் நம் மனதில் மிதமான சூட்டில் மணம் வீசுகிறது ‘Tadka.'

OTT கார்னர்
OTT கார்னர்

Enola Holmes 2 - Movie

ஷெர்லாக் ஹோம்ஸ் படங்களை எத்தனை வெர்ஷன்களில் எத்தனை கோணங்களில் எடுத்தாலும் வரவேற்கத் தயாராய் இருக்கிறார்கள் ரசிகர்கள். அதனாலேயே கடந்த ஆண்டு ஷெர்லாக் ஹோம்ஸின் தங்கை எனோலா ஹோம்ஸை மையமாக வைத்துப் படமெடுத்து ஹிட்டடித்தது நெட்ப்ளிக்ஸ். இப்போது அதன் இரண்டாம் பாகத்தின் வழியே மீண்டும் சிக்ஸர் அடித்திருக்கிறது. 19-ம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவத்தில் ஹோம்ஸ் குடும்பத்தை நுழைத்து கமர்ஷியலாய் கதை சொல்லியிருப்பது ஒரு ப்ளஸ் என்றால், மற்றொரு பிளஸ் அரசியல் பிரதிநிதித்துவம். பெருகிவரும் அரசியல் தெளிவு காரணமாக ஆப்ரோ ஐரோப்பியர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனப் பலதரப்பினரையும் முக்கியக் கதாபாத்திரங்களாக ஹோம்ஸ் யுனிவர்ஸில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். நாயகி மில்லி பாபி பிரவுன் வழக்கம் போல் நடிப்பில் அசத்துவதால் கொஞ்சமும் போரடிக்காமல் விறுவிறுவென ஜனரஞ்சகமாய் நகர்கிறது கதை. குடும்பமாய் அமர்ந்து படம் பார்க்க நினைப்பவர்கள் தவறவிடக்கூடாத வீக்கெண்ட் வாட்ச் இது.