அலசல்
Published:Updated:

ஓடிடி Vs தியேட்டர்கள்... எப்போது போடுவார்கள் எண்ட் கார்டு?

தியேட்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
தியேட்டர்

ஒரு படத்தை எடுக்கும்போதே அது எந்த மீடியத்துக்கானது என்று முடிவு செய்துவிட்டாலே இப்படியான பிரச்னைகள் வராது

கொரோனா இரண்டாவது அலையில் மூடப்பட்ட சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு, 50 சதவிகிதப் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் சில புதிய படங்கள் ரிலீஸாகவிருக்கும் சூழலில், மீண்டும் தியேட்டர் அதிபர்களுக்கும் ஓடிடி தரப்பினருக்கும் இடையே பிரச்னை வெடித்திருக்கிறது. இரு தரப்பினரும் தங்கள் முடிவுகளில் பிடிவாதமாக இருப்பதால், இந்தப் பிரச்னைக்கு இதுவரை தீர்வு ஏற்படவில்லை.

கொரோனா முதல் அலை ஊரடங்கு, சுமார் ஆறு மாதங்கள் நீடித்தபோதுதான் ஓடிடி என்கிற தளம் பிரபலமானது. கடந்த ஆண்டு ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டபோது படங்களை ரிலீஸ் செய்வதில், தியேட்டர்கள் தரப்புக்கும் ஓடிடி தரப்புக்கும் பிரச்னை வெடித்தது. தற்போது இரண்டாம் அலை தளர்வுகள் நீக்கப்பட்டு, தியேட்டர்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை வெடித்துள்ளது.

ஓடிடி Vs தியேட்டர்கள்... எப்போது போடுவார்கள் எண்ட் கார்டு?

“ஒரு படத்தை எடுக்கும்போதே அது எந்த மீடியத்துக்கானது என்று முடிவு செய்துவிட்டாலே இப்படியான பிரச்னைகள் வராது” என்கிறார் ஓடிடி நிறுவனங்களுக்குப் படங்களைத் தேர்வு செய்துகொடுக்கும் தயாரிப்பாளர் தனஞ்செயன். “தியேட்டர்கள், சாட்டிலைட் சேனல்கள், ஓடிடி என அனைத்து மீடியமும் சர்வைவல் ஆக வேண்டும். அப்போதுதான் சினிமாதுறை ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம். ஓடிடி இருக்கும்போது எதற்காக தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டுவிடக் கூடாது. இதற்கு முதலில் படம் எடுப்பவர்களிடம் தெளிவு வேண்டும். பெரிய நடிகர்களின் மாஸ் படங்களை ஓடிடி-யில் வெளியிடுவது சரியானது அல்ல. அதற்கு தியேட்டர்கள்தான் சரியான சாய்ஸ். குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்களும் பொதுமக்களுமே அதை தியேட்டரில் உற்சாகமாகப் பார்ப்பதைத்தான் விரும்புவார்கள். அதேசமயம், நல்ல கதை அம்சம்கொண்ட சிறு பட்ஜெட் படங்களை ஓடிடி-க்காக எடுப்பதுதான் சரியான சாய்ஸ். ஆனால், தியேட்டர் ப்ளஸ் ஓடிடி என இரண்டு தளங்களுக்குமான படங்கள் என்றால் அதற்கான கால இடைவெளி அவசியம். தியேட்டரில் வெளியாகும் படங்கள், இரண்டு வாரங்களில் ஓடிடி-யில் வெளியாகிவிடுமென்றால் எதற்காக மக்கள் செலவு செய்து தியேட்டருக்குச் செல்ல வேண்டும்? அதனால், தியேட்டர் அதிபர்கள் கேட்கும் நான்கு வாரங்கள் இடைவெளி என்பது நியாயமான கோரிக்கைதான்” என்றார்.

தனஞ்செயன், சுப்ரமணியன், நபில்
தனஞ்செயன், சுப்ரமணியன், நபில்

“தியேட்டரில் ரிலீஸ் செய்யும் படங்களை நான்கு வாரங்கள் கழித்துத்தான் ஓடிடி வெளியிட வேண்டும்” என்கிற முடிவில் உறுதியாக இருக்கிறார் தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன். “எங்களுக்குப் பெரிய படம், சிறிய படம் என்றெல்லாம் வித்தியாசம் இல்லை. ஒரு படத்தை ஓடிடி-யில் வீட்டுக்கு வீடு போட்டுக்காட்டிவிட்டு, பிறகு அதை தியேட்டரில் ரிலீஸ் செய்தால் எப்படி ஓடும்? முதல் ஊரடங்கின்போது சஞ்சய்தத் நடித்த ‘லஷ்மி பாம்’ ஓடிடி-யில் வெளியானது. பிறகு மும்பையில் தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் அந்தப் படத்தைத் திரையிட்டனர். ஆனால், சுத்தமாக ஓடவில்லை. அதேநிலைதான் இங்கும் ஏற்படும். இப்போது சூர்யா தனது ‘சூரரைப் போற்று’ படத்தை தியேட்டரில் வெளியிடக் கேட்கிறார். என்னதான் சூர்யாவுக்கு ரசிகர் பலமிருந்தாலும் தியேட்டரில் ஒரு நாள் மட்டுமே ரசிகர் கூட்டம் வரும். மீதி நாள்களில் என்ன செய்வது?

ஓடிடி-க்கு ரிலீஸ் செய்யும் வகையிலான படங்களை ஓடிடி-க்கே கொடுங்கள். அதில் நாங்கள் தலையிடவில்லை. அதேபோல், தியேட்டருக்காகத் தயாரிக்கப்படும் படங்களைத் தியேட்டருக்குக் கொடுங்கள். அதேசமயம், தியேட்டரில் வெளியான படங்களை ஓடிடி-க்கு கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. நான்கு வாரங்கள் கழித்துக் கொடுங்கள் என்றுதான் சொல்கிறோம். அகில இந்திய அளவில் தியேட்டர் அதிபர்கள் கூடிப் பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இதுதான் எங்களது இறுதி முடிவு.

இந்த விவாகரத்தை முன்வைத்து டிக்கெட் விலையைக் குறைக்கலாமே என்று சிலர் கேட்கிறார்கள். டெல்லி, மும்பை, பெங்களூரு இங்கெல்லாம் 500 முதல் 900 ரூபாய் வரை டிக்கெட் விற்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும்தான் மிகக்குறைந்த விலை. இவ்வளவுக்கும் மின்சாரம், ஊழியர்கள் சம்பளம், பராமரிப்பு என மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு மாதம் 40 லட்ச ரூபாய் செலவாகிறது” என்றார் ஆதங்கத்துடன்.

ஓடிடி Vs தியேட்டர்கள்... எப்போது போடுவார்கள் எண்ட் கார்டு?

தியேட்டர் அதிபர்கள் தரப்பின் இந்தக் கருத்தை முற்றிலுமாக மறுக்கிறார் ஓடிடி தளத்தில் இயங்கிவரும் கதாசிரியர் நபில். “தியேட்டர் திறக்கப்பட்டிருந்தபோது நாங்கள் ஓடிடி-க்கு சென்றிருந்தால் அவர்கள் சொல்வது நியாயம். ஊரடங்குக்குப் பிறகு இப்போதுதான் தியேட்டர்களைத் திறந்திருக்கிறார்கள். அவை 100 சதவிகிதப் பார்வையாளர்களுடன் பழைய நிலையை அடைய மூன்று மாதங்களாகும். அதுவரை என்ன செய்வது... அடுத்து மூன்றாவது அலை வந்தால் தியேட்டர்கள் மீண்டும் மூடப்படும். அப்போதும் ஓடிடி-க்குச் செல்லாமல், தியேட்டர்கள் திறக்கும்வரை காத்திருக்க வேண்டுமா? தியேட்டரில் படம் ரிலீஸாகி இத்தனை நாள் கழித்துத்தான் ஓடிடி-யில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையைப் போடுவது நியாயம் இல்லை. ஏற்கெனவே தியேட்டர்களிலிருந்து தினசரி டிக்கெட் விற்பனை ரிப்போர்ட் தயாரிப்பாளர்களுக்குக் கிடைப்பதேயில்லை. இதுவும் சிலரை ஓடிடி பக்கம் தள்ளுகிறது. ஆந்திரா, கேரளா போல என்று தமிழகத்தில் எப்போது தியேட்டர்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகின்றனவோ அன்றுதான் தமிழ் சினிமாவுக்கு விடிவுகாலம் பிறக்கும்” என்றார்.

இதையே ஒரு சினிமாவாக எடுக்கலாம்போல!