சினிமா
Published:Updated:

OTT கார்னர்

tick, tick...BOOM!
பிரீமியம் ஸ்டோரி
News
tick, tick...BOOM!

காதல் திருமணங்களை இந்தியச் சமூகம் எந்த அளவிற்குப் பிற்போக்கு மனநிலையோடு கொடூரமாக அணுகுகிறது என்பதைப் பேசும் Zee5 படம் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

TURNING RED - MOVIE

தன் தாயின் கண்காணிப்பில் வளரும் 13 வயதுப் பெண்ணான மெய்க்கு நிறைய ஆசைகள். பதின் பருவ வயது சீண்டச் சொல்லும் விஷயங்களையும் ஒரு கை பார்க்க வேண்டும், இன்னொரு பக்கம் அம்மாப் பிள்ளையாகவும் வளர வேண்டும். இப்படியானதொரு இக்கட்டான சூழலில் மெய்க்கு எந்த உணர்ச்சிகள் பீறிட்டு எழுந்தாலும் சிவப்புப் பாண்டாவாக மாறிவிடுகிறார். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே மனிதரூபம் புக முடியும். ஆசிய முகம் கொண்ட மெய், அவளின் வாழ்க்கை அனுபவங்கள், அவளின் ஆசைகள் என அமெரிக்காவில் இருக்கும் வேற்றுமொழி மக்களின் பார்வையில் விரிகிறது கதை. அடுத்து என்ன நடக்கிறது என்பதை எமோஷனலாக எடுத்து அப்ளாஸ் அள்ளியிருக்கிறார் அறிமுக இயக்குநர் டோமி ஷீ. பிக்ஸர் திரைப்படம் ஒன்றை ஒரு பெண் முழுமையாக இயக்குவது இதுவே முதல் முறை. ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் இந்த ஃபேன்டஸி திரைப்படத்தை குழந்தைகளும் பெற்றோர்களும் பார்க்கலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

tick, tick...BOOM! - MOVIE

மறைந்த அமெரிக்க இசையமைப்பாளரும் பாடகரும் நாடக ஆசிரியருமான ஜோனதன் லார்ஸன் தன் வாழ்வு குறித்துப் படைத்த இசை நாடகத்தை நெட்ப்ளிக்ஸ் அதே பெயரில் மியூசிக்கல் டிராமாவாக மாற்றியிருக்கிறது. 35 வயதில் மரணமடைந்த ஜோனதன் எனும் ஜான், இசையமைப்பாளராக முயன்றுகொண்டிருந்தபோது சந்தித்த கஷ்டங்களையும், அவரின் நட்பு, காதல் எபிசோடுகளையும் இரண்டு மணிநேரப் படமாக உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்கள் இயக்குநர் லின்-மேனுவேல் மிராண்டாவும், திரைக்கதை எழுதிய ஸ்டீவன் லெவன்சனும். ஜானாக நடித்திருக்கும் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட், பாடல் வரிகளை எழுத முடியாமல் தவிக்கும்போது வெளிப்படுத்தும் முகபாவங்கள், நண்பனின் நிலையை அறிந்து உடைந்துபோகும் தருணம், காதலியுடனான வாக்குவாதம் என எல்லாவற்றிலும் தன் இயல்பான நடிப்பின் மூலம் கண்கலங்க வைக்கிறார். அனைத்துப் பாடல்களையும் அவரே பாடி நடித்திருப்பதும் இந்த மியூசிக்கல் படத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்கிறது.

OTT கார்னர்
OTT கார்னர்

Love hostel - MOVIE

காதல் திருமணங்களை இந்தியச் சமூகம் எந்த அளவிற்குப் பிற்போக்கு மனநிலையோடு கொடூரமாக அணுகுகிறது என்பதைப் பேசும் Zee5 படம் இது. விக்ராந்த் மாஸியும் சான்யா மல்ஹோத்ராவும் மத மறுப்புத் திருமணம் செய்துகொண்டு அரசிடம் தஞ்சம் புக, ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள். இவர்களின் திருமணத்தால் தான் சார்ந்திருக்கும் மதத்தின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது என நினைக்கும் மத அடிப்படைவாதி ஒருவன் இவர்களைக் கொல்லத் துரத்துகிறான். சினிமாக்கதை என்றெல்லாம் கடந்துபோக முடியாமல், மதவாதம் அச்சுறுத்தும் நிகழ்கால நடப்புகள் படம் பார்க்கும்போதே நம்மை பயமுறுத்துவதுதான் படத்தின் பலம். அதேசமயம் க்ளைமாக்ஸ், காதல் திருமணங்கள் குறித்த எதிர்மறை எண்ணங்களை விதைத்துவிடுமோ என்கிற நினைப்பும் தோன்றாமல் இல்லை. பாபி தியோலின் நடிப்பு படத்தின் பெரிய ப்ளஸ். த்ரில்லர் பட விரும்பிகள் தவறவிடக்கூடாத படம் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

Texas Chainsaw Massacre - MOVIE

Slasher ஜானர் படங்களில் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளாக சக்கைப்போடு போடும் பட சீரிஸ் இது. விமர்சனங்கள் முன்னபின்ன வந்தாலும் இந்த சீரிஸுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறைவதில்லை என்பதால் இப்போது நெட்ப்ளிக்ஸ் கையிலெடுத்திருக்கிறது. அத்துவானக் காட்டிலிருக்கும் ஆளரவமற்ற ஓர் ஊரைக் குத்தகைக்கு எடுத்து அதை பிசினஸ் நகரமாக்க முயல்கிறது ஒரு நண்பர்கள் குழு. அப்போது அந்த ஊரில் பல காலமாகத் தங்கியிருக்கும் ஒரு குடும்பத்தோடு பகை மூள, தொடங்குகிறது ரத்த வேட்டை. துள்ளத் துடிக்க அறுபடும் உடல் பாகங்கள், பொங்கி வழியும் ரத்தம் எனப் பல்லாண்டுகளாகத் தொடரும் பாரம்பரிய வன்முறைக்குக் குறைவே இல்லை. ஆனால் அது மட்டுமே போதும் எனக் கதையில் கவனமே செலுத்தாமல் ஒப்பேற்றியிருப்பதுதான் பிரச்னை. அமெச்சூரான Slasher படங்களே அதிகம் வரும் இந்தக் காலத்தில், மேக்கிங்கிற்காக இந்தப் படத்தை அந்த ஜானர் ரசிகர்கள் பார்க்கலாம்.