சினிமா
Published:Updated:

OTT கார்னர்

பகத் பாசில்
பிரீமியம் ஸ்டோரி
News
பகத் பாசில்

- ஸ்ட்ரீம்பாய்

OTT கார்னர்
OTT கார்னர்

My Octopus Teacher - Netflix - Documentary

சின்ன சைஸ் ஆக்டோபஸை சில உணவகங்களில் பார்க்க முடியும். ‘என்ன டிசைன் இது’ என்பதுபோல, வித்தியாசமான லுக்கில் இருக்கும். நம்மூர் கிளி ஜோசியம்போல, சில நாடுகளில் ஆக்டோபஸ் ஜோசியம் எல்லாம் நடக்கும். தென்னாப்பிரிக்கப் படைப்பாளரான க்ரெய்க் ஃபாஸ்டருக்கு, ஆக்டோபஸ்தான் போதி மரம். 2010-ம் ஆண்டு கேப்டவுனில் ஒரு ஆக்டோபஸை சந்திக்கிறார். கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு, ஃபாஸ்டரை நம்பத் தொடங்குகிறது ஆக்டோபஸ். டாக்குமென்டரி என்றாலே, சோர்வை வழங்கும் என்பதை மீறிப் பல காட்சிகள் சுவாரஸ்யமாய் இருக்கின்றன. சுறாக்களிடமிருந்து தப்பிப்பது, தன் வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வுகள் என எல்லாவற்றையும் க்ரெய்க்கிடம் பகிர்ந்துகொள்கிறது ஆக்டோபஸ். காட்டில் எடுக்கப்படும் டாக்குமென்டரிகளைவிட இது சவாலான விஷயம். காரணம், பெருங்கடலில் ஒரு ஆக்டோபஸைத் தேடிக் கண்டுபிடிப்பது எளிதானதில்லை. இந்த ஆண்டு ஆஸ்கரில், சிறந்த டாக்குமென்டரி விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் My octopus teacher-தான் பலரது ஃபேவரைட்.

OTT கார்னர்
OTT கார்னர்

Joji - Prime video - Movie

பகத் பாசில் நடிப்பு, ஷ்யாம் புஷ்கரன் திரைக்கதை, திலீஷ் போத்தன் இயக்கம் என எதிர்பார்ப்புக்குரிய கூட்டணியில் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் மலையாளத் திரைப்படம் 'ஜோஜி.' ஒரு பணக்காரக் குடும்பத்தின் கடைக்குட்டி மகன் பகத். கறாரான தந்தை, இரண்டு சகோதரர்கள் என்றிருக்கும் குடும்பத்தில் யாரும் எதிர்பாராதவகையில் தந்தை விபத்துக்குள்ளாகி முடங்கிப்போகிறார். அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சியான சம்பவங்களைக் கொண்ட குடும்ப த்ரில்லர். படத்தின் பெரிய பலம், பகத்தின் நடிப்பு. வில்லத்தனத்தின் ஆரவாரம் எதையும் காட்டாமலே இயல்பான நடிப்பில் சூழ்ச்சியின் அத்தனை பரிமாணங்களையும் சிறப்பாகச் சித்திரித்திருக்கிறார். ஷம்மி திலகன், பாபுராஜ், உன்னி மாயா, பாசில் ஜோசப் என மிகக்குறைவான பாத்திரங்களில் நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார்கள் நடிகர்கள். ஜஸ்டின் வர்கீஸின் இசை மௌனத்தின் அடர்த்தியையும் விறுவிறுப்பின் வேகத்தையும் கொண்டிருக்கிறது. மெலிதான ஒற்றைவரிக் கதை, நிதானமாகக் கதை நகர்வது ஆகியவை சாதாரணப் பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Animals on the loose : A You vs Wild movie - Netflix - Movie

படம் பார்க்கும் அனுபவத்தின் அடுத்த கட்டம் எனப்படும் Interactive movies வகையில் நெட்ஃப்ளிக்ஸில் வந்த ‘Black Mirror: Bandersnatch’ படம், பார்ப்பவர்களை அதிரடித்தது. அதேவகையில் குழந்தைகளுக்கான படமாய் வெளியாகியிருக்கிறது இந்தப் படம். உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்டுள்ள பியர் க்ரில்ஸ் ஒரு விலங்குகள் சரணாலயத்தின் காப்பாளராக இருக்கிறார். சரணாலயத்திலிருந்து தப்பித்துவிடும் விலங்குகளை நம் உதவியோடு பிடிப்பதுதான் கதை. ஆங்காங்கே ஆப்ஷன்கள் கொடுத்து அதில் ஒன்றை நாம் செலக்ட் செய்ய, அதற்கேற்றாற்போல கதை நகர்கிறது. கிண்டர் கார்டன் புத்தகங்களில் வரும் கதை, ஏற்கெனவே பலமுறை பார்த்து சலித்த பியர் க்ரில்ஸ் பரிசோதனை முயற்சிகள் போன்றவை படத்தை போரடிக்க வைக்கின்றன. குழந்தைகளுக்கென ஒரு குவிஸ் ரகப் படம் வேண்டும் என்பவர்கள் ஸ்ட்ரீம் செய்யலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Run Netflix - Movie

படங்கள் குவிந்துகிடக்கும் நெட்ஃப்ளிக்ஸில் சமீபத்தில் வந்த நல்ல த்ரில்லர் படங்களுள் ஒன்று இது. மாற்றுத்திறனாளி மகளைக் கண்ணும் கருத்துமாய் ஊர் மெச்சப் பார்த்துக்கொள்கிறார் அம்மா. மகள் கல்லூரி செல்லும் காலம் வர, அவரை வழியனுப்பவும் தயாராகிறார். பாசக்கதையில் என்ன த்ரில்லர் என்கிறீர்களா? அதில்தான் மெல்லிய கோடு கிழித்துக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியிருக்கிறார் இயக்குநர் அனீஷ் சகண்டி. பெரும் வரவேற்பு பெற்ற 'Searching' படத்தை எடுத்த இயக்குநர். அம்மா - மகள் என இரண்டே கேரக்டர்களை வைத்து ஒன்றரை மணி நேர விறுவிறு த்ரில்லரில் இதயத்துடிப்பை எகிற வைக்கிறார். த்ரில்லர்/ஹாரர் ஜானர்களுக்கான நடிகையாகவே வலம்வரும் சாரா பால்சன் ஒருபுறம் மிரட்ட, மறுபுறம் தன் முதல் படத்திலேயே ஸ்கோர் செய்கிறார் கெய்ரா ஆலன். மாற்றுத்திறனாளி வேடத்தில் ஒரு நிஜ மாற்றுத்திறனாளியையே நடிக்கவைத்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றமாய்ப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது இப்போது. த்ரில்லர் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம்.