சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்தால், ஆட்சிக் காலம் முடியும் வரை காத்திராமல், அப்போதே மக்கள் அவர்களைப் பதவியிலிருந்து விலக்கித் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்

OTT கார்னர்
OTT கார்னர்

The soul

கொரியப் படங்களின் சாயலில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள தைவான் நாட்டுத் திரைப்படம் `தி சோல்.’ 2031-ல் நடக்கிறது கதை. பெருந்தொழிலதிபரான வாங் தன் வீட்டில் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். ‘மாந்திரீகத்தில் நம்பிக்கை கொண்ட வாங்கின் மகன்தான் கொலை செய்தார்’ என சாட்சியளிக்கிறார் வாங்கின் இரண்டாவது மனைவி. வாங்கின் மகனும் குற்றத்தை ஒப்புக்கொள்கிறார். அவ்வளவுதானே, படம் முடிஞ்சது என நினைக்கிறீர்களா? இல்லை. இந்த வழக்கை விசாரிக்கும் ஹீரோவுக்கு ஏதோவொன்று நெருடுகிறது. அவர் மட்டும் விடாப்பிடியாய் ஆழமாக இறங்கி அலச, ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் என விரிந்து இறுதியாய், கொலை செய்தது யார் என்கிற விடை கிடைக்கிறது. மாந்திரீகம், சயின்ஸ் பிக்‌ஷன் ஆகிய இரண்டு நேரெதிர்ப் புள்ளிகளையும் கோக்க முனைந்ததில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கிறது இந்தப்படம். அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகள் ஒன்றிரண்டு இருப்பதால் பெரியவர்கள் மட்டுமே பார்க்கவும்.

OTT கார்னர்
OTT கார்னர்

The Mitchells vs The Machines

இதுவும் நெட்ஃபிளிக்ஸ் படம்தான். திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று நினைக்கும் கேட்டி மிச்செலுக்கும் அவள் தந்தைக்கும் முட்டல் மோதல். டெக்னாலஜியில் புகுந்து விளையாடும் கேட்டிக்கு திரைப்படக் கல்லூரி ஒன்றில் வாய்ப்பு கிடைக்கிறது. கல்லூரியில் சேரும்போது அவள் மகிழும்விதமாக, அவளின் தம்பி, அம்மா, அப்பா, வீட்டு நாய்க்குட்டி என எல்லோருமே காரில் ரோடு ட்ரிப் கிளம்புகின்றனர். அப்போது டெக் ஜாம்பவான் ஒருவரால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்று மனிதர்களற்ற ஓர் உலகை உருவாக்கச் சண்டை செய்கின்றன. அதிலிருந்து தப்பிக்கும் கேட்டி குடும்பம், உலகை எப்படிக் காத்தது, தந்தை - மகள் உறவு என்னவானது என்பதுதான் ஒன்லைன். தொடக்கம் முதல் முடிவுவரை காமெடி, இடையிடையில் சென்டிமென்ட் என ஒரு பக்கா என்டர்டெயினர் இந்தப் படம். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸாக ஆங்காங்கே சேர்க்கப்பட்டிருக்கும் ஓவியங்கள், நல்ல கதை சொல்லும் யுக்தி. கேட்டி எடுக்கும் ஒவ்வொரு குறும்படமும், அதற்கான டெக்னிக்கும் பக்கா மாஸ்! டைனோசர்களை விரும்பும் கேட்டியின் தம்பி, அப்பாவி வளர்ப்பு நாய், குழப்பத்தில் சுற்றும் இரண்டு ரோபோக்கள் என எல்லாப் பாத்திரங்களும் தனித்தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. டெக் ஜாம்பவான் பெயர் மார்க் என்பதும் அவரின் நிறுவனமான ‘Pal’-ன் லோகோ அமேசானை நினைவுபடுத்துவதும் ரசிக்கவைக்கும் சமகால பகடிகள். பெரியவர்களும் பார்க்கவேண்டிய குறை ஏதுமற்ற குழந்தைகள் சினிமா இது!

OTT கார்னர்
OTT கார்னர்

Without Remorse

ஆக்‌ஷன் கதைகளுக்குப் பேர்போன டாம் க்ளான்ஸியின் நாவலை மையமாக வைத்து அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள படம். ‘உலகின் செக்ஸியான ஆண்’ என கடந்த ஆண்டு டைம் இதழ் வர்ணித்த மைக்கேல் பி.ஜோர்டன் தான் ஹீரோ. சிரியாவில் ஹீரோ தலைமையிலான நேவி சீல் குழுவினர், கடத்தப்பட்ட அமெரிக்க நபரை மீட்கிறார்கள். மீட்கப்பட்டு நாடு வந்து சேர்ந்து கொஞ்ச நாள்களிலேயே குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் கொல்லப்படுகிறார்கள். ஹீரோவும் தன் மனைவியை இழக்கிறார். இதற்குக் காரணமானவர்களைப் பழிவாங்கப் புயலாய் அவர் புறப்பட, கதை எங்கெங்கோ சுற்றி இறுதிப்புள்ளியை அடைகிறது. ஏற்கெனவே பல நூறு முறை பார்த்துப் பழக்கப்பட்ட மிலிட்டரி கதை என்பதால் மைக்கேலின் நடிப்பையும் சில ஆக்‌ஷன் காட்சிகளையும் தாண்டி படத்தில் புதிதாக ஒன்றுமில்லை. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக இந்தப் படத்தை எடுக்க பேச்சுகள் நடந்து இப்போது வெளிவந்ததற்கு நியாயம் சேர்க்கவில்லை படம்.

OTT கார்னர்
OTT கார்னர்

One

மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்தால், ஆட்சிக் காலம் முடியும் வரை காத்திராமல், அப்போதே மக்கள் அவர்களைப் பதவியிலிருந்து விலக்கித் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் Right to Recall சட்டம் பற்றிப் பேசுகிறது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் One மலையாளத் திரைப்படம். சில மாநிலங்களில் பஞ்சாயத்து அளவில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டம்தான் Right to recall. ஆனால், அங்கும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் இப்படி ஒன்று இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை. பிரச்னைகளில் தொடர்ந்து சிக்கும் ஒரு குடும்பம், அதைக் காக்கும் முதல்வர், இன்னொரு பக்கம் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும், Right to recall சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும். காட்சிக்குக் காட்சி நடிப்பில் தன் இடம் உச்சாணிக் கொம்பு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் மம்மூட்டி. யதார்த்தமான காட்சிகளிலும் தன் நடிப்பால் மாஸ் கூட்டியிருக்கிறார். ஆனால் கதைக்குச் சம்பந்தமில்லாத மம்மூட்டியின் மறதி நோய், முதல்வரை மீறிச்செல்லும் புரியாத கட்டமைப்பு கொண்ட கட்சி, ‘முதல்வன்’ பட பாணியில் யதார்த்தத்தை மீறிய காட்சிகள் ஆகியவை பலவீனங்கள்; கதையும் திரைக்கதையும். மம்முட்டியின் நடிப்புக்காகவும், Right to Recall பற்றித் தெரிந்துகொள்ளவும் One நிச்சயம் பார்க்கலாம்.