Freedom Fight
சுதந்திரத்தின் அளவீடு ஒவ்வொருவருக்கும் எப்படி மாறுபடுகிறது, எது நிஜ விடுதலை என்பதைப் பற்றிப் பேசும் மலையாள ஆந்தாலஜிப் படம் இது. சமீப காலமாக அதிக மலையாளப் படங்கள் இறங்கும் அதே Sonyliv-ல்.

Asanghadithar
நகரத்தின் முக்கியப் புள்ளியில் அமைந்திருக்கும் பெரும் வணிக வளாகம். எந்நேரமும் கூட்டம் பரபரத்துக்கொண்டிருக்கும் அந்த வளாகத்தில் வேலை பார்க்கும் பெண்கள் சிறுநீர் கழிக்க கழிப்பறை என ஒன்றுகூட இல்லை. இதுபற்றி பெண்கள் புகார் செய்யுமிடங்களிலெல்லாம் ஆணாதிக்க ஆணவமே பதிலாய்க் கிடைக்கிறது. ‘போராடிப் பெறுவதுதான் ஒரே தீர்வு’ என பெண்கள் கூட்டாய்க் களமிறங்குகிறார்கள். ஒரு சின்னத் தீப்பொறி எப்படிக் காட்டுத்தீயாய் மாறுகிறது என்பதுதான் இந்தப் படம். வெகு இயல்பாய் தேர்ந்த கலைஞராய் திரையில் மிளிர்கிறார் ஸ்ரீண்டா. யூனியன்களுக்குள் நடக்கும் அரசியல், திருநங்கை/நம்பிகள் மீதான பார்வை என அழுத்தமாய் அதிக விஷயங்கள் பேசியவகையில் கவனம் ஈர்க்கிறது இந்தப் படம்.

Pra Thoo Mu
அமைச்சர் ஒருவரின் வீட்டு செப்டிக் டேங்கை சுத்தம் செய்யப் போகிறார்கள் மலம் அள்ளும் தொழிலாளிகள் மூவர். அங்கு நடக்கும் சாதியின் கோரத் தாண்டவமே கதை. பார்ப்பவர்களை ரொம்பவே பாதிக்கும் காட்சியமைப்புகள் என்பதால் கறுப்பு வெள்ளையில் புத்திசாலித்தனமாய் படமாக்கி யிருக்கிறார் இயக்குநர் ஜிதின் ஐசக் தாமஸ். இறுதிக்காட்சியில் அப்படியே படம் வண்ணத்திற்கு மாறும்போது எழும் நடுக்கம் அடங்க வெகுநேரமாகிறது. ஐந்து படங்களில் விஷுவலாய் அதிக தாக்கத்திற்கு நம்மை உள்ளாக்கும் படம் இதுதான்.

Ration
அருகருகே இரண்டு வீடுகள். அந்த வீட்டுப் பெண்கள் அவ்வப்போது தாங்கள் சமைப்பதை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கிறார்கள். வெளிப்பார்வைக்கு சாதாரணமாய்த் தோன்றும் இந்தப் பழக்கம் நிஜத்தில் ஒருவருக்கு எவ்வளவு அழுத்தம் தரக்கூடிய பொருளாதாரத் தடையாய் மாறுகிறது என்பதைப் பேசுகிறது ‘ரேஷன்.’ அடுக்களையில் என்ன நடந்தாலும், ‘அதெல்லாம் உங்க சமாசாரம்’ என விட்டேத்தியாய் நடந்துகொள்ளும் இந்திய ஆண்களின் மனநிலை மேல் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் தொடங்கி, நாம் வீணடிக்கும் ஒரு பருக்கை யாரோ ஒருவரின் தேடல் என்பது வரை காட்சிமொழியில் எக்கச்சக்க விஷயங்களைப் பேசுகிறார் இயக்குநர் பிரான்சிஸ் லூயிஸ்.

Geethu Unchained
காதல், பிரேக் அப் போன்றவை எல்லாம் ஆண்களுக்கு சகஜமாய் இருக்கும்போது பெண்களுக்கு நிகழ்கையில் ஏன் சமூகம் இவ்வளவு பதற்றம் கொள்கிறது என்பதைப் பேசும் படம் இது. தன் காதலை நிச்சயதார்த்தம் வரை கொண்டு சென்று, பின்னர் சரிப்படாது என நிறுத்திவிடுகிறார் ரஜிஷா. கொஞ்ச காலம் கழித்து அவருக்கு இன்னொரு பையனைப் பிடிக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்தினால் கெட்ட பெயராகிவிடுமோ எனத் தவித்து தனக்குள் புழுங்குகிறார். இறுதியாக என்ன முடிவெடுத்தார் என்பதுதான் கதை. ஒன் வுமன் ஷோ என்னுமளவிற்கு எல்லாக் காட்சிகளிலும் ஆவர்த்தனம் செய்கிறார் ரஜிஷா. நகைச்சுவை ரூட் பிடித்திருப்பதால் ஐந்து படங்களில் கொஞ்சம் கனம் குறைவாய் இருப்பது இந்தப் படம்தான்.

