சினிமா
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

காதலியுடன் இரவைக் கழித்துவிட்டு, தன் வீட்டுக்குக் கிளம்பும் ஆப்ரோ அமெரிக்கரைத் தடுத்து நிறுத்துகிறார் வெள்ளை நிறக் காவலர்.

OTT கார்னர்

Thunder force

மெல்லிஸா மெக்கர்த்தியும், ஆக்டேவியா ஸ்பென்சரும் பள்ளிப்பருவத் தோழிகள். உலகை அழிக்கக் காத்திருக்கும் வில்லன்களைப் பழிவாங்கப் புது மருந்து ஒன்றைக் கண்டுபிடிக்கிறார் 30 வயது ஆக்டேவியா ஸ்பென்சர். அதில், வழக்கம்போல் விளையாட்டாய் மெல்லிசா மெக்கர்த்தி உட்கார்ந்துவிட, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் Netflix-ல் வெளியாகியிருக்கும் Thunder Force. மெல்லிஸா மெக்கர்த்தியின் கணவர் பென் ஃபேல்கன் மெக்கர்த்தியை வைத்து இயக்கும் ஐந்தாவது படம் இது. அவர் மொத்தமே ஐந்து படங்கள்தான் இயக்கியிருக்கிறார் என்பது தனிக்கதை. வித்தியாச வில்லன்களும், சூப்பர்வுமன்களும்தான் கதைக்களம் என்றானபின் இன்னும் சற்று காமெடிக் காட்சிகளாவது யோசித்திருக்கலாம். நெட்ஃபிளிக்ஸ் படம்தானே என மூளைச் செயலாக்கத்தை நிறுத்திவிட்டார்கள் போலும். சின்னப் படம், சின்னச் சின்ன காமெடிகள் என்கிற அளவோடு முடிந்துவிடுகிறது தண்டர் ஃபோர்ஸ்.

OTT கார்னர்
OTT கார்னர்

Two distant strangers

காதலியுடன் இரவைக் கழித்துவிட்டு, தன் வீட்டுக்குக் கிளம்பும் ஆப்ரோ அமெரிக்கரைத் தடுத்து நிறுத்துகிறார் வெள்ளை நிறக் காவலர். பதற்றப்படும் அவரைக் கழுத்தில் அழுத்திக் கொலை செய்கிறார் அந்தக் காவல்துறை அதிகாரி. கனவிலிருந்து விழிக்கிறார் அந்த ஆப்ரோ அமெரிக்க இளைஞர். இப்படியாகத் தொடர்ந்து வெவ்வேறு கனவுகள். எப்படித் தப்பிக்க ஆசைப்பட்டாலும், ஆப்ரோ அமெரிக்கரின் உயிர் அந்த வெள்ளை நிறக் காவல் அதிகாரியின் சட்டைப் பைக்குள் வந்துவிடுகிறது. இந்த ஆண்டு ஆஸ்கருக்குத் தேர்வாகியிருக்கும் இந்த 30 நிமிடக் குறும்படம் பார்க்கும் அனைவரையும் ஒரு கணம் நிலைகுலையச் செய்துவிடும். Travon Free எழுதி இயக்கியிருக்கும் இந்தக் குறும்படத்தில் முதல் கொலை நமக்கு 2014-ல் நடந்த எரிக் கார்னரின் கொலையையும், சமீபத்தில் நிகழ்ந்த ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலையையும் நினைவுபடுத்துகிறது. படத்தின் இறுதியில் ஆப்ரோ அமெரிக்க இளைஞர் சொல்லும் ‘எப்படியும் நான் என் இருப்பிடத்துக்கு, என் செல்ல நாயைப் பார்க்கச் செல்ல வேண்டும். அதனால், எத்தனை முறை என்றாலும், மீண்டும் மீண்டும் முயற்சிகளைத் தொடர்வேன்’ என்ற வரிகளில்தான் அவ்வளவு நம்பிக்கை. ஆனால், ஏன் ஒவ்வொருமுறையும் ஒடுக்கப்பட்டவர்களே போராட வேண்டும், ஆதிக்கவெறி பிடித்தவர்களின் மனச்சாட்சி எப்போது செயல்பட ஆரம்பிக்கும் என்பதற்கு குறும்படத்தில் எந்தப் பதிலும் இல்லை. ஆனால், அரை மணி நேரத்தில், நமக்கு எது சரி, தவறு எனக் காட்டி பொட்டில் அடிக்கிறது Two distant strangers

OTT கார்னர்
OTT கார்னர்

The Falcon and the Winter Soldier

‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் கதாபாத்திரங்களை வைத்து பல்வேறு மினிசீரிஸை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மார்வெல். அதன்படி ஏற்கெனவே வாண்டாவிஷனை வெளியிட்ட கையோடு தற்போது The Falcon and the Winter Soldier என இரு சூப்பர் ஹீரோக்களைக் கையிலெடுத்திருக்கிறது. அவெஞ்சர்ஸ் எண்டு கேம் முடிந்ததும், ‘போங்கய்யா நீங்களும் உங்க க்யூபும்’ என ஷீல்டைத் திருப்பிக்கொடுத்துவிட்டுக் கிளம்பிவிடுகிறார் ஸ்டீவ் ரோஜர்ஸ். இந்தத் தட்டை யாரிடமாவது கொடுக்க வேண்டுமே என ஒருவரிடம் கொடுக்க நடக்கும் பிரச்னைகள் ஒருபுறம், இன்னொரு புறம் ஃபேல்கனும், விண்டர் சோல்ஜரும் சூப்பர் சோல்ஜர்ஸ் பக்கம் எழும் பிரச்னைகளை சரி செய்கிறார்கள். ஆறு எபிசோடுகளில் ஒரு பெரிய மார்வெல் படத்தைப் பார்த்த அனுபவத்தைத் தருகிறது இந்த மினி சீரிஸ்.

OTT கார்னர்
OTT கார்னர்

Night in paradise

வன்முறையும் ரத்த ஆறும் தாராளமாய் ஓடும் தென்கொரிய சினிமா வட்டாரத்தின் லேட்டஸ்ட் வரவு இந்தப் படம். இரண்டு மாபியா கும்பல்களுக்குள் கடுமையான மோதல். ஹீரோ பார்க் டே கூ அதில் ஒரு கும்பலின் தளபதி. எதிரி குழுத் தலைவரை பார்க் கொலை செய்ய முயல, நூலிழையில் தப்பித்துவிடுகிறார் அவர். பழிக்குப் பழியாக ஹீரோவின் நண்பர்கள் வேட்டையாடப்படுகின்றனர். ஒருகட்டத்தில் பார்க்கின் முதலாளியே அவரை மாட்டிவிட்டுவிட்டு தன்னுயிரைக் காப்பாற்றிக்கொள்கிறார். ஒருபக்கம் துரோகி, மறுபக்கம் எதிரி என இருவரையும் ஹீரோ சமாளிப்பதுதான் கதை. நம்மூர் ‘வடசென்னை’ கதைதான். அதை குருதி தெறிக்க, உடல்பாகங்கள் சிதற கொரிய சினிமாவுக்கே உரிய ஸ்டைலில் விறுவிறுவெனச் சொல்கிறது படம். வெகு சுலபமாக யூகிக்க முடிந்த ட்விஸ்ட்கள்தான் படத்தின் பெரிய மைனஸ். ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு நல்ல டைம்பாஸ் இந்தப் படம்.

OTT கார்னர்