Old age home
மூப்பின் காரணமாக மெல்ல மெல்ல நினைவு தவறிக்கொண்டே வருகிறது ஜோஜு ஜார்ஜுக்கு. வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகளோ, ‘இனி நீங்கதான் அவரை பத்திரமா பார்த்துக்கணும்’ என பொறுப்பைத் தங்கள் அம்மா மேல் போடுகிறார்கள். ஒருபக்கம் நினைவிற்கும் நிஜத்திற்குமாய் அல்லாடும் கணவன், மறுபக்கம் 38 ஆண்டுகள் கழித்து கணவரின் தலையீடு இல்லாத சுதந்திரம் - இது இரண்டையும் அந்த மனைவி எப்படிக் கையாள்கிறார் என்பதே கதை. ‘The Great Indian Kitchen’ படமெடுத்த ஜியோ பேபியின் படைப்பு இது. அவரின் தனித்துவ முத்திரை இந்தப் படத்திலும் தெரிகிறது.


FishBowl wives
வசதி படைத்த அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வாழும் ஆறு பெண்களையும், அவர்களின் விருப்பமில்லாத் திருமண வாழ்வையும் பற்றி அலசுகிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் FishBowl Wives. Kingyo Tsuma என்கிற மாங்கா தொடரை மையப்படுத்தி இந்த ஜப்பானிய வெப் சீரிஸை இயக்கியிருக்கிறார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழும் சகுராவும், டகுயாவும் வெற்றிகரமாக சலூன் ஒன்றை நடத்திவருகிறார்கள். டகுயாவின் திருமணம் தாண்டிய உறவுகளும், சகுராவை அடிப்பதும் தொடர்கதையாகி வர, ஒரு கட்டத்தில் சகுரா வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார். மீன் தொட்டியில் வளர்க்கப்படும் தங்கமீனுடன் தன்னை ஒப்பீடு செய்துகொள்கிறார் சகுரா. டகுயா ஒரு பக்கம் பழிவாங்கத் திட்டம் போட, தன் வருங்காலம் குறித்த கேள்விகளே சகுராவை மேலும் குழப்பமடையச் செய்கிறது. அக்கறையின்மை, குடும்ப வன்முறை போன்ற விஷயங்களைப் பேசினாலும், குழந்தையின்மை என்பதாலேயே பெரும்பாலும் திருமணம் தாண்டிய உறவு நடப்பதாக இத்தொடர் காட்டுவது ஏனோ 1980களில் எடுக்கப்பட்ட சினிமா ஃபீலைக் கொடுத்துவிடுகிறது. எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், குழந்தை இருந்தால் சமாளித்துவிடலாம் என்கிற ஸ்டீரியோடைப் வசனங்கள் ஆங்காங்கே வந்து விழுகின்றன. அடல்ட் காட்சிகள் சற்று அதிகம் என்பதால், கண்டிப்பாக வயது வந்தோருக்கு மட்டும்.


Gehraiyaan
காதலர் தின ஸ்பெஷலாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘கெஹ்ரையான்’, காதலுக்காக மனம் கற்பித்துக்கொள்ளும் அந்தந்த நேரத்து நியாயங்கள் குறித்தும், கடந்தகாலம் ஏற்படுத்தும் மன உளைச்சல்களின் ஆழம் குறித்தும் சமரசமின்றிப் பதிவு செய்கிறது. யோகா பயிற்சியாளரான தீபிகாவையும், அவரின் எழுத்தாளர் காதலனையும் தன் நிச்சயத்துக்கு விருந்தினர்களாக அழைக்கிறார் தீபிகாவின் உறவினரான டியா. அங்கு டியாவின் கணவனாகப் போகும் சித்தாந்த் சதுர்வேதிக்கும் தீபிகாவுக்கும் காதலும் காமமும் பற்றிக் கொள்கின்றன. ஏற்கெனவே கடந்தகால சம்பவங்களைக் கடக்க முடியாமல் இருக்கும் தீபிகா, இதனால் சந்திக்கும் பிரச்னைகள்தான் படம். இலக்கணங்களை உடைத்து வரும் காதல் குறித்த தெளிவான பார்வையோடு கதையை அணுகியிருக்கிறார் ‘கபூர் அண்ட் சன்ஸ்’ புகழ் இயக்குநர் சகுன் பத்ரா. குழப்பமும் பிரச்னைகளும் இழையோடும் தீபிகாவின் கண்ணீர் ததும்பும் கண்களே பக்கம் பக்கமாக வசனங்கள் பேசிவிடுகின்றன. நசீருதீன் ஷா, தீபிகாவிடம் பேசும் வசனங்கள் எல்லோர் வாழ்வுக்கும் பொருந்திப் போகும் அவசிய மருந்து. தத்துவார்த்த ரீதியாக ஈர்த்தாலும், ஆங்காங்கே வரும் ட்விஸ்ட்கள் சுவாரஸ்யம் கூட்டினாலும், இதில் யார் பக்கம் நாம் நிற்க வேண்டும் என்ற குழப்பம் பார்க்கும் நமக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